கெளரி தொடரில் நாயகியாக நடித்துவந்த நடிகை நந்தினி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதைப்போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், பெங்களூரு அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால், சக நடிகர்கள் பெங்களூரு விரைந்துள்ளனர்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கெளரி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை நந்தினி.
துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் சிறப்பான நடிப்பை வழங்கிவந்த நந்தினிக்கு தமிழில் ரசிகர் பட்டாளம் ஏராளம்.
தமிழில் முதல் தொடரிலேயே இரட்டைப் வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டவர் என சக நடிகர்களால் பாராட்டப்பட்டவர்.
கர்நாடக மாநிலம் கோட்டூரு பகுதியைச் சேர்ந்த நந்தினி, கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார்.
கன்னடத்தில் ஜூவா ஹூவாகிடி, சங்கர்ஷா, மதுமகளு, நீனாடே நா, ஆகிய தொடர்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இதனால் கன்னட ரசிகர்களிடையே பிரபலமான நந்தினி, கெளரி தொடரின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமானார்.
கெளரி தொடரின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதனால், பெங்களூருவில் தங்கியிருந்து படப்பிடிப்பில் நந்தினி பங்கேற்றுள்ளார். இந்நிலையில், அறையில் இறந்த நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகே விரிவான தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
தற்கொலைக்கு முன்பு, கெளரி தொடரின் படப்பிடிப்பில், நந்தினியின் பாத்திரம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்வதைப்போன்று படமாக்கப்பட்டுள்ளது.
திரையில் தற்கொலை செய்துகொண்டதைப்போன்று நடித்தவர், நிஜத்தில் தற்கொலை செய்துகொள்வார் என நினைக்கவில்லை என சக நடிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நந்தினியின் சமூக வலைதளப் பதிவில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.