தக் லைஃப் படப்பிடிப்பில்... 
செய்திகள்

வென்றதா நாயகன் கூட்டணி? தக் லைஃப் - திரை விமர்சனம்!

நடிகர் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் விமர்சனம்...

சிவசங்கர்

நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது.

தில்லியில் கதை ஆரம்பமாகிறது. வில்லன் ஒருவரிடம் சக வில்லன்களான கமல் ஹாசன் (ரங்கராய சக்திவேல்), நாசர், ஜோஜு ஜார்ஜ் பேச்சுவார்த்தையை முடித்ததும் அவர்களைச் சுடுவதற்கு காவல்துறையினர் அந்த குடியிருப்பைச் சுற்றி வளைக்கின்றனர். அதிலிருந்து, தப்பும் கமல் ஒரு சிறுவனையும் தன்னுடன் அழைத்து வருகிறார். சிறுவன் வளர்ந்து கமலுக்கு நம்பிக்கையான ஆளாக மாறுகிறார். அச்சிறுவன் நடிகர் சிலம்பரசன்.

டிரைலரிலேயே இதைக் காட்டிவிட்டார்களே வேறென்ன சுவாரஸ்யம் எனத் திரையையே பார்த்துக்கொண்டிருந்தால் அதிகாரத்தைக் கைப்பற்ற ரங்கராய சக்திவேலை சிம்பு எதிர்க்கிறார். இதுவும் டிரைலரில் தெரிந்ததுதானே? சரி, இப்படி வைத்துக்கொள்ளலாம். எவ்வளவு முறை கொல்ல முயற்சித்தாலும் மரணமடையாத கமல், தனக்கு துரோகம் செய்தவர்களைத் தேடி வந்து பழிவாங்குகிறார். இதற்கிடையே நடக்கும் காட்சிகளின் கோர்வைதான் தக் லைஃப் படத்தின் கதை.

நடிகர் கமல் ஹாசனும் மணிரத்னமும் நாயகன் திரைப்படத்திற்குப் பின் 33 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் படத்தில் இணைந்ததிலிருந்தே படத்தின்மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கேற்ப, கடுமையான புரமோஷன்கள், பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு என ரசிகர்கள் மிக ஆவலுடன் படத்திற்குக் காத்திருந்தனர். அந்தக் காத்திருத்தலுக்கு நல்ல தீனி கிடைத்ததா?

முதல் காட்சியிலேயே கமல் தான் யார் என்பதை சொல்லும்போதே ’ஆஹா’ என ரசிகர்களிடம் உற்சாகம் தெரிகிறது. அதற்கேற்ப, 1994-ல் நடக்கும் காட்சிகளில் நடிகர் கமல் ஹாசனின் இளவயது தோற்றத்தை டீ-ஏஜிங் மூலம் அட்டகாசமாகத் திரைக்குக் கொண்டுவர, விசில் சத்தம் பறக்கிறது. அடுத்தடுத்து காட்சிகள் நகர, நாயகன் மாதிரி ஏதோ நல்ல சம்பவம் வரப்போகிறது என நினைத்தால்...

ம்ஹூம். இயக்குநர் மணிரத்னம் படமென்றால் கதையுடன் இணைந்த உணர்வுப்பூர்வமான காட்சிகள் எங்காவது நம்மை இழுக்கும். தக் லைஃப்-ல் அதரப்பழசான கதை, எமோஷன்ஸ் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. நாயகன் கொஞ்சம், செக்கச் சிவந்த வானம் கொஞ்சம் என கலக்கி அடித்திருக்கிறார். சில பிரேம்கள் தேறியதே தவிர ஒட்டுமொத்த படமும் எதை நோக்கிச் செல்கிறது என்பதில் கடுமையாகத் தடுமாறுகிறது. ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் எந்த தூண்டுதலும் இல்லாமல் வெறுமனே காட்சிகள் கடந்து செல்கின்றன.

அஞ்சு வண்ணப்பூவே எவ்வளவு அழகான உணர்ச்சிமிகு பாடல், அதை மோசமான எழுத்தால் மணிரத்னம் வீணடித்துவிட்டார். அண்ணன் - தங்கை பாசம், கணவன் - மனைவி பாசம் என எதிலுமே உணர்ச்சிகள் இல்லை. கார் துரத்தல் சண்டைக் காட்சிகளை எடுத்திருந்த விதம் நன்றாக இருந்தது. ஆனாலும், ஆக்‌ஷனுக்கான வலுவான காரணங்கள் எல்லாம் திரைக்கதை, வசனங்களால் பலத்தை இழக்கின்றன. குறிப்பிட்ட காட்சி ஒன்றில் தான் கர்ப்பமானதை அறிந்த பெண்ணை காதலன் நிராகரிக்கிறார். உடனே, அப்பெண் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்கிறார். அதில், கடுமையான செயற்கைத்தனம் வெளிப்படுகிறது. இதை மணிரத்னம்தான் எழுதினாரா என்கிற அளவு சந்தேகங்கள். நிறைய இடங்களில் லாஜிக் கேள்விகள் தோன்றுகின்றன.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், கதையை விவாதித்தாரா இல்லையா? நம்பகமான உலகிற்குள் உணர்ச்சிகள் நேர்த்தியாகக் கடத்தப்படும்போதே அதன் வெற்றி சாத்தியமாகும். எந்த இடத்திலும் காட்சிக்கான தருணங்களைச் சரிசெய்யாமல் வெறும் நடிப்பை மட்டும் வைத்து தப்பிக்கலாம் என நினைத்ததாலோ என்னவோ கமலின் நடிப்பு மட்டுமே இருக்கிறது. அழுத்தம் என எங்கும் உருவாகவில்லை.

சிம்புவுக்கு பெரிய ரசிகர்கள் படையே இருக்கும் நேரத்தில் தக் லைஃப்பில் சிக்கிக்கொண்டாரா என்றுதான் தோன்றுகிறது. அடியாளாக இருப்பவர் டான் ஆக மாறும்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சில சண்டைக் காட்சிகள் இருந்தாலும் அவை சிம்புவுக்கானதாக மட்டும் இல்லை. கிளைமேக்ஸில் கமலுடன் நன்றாக நடித்திருந்தார்.

நடிகர்கள் நாசர், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோரும் கதைக்கு ஏற்ப அவரவர் பங்களிப்பை குறையில்லாமல் செய்திருக்கின்றனர். முக்கியமாக, த்ரிஷா - கமல் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

நல்ல திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையைத் தாண்டி கூடுதலாக மகுடம் சேர்க்கும் விஷயம் இசை. இப்படத்திற்காக ஏ. ஆர். ரஹ்மான் சிறந்த பாடல்களை அளித்துள்ளார். ஆனால், அவையெல்லாம் வீணடிக்கப்பட்டதுபோல் இருக்கிறது. முக்கியமாக, இணையத்தில் வைரலான முத்த மழை மற்றும் விண்வெளி நாயகா பாடல்கள் படத்தில் இல்லை! இதற்குத்தான் நாங்கள் சின்மயி குரலா, தீ குரலா என சண்டையிட்டோமா என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் கார் துரத்தல் காட்சிகளைப் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்ததுடன் தில்லியின் நிலத்தை பதிவு செய்யும் முயற்சியிலும் வென்றிருக்கிறார்.

சாகா வரம்போல் சோகம் உண்டா? எனத் தன் படத்தில் கேட்ட கமல், தக் லைஃப்-ல் என்ன நடந்தாலும் தனக்கு மட்டும் சாவே வருவதில்லை என ஜாலியாக இருக்கிறார். படத்தில் கமலுக்கு உண்மையான வில்லன் எமன்தான். நாயகனில் கேட்கப்பட்ட நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்கிற கேள்விக்கு தக் லைஃபிலும் கமல் பதிலளிக்கவில்லை! மணிரத்னம் சிறந்த இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இப்படம் அவர் இயக்கிய படங்களிலேயே சுமாரானது என்றுதான் சொல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம்: எடப்பாடி பழனிசாமி

செல்வராகவனின் அடுத்த படம்!

“அண்ணாமலை சரியாகக் கையாண்டார்! நயினாருக்குத் தெரியவில்லை..!” டிடிவி தினகரன்

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய அரசு பள்ளி ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!

“2026ல் விஜய்யுடன் கூட்டணி? ஏன் அந்த கேள்வி கேக்குறீங்க?” டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT