சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து, திறமையான ஒரு நடிகர் மட்டுமல்ல; பாடகரும்கூட. பன்முகத் திறன் பெற்றிருந்த மு.க. முத்து, அரசியல் சூழலாலும் காலத்தின் கோலத்தாலும் நட்சத்திரமாக மின்ன முடியாமல் போனது.
கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் மு.க. முத்து. பிறந்தவுடனேயே, அவரது தாய் பத்மாவதி தன்னுடைய 20-வது வயதில் இறந்துவிட்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாகவே பார்க்கப்பட்ட மு.க. முத்துவைத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் கருணாநிதி. தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆர் பாணியில் நடிக்கத் தொடங்கியிருந்த மு.க. முத்துவுக்குக் குரல் வளமும் இனிமையாக இருந்ததால், பாடல்களும் பாடியிருந்தார்.
1970ஆம் ஆண்டில் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார் மு.க. முத்து. அவர் நடிப்பில், 1972 ஆம் ஆண்டு வெளியான முதல் படம் பிள்ளையோ பிள்ளை. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அவர் பல படங்களில் நடித்தார். பூக்காரி, சமையல்காரன் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவருக்கு மிகச் சிறந்த ஆண்டாக 1975 அமைந்திருந்தது. அந்த ஆண்டில் மட்டும் அணையா விளக்கு, நம்பிக்கை நட்சத்திரம், இங்கேயும் மனிதர்கள் என மூன்று படங்களில் நடித்து வெளியானது. 1977ஆம் ஆண்டு அவர் நடிப்பில் எல்லாம் அவளே என்ற படம் வெளியானது. இதுவே அவரது கடைசிப் படமாகவும் இருந்தது. அவர் நடித்த படங்களில் சில பாடல்களையும் அவர் பாடியிருந்தார்.
1971 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. திமுக தேர்தல் பிரசாரத்துக்காக, எம்ஜிஆர் போல முத்து பல பிரசார மேடைகளில் தோன்றினார். அப்போது, பிள்ளையோ பிள்ளை என்ற படம் அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானது. இதில், மு.க. முத்துவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமி நடித்திருந்தார்.
கதை, திரைக்கதை, உரையாடலை எழுதியிருந்தவர் மு. கருணாநிதி. கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இந்தப் படத்தில் மு.க. முத்து, எம்ஜிஆர் போலவே நடித்து, பாடல்களுக்கு நடனமாடி, சண்டைக் காட்சிகளிலும் நடித்திருப்பார். வழக்கமாக எம்ஜிஆருக்கு பாடல்களை எழுதும் வாலியை வைத்தே முத்துவுக்கும் பாடல்களை எழுத வைத்தார் கருணாநிதி.
வாலியின் எழுத்தில் உருவான 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ? நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ?' என்ற பாடல் மு.க. முத்துவுக்காக எழுதப்பட்டு, பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
இந்த படத்தின் தலைப்பும் கூட, 1965ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் தலைப்பை ஒட்டியே பிள்ளையோ பிள்ளை என்று பெயர் சூட்டப்பட்டதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இப்படியொரு பாடலைத் தனக்காக எழுதவில்லையே என்று வாலியிடம் எம்ஜிஆர் நேரடியாகவே செல்லமாகக் கோபித்துக் கொண்டதாக ஒரு நேர்காணலில் வாலி குறிப்பிட்டதாகக் கூறுவார்கள். அந்தப் பாடலின் புகழ் அந்தளவுக்கு இருந்தது.
மு.க. முத்து குரலில் வெளியாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல்களின் வரிசையில், சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க, நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா போன்ற பாடல்கள் குறிப்பிடத் தக்கவை.
"நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார். தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார்.
"என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
"வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க. முத்து" என்று நினைவுகூர்ந்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலை வாரிசாகவும், அரசியல் வாரிசாகவும் பார்க்கப்பட்ட மு.க. முத்துவுக்கு திரையுலகம் கைகொடுக்கவில்லை. கருணாநிதி - எம்ஜிஆர் பிரிவுக்கு, முத்துவை, திரையுலகில் அறிமுகப்படுத்தியதும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது. காலச்சூழல், கருத்து மோதல்கள், குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அவருடைய தந்தை உள்பட பலரும் எதிர்பார்த்த உயரத்தை எட்ட முடியாமலேயே சென்றுவிட்டார் மு.க. முத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.