ஆகாஷ் பாஸ்கரன்  
செய்திகள்

லைகாவை மிஞ்சிய முதலீடு... யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

தமிழில் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார் ஆகாஷ் பாஸ்கரன்.

சினிமாவில் தயாரிப்பாளராக முதலீடு செய்வது என்பது எப்போதும் லாபம் தரக்கூடியதாக அமைவதில்லை. ஒரு படம் கைகொடுத்தால் இன்னொரு படத்தில் இழக்க நேரிடும். இன்றைக்கு தமிழ் சினிமாவின் வணிகங்கள் குறித்து பல திரையரங்க உரிமையாளர்களுக்கே கடும் அதிருப்தி இருக்கிறது. ஆண்டிற்கு விரல்விட்டு எண்ணும் படங்களே விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்ற உரிமங்களைப் பெற்றவர்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கின்றன.

சூழல் இப்படியிருக்க, ஒருவர் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் என்றால் முதலில் ஒரு படத்தைத் தயாரித்து அதில் லாபம் பார்த்து, அடுத்தப் படத்தைத் தயாரிப்பதைத்தான் பல தயாரிப்பு நிறுவனங்கள் செய்துவருகின்றன.

ஆனால், கடந்தாண்டு டான் பிக்சர்ஸ் (dawn) விடியலைக் (சூரியன்) குறிக்கும் பெயரிடப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரன் நடிகர் தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தார்.

இதுதான் அவர் தயாரிக்கும் முதல் படம். இப்படம் இன்றுவரை வெளியாகவில்லை. இட்லி கடையின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ’பராசக்தி’ படத்தையும் தயாரிப்பதாக அறிவித்தார். இரண்டு படங்களும் பட்ஜெட் ரீதியாக பெரிய படங்கள். முக்கியமாக, பராசக்தி ரூ. 150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகிறது.

மேலும், அண்மையில் நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தையும் தயாரிப்பதாகத் தெரிவித்த ஆகாஷ் பாஸ்கரன் இதற்கிடையே தன் தயாரிப்பிலேயே நடிகர் அதர்வா நடிப்பில் ‘இதயம் முரளி’ என்கிற படத்தையும் இயக்கி வருகிறார்.

ஒரே நேரத்தில் 4 பெரிய பட்ஜெட் படங்களை ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருவதுதான் கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ் சினிமாத் தயாரிப்பு நிறுவனங்களிலேயே பெரிதாகக் கருதப்படும் லைகா நிறுவனம்கூட ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு படமாகவே தயாரித்தனர்.

ஆனால், தன் தயாரிப்பில் இன்னும் ஒருபடம் கூட வெளியாகாத நிலையில் எப்படி ஆகாஷ் பாஸ்கரனால் தொடர்ச்சியாகப் படங்களைத் தயாரிக்கவும் அதற்கான நிதிநெருக்கடிகள் வராமலும் பார்த்துக் கொள்ள முடிகிறது என்பதே முதன்மை கேள்வியாக நீடித்த நிலையில், அமலாக்கத்துறையினர் ஆகாஷ் வீட்டில் நேற்று (மே. 16) ’திடீர்’ சோதனையை நடத்தியுள்ளனர்.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

சேலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகனான ஆகாஷ் பாஸ்கரன் கல்லூரி படிப்பை முடித்ததும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் துணை இயக்குநராக ‘நானும் ரௌடிதான்’ படம் மூலம் அறிமுகமாகிறார். தொடர்ந்து, பாவக்கதைகள், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

சில மாதங்களுக்கு முன் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பிரபலங்களும் கலந்துகொண்டனர். பிரபல தொழிலதிபரும் கவின் கேர் நிறுவனருமான சி.கே. ரங்கநாதனின் மகள் தாரணி என்பவரையே ஆகாஷ் திருமணம் செய்துகொண்டார். தாரணியின் அம்மா தேன்மொழி மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பேத்தி ஆவார்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, அதர்வா என முக்கியமான நடிகர்களின் படங்களை ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் தயாரித்து வருவது சுலபமான விஷயமா என்ன?

சரியாக, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பிலிருந்து மெல்ல விலக ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் மூலம் திரைத்துறைக்கு வந்தது; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளானது உள்ளிட்டவை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

‘திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு’

SCROLL FOR NEXT