ரவி மோகன் குறித்து சமூக ஊடகங்களில் உள்ள அவதூறுப் பதிவுகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்று ரவி மோகன் வழக்குரைஞர் கார்த்திகை பாலன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளார். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் திருமண நிகழ்வில் ஒன்றாகக் கலந்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மனமுடைந்த ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு நானும் என் குழந்தைகளும் பாதிப்படைந்துள்ளோம் எனக் குறிப்பிட்டு ரவி மோகனின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாகச் சாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதனால் எழுந்த விமர்சனங்களுக்கு ரவி மோகன் 4 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி 5 பக்க அறிக்கையை வெளியிட்டார்.
அண்மைக்காலமாக இருவரும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி ரவி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தங்களுக்கு இடையிலான பிரச்னை பற்றி பொது வெளியில் அவதூறு கருத்துகளை வெளியிட நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு தடை விதித்தனர்.
மேலும், இவர்கள் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக உள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்று தெரிவித்து ரவி மோகன் வழக்குரைஞர் கார்த்திகை பாலன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ”இணையதள ஊடகங்கள், சமூக ஊடகங்கள், இணைய தளங்களில் நடிகர் ரவி மோகனைப் பற்றிய அனைத்து அவதூறான பதிவுகளையும் நீக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இதைக் கடைப்பிடிக்கத் தவறினால் அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வேண்டாம்... அமீர் கானின் தைரிய முயற்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.