முகப்பு
செய்திகள்

'எலக்சன்’ வெற்றியா? - திரைவிமர்சனம்

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விஜய் குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள எலக்சன் திரைப்படத்தின் திரைவிமர்சனம்.

Updated On : 17 மே, 2024 at 3:52 PM
பகிர்:
Updated On : 17 மே, 2024 at 2:16 PM

பிரபல கட்சி ஒன்றின் ’நல்ல’ தொண்டனாக, பதவிகளுக்கு ஆசைப்படாமல் தன் வாழ்க்கையைக் கடத்திவருகிறார் ஜார்ஜ் மரியன். அவருக்கு அக்கட்சியால் நேரும் அவமானத்தை துடைக்க அவரது மகன் ’உறியடி’ விஜய் பஞ்சாயத்து தலைவராக நினைக்கிறார். தேர்தலில் போட்டியிடும் அவர் என்னென்ன பிரச்னைகளுக்கு உள்ளாகிறார், தேர்தலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே எலெக்சன் படத்தின் கதைக்களம் எனலாம்.

படத்திற்கான களத்தை இயக்குநர் அழகாக உருவாக்கி, அதில் கதாபாத்திரங்களை சரியாக பொருத்தியிருக்கிறார். படத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் குழப்பமில்லாமல் படம் நகர்கிறது. அப்பா மகனாக ஜார்ஜ் மரியன், விஜய் குமார் நடிப்பதற்கு நிறைய இடங்களை உருவாக்கித் தந்துள்ளார்.

இதுவரை அரசியல் படம் என்றாலே மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இடையேயான கதைகளே அதிகமாக படமாக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிக்காக உழைக்கும் தொண்டன் தலைவனாகப் போராடுவதை திரையில் காட்ட நினைத்தது பாராட்டுதலுக்குரியது.

Advertisement

திலீபன், விஜய் குமார், பிரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்து படத்தை நகர்த்த உதவியுள்ளனர். எனினும் சரியாக அமையாத காட்சிகளில் அதிகமான அல்லது குறைவான நடிப்பைக் கொடுக்கவேண்டிய சிக்கலில் மாட்டிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் தமிழ் எழுதி இயக்கியுள்ளார். அவரோடு சேர்ந்து விஜய் குமார், எழுத்தாளர் அழகிய பெரியவன் உள்ளிட்டோர் வசனம் எழுதியுள்ளனர்.

ஒரு நல்ல திரைப்படம் படத்தை தொந்தரவு செய்யாத ஒளியமைப்பையும், இசையையும், நடிப்பையும், எடிட்டிங்கையும் கொண்டிருக்க வேண்டும். இந்த படம் இவையனைத்திலும் பாஸ் மார்க் வாங்கியிருந்தாலும், திரைக்கதைதான் கைவிட்டிருக்கிறது. அரசியல் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்பதை படத்தின் கதை சொல்ல முயல்கிறது என்றாலும், திரைக்கதையில் திணறுகிறது.

கதாப்பாத்திரங்களோடு பயணிக்க முடியாமல், அடுத்தடுத்து வேகமெடுக்கும் சீன்களால் படம் பார்வையாளர்களிடமிருந்து தள்ளியே நிற்கிறது. முதல்பாதியில் ஒன்றோடு ஒன்று ஒட்டாத காட்சிகள் எழுத்தில் தேரவேண்டியிருப்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன.

அரசியலில் ஆர்வத்துடனும் பிடிப்புடனும் இருக்கும் தந்தையின் அரசியல் வாழ்க்கையை காட்டவேண்டிய அளவுக்கு காட்டாதது, அப்பாவுக்காக ஹீரோ தேர்தலில் நிற்க முடிவு செய்யும் தருணத்தை டம்மியாக்கிவிடுகிறது. மாடுபோல் உழைக்கும் ஒரு தொண்டன் தலைவனாகக் கூடாதா என பேசும் வசனங்களில் மட்டுமே அந்த வலியைக் கடத்த முயன்றிருப்பது நினைத்த அளவுக்கு கை கொடுக்காதது மற்றொரு ஏமாற்றம்.

படம் துவங்கியதிலிருந்து இடைவேளை வரை வரிசை கட்டி நிற்கும் பாடல்கள் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் இந்தப் படத்தில் அறிமுக இசையமைப்பாளர் போல் நடித்துள்ளது குழப்பமளிக்கிறது.

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமான காதல் தருணங்களில் இருக்க வேண்டிய ’மேஜிக்’ பற்றாக்குறையாக உள்ளது. தூரத்தில் எதையோ காட்டுவது, முத்தங்களைப் பரிமாறிக்கொள்வது போன்ற பழைய காட்சிகளை மட்டுமே காதலுக்கு காணிக்கை செய்திருப்பதால் சோகமான சீன்களில் ஹீரோவுக்காக பரிதாபப்பட முடியவில்லை.

ஆங்காங்கே சமூக நீதி பேச நினைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. எனினும் அந்த காட்சிகளும் எதார்த்தமில்லாமல் காட்டப்பட்டிருப்பதால் போதுமான தாக்கத்தைக் கொடுக்க தவறுகிறது.

மொத்தத்தில் எலெக்சன் திரைப்படம் நல்ல கருத்தோடு, நல்ல கதைக்களத்தோடு எழுத்திற்கு கவனம் தந்திருக்க வேண்டிய, மேக்கிங்கில் தேர்ந்திருக்க வேண்டிய நல்ல படமாக வெற்றியடைய முயல்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.