தேரே இஷ்க் மேவில் க்ரித்தியின் நடிப்பைக் குறித்து ரசிகர் ஒருவர் எழுதியது கவனம் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால், இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் அதிகரித்து வருகின்றன. தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தது. ஆனால், சரியான புரோமோஷன் இல்லாததால் தமிழில் அதிக திரைகளில் வெளியாகவில்லை.
இதுவரை இப்படம் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோனின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக விமர்சனங்களும் வருகின்றன.
முக்கியமாக, க்ரித்திக்கு நல்ல திரைப்படமாகவே தேரே இஷ்க் மே அமைந்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் க்ரித்தி நடிப்பைக் குறித்து ரசிகர் ஒருவர் பதிவொன்றை வெளியிட்டார்.
அதில், “முக்தியைப் (க்ரித்தி சனோன்) போன்றோர் சங்கரைப் போன்றோரின் விதியை எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பதற்காகவேனும் இப்படத்தைக் கண்டிப்பாக பாருங்கள். தனுஷ் கீர்த்தி சனோனிடம் தனது காதலைத் தெரிவிக்கும்போது அக்கணத்தில், முழு காட்சியும் ஒளியால் தொடப்பட்ட ஒரு காயம் போல திறக்கிறது. முதலில் நம்பிக்கையின்மை, நிழல் போல மிதந்து செல்லும் குற்ற உணர்வு, பின்னர் வலியுடன் மலரும் ரோஜாவைப் போல உதிக்கும் உண்மையுணர்வு என அவள் (முக்தி) முகம் உணர்வுகளின் ஒரு வேதமாக மாறுகிறது.
அமைதியாக இருக்க முயலும் இதயத்தை காதல் உள்ளிருந்து தாக்கும் போது உருவாகும் அதிர்வின் காரணமாக அவள் கீழ் உதடு மெதுவாக நடுங்குகிறது. அந்த நடுக்கத்தில், அவள் வெறும் அழகியாக மட்டுமல்லாமல் மனிதநேயமே நெகிழ்ந்து கருணையாய் மாறியது போல தெரிகிறாள். துக்கத்திலிருந்து வாங்கிய கடன்போல் ஓர் அழகென அவள் தோன்றுகிறாள்.” என க்ரித்தி கதாபாத்திர நடிப்பை விரிவாக எழுதியிருந்தார்.
இதனைக் கண்ட க்ரித்தி சனோன் அந்த ரசிகரின் பதிவைப் பகிர்ந்த, “யப்பா.... மிக அழகான முறையில் முக்தியை விவரித்திருக்கிறீர்கள். அமைதியையும், பேச முடியாத உணர்ச்சியையும் நீங்கள் அவதானித்த வழியைக் கண்டு என்னுள் இருக்கும் நடிகை நடனமாடுகிறாள்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.