அபிநய், விஜயலட்சுமி  
செய்திகள்

அபிநய் தனியாகக் குடித்துக் கொண்டிருப்பார்... விஜயலட்சுமி உருக்கமான பதிவு!

அபிநய் குறித்து விஜயலட்சுமி...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை விஜயலட்சுமி மறைந்த நடிகர் அபிநய் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் நேற்று (நவ. 10) சென்னையில் காலமானார். இவரது மறைவிற்குத் திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சென்னை 28 திரைப்படத்திற்குப் பின் நான் சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்தில் நடிகர் அபிநய்யுடன் இணைந்து நடித்தேன். அவர் அப்போது விளம்பர உலகில் நம். 1 இடத்தில் இருந்தார். கதைப்படி, புதிதாகத் திருமணமான தமிழ் இணைகளாக நடித்தோம். அதில், கல்யாணம் ஆனதும் அப்பெண் வட மாநிலம் சென்று அங்கு புரியாத மொழியால் வீட்டைப் பிரிந்த வருத்ததுடனும், கணவனுடன் விலகலுடனும் இருக்கிறாள். அப்படியான ஓரிரவில் ரேடியோவிலிருந்து பிரமாதமான தமிழ்ப்பாடல் ஒன்று ஒலிக்கும். அதைக் கேட்டு அப்பெண் உணர்வுப்பூர்வமாக உடைவாள். பின், கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். மிகவும் ஆத்மார்த்தமான விளம்பரம் அது.

அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பை தில்லியில் 4 நாள்கள் நடத்தினர். இப்போது இருக்கும் விஜயலட்சுமி அல்ல அப்போது இருந்தவள். அறிமுகமில்லாதவர்களைப் பார்த்தால் பயம், தனியாகச் செல்வதில் தயக்கம், கூச்ச சுபாவம் என்றிருந்தவள். தில்லியில் நான் தங்க அப்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டது.

அப்போது, திடீரென என் அறையில் தங்க இன்னொரு ஆணாக அபிநய் வந்தார். அப்போது, நான் ஃபெரோஸை (கணவர்) காதலித்துக்கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ஆணுடன் ஒரே அறையில் தனியாகத் தங்குவதை ஃபெரோஸிடம் சொல்லவில்லை. பதற்றத்துடன் அதை நான் கையாண்டேன்.

ஆனால், அபிநய்... என்ன ஒரு ஜெண்டில்மேன்! தொழில் ஒழுக்கம்கொண்ட நேர்த்தியான ஆள். ஒவ்வொரு ஃபிரேமிலும் தன் உழைப்பைப் போடுவார். படப்பிடிப்பு முடிந்து இரவு அப்பார்ட்மெண்ட் திரும்பும்போது நான் அறைக்குள் சென்றுவிடுவேன். ஆனால், அவர் வரவேற்பையில் தனியாக அமர்ந்துகொண்டு குடித்துக்கொண்டிருப்பார். அவர் அங்குதான் இருக்கிறாரா? என கதவைத் திறந்து பார்க்கும்போதெல்லாம் அங்கேயே அமைதியாக மதுவை அருந்தி, ஒரு முழு பாட்டிலையும் முடித்து, தன்னை மறந்து கிடப்பார்.

ஒரு இளம் நடிகர் இப்படித் தனியாக குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் மிகவும் கனமாக இருக்கும். அப்படியொரு நாள் இரவில், அவர் குடித்துக்கொண்டிருந்தபோது நான் அவரைப் பார்ததும், ‘குடிக்கிறாயா?’ எனக் கேட்டார். ‘பழக்கம் இல்லை’ என்றதும் ஜூஸ் குடி என்றார். அதற்குள் என்ன இருக்குமோ என்கிற எண்ணத்தில் வேண்டாம் என மறுத்துவிட்டு, கேட்கவே கூடாது என நினைத்த கேள்வியைக் கேட்டேன்.

”ஏன் இப்படி குடிக்கிறீங்க...? நீங்க நன்றாக உழைக்கும் இளம் வெற்றியாளர். ஏன் இந்தப் பழக்கம்?” என்றேன்.

அபிநய் தன் தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், தன் அம்மா, அழுத்தங்கள், வலிகள், தனிமை குறித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார்.

அவர் இதயத்திலிருந்து எல்லாம் வெளியேறட்டும் என நான் எதுவும் சொல்லாமல் கவனமாக முழுமையாகக் கேட்டேன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திலிருந்து விடைபெறும்போது, அபிநய் என்னிடம், “நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வலிகளைக் குறித்து இவ்வளவு கேட்டதில்லை. கடவுள் இப்படியும் சில பெண்களைப் படைக்கிறாரா? ஒருவேளை, உனக்கு இரட்டை (ட்வின்) சகோதரி இருந்தால் எனக்கு தெரியப்படுத்து” என்றார். நான் வெடித்துச் சிரித்து, அவரைக் கட்டியணைத்து வழியனுப்பினேன். அதுவே, நாங்கள் சந்தித்துக்கொண்ட கடைசி சந்திப்பு.

அதன்பின், இப்போது இறந்துவிட்டார் எனக் கேள்விப்படுகிறேன். எனக்கு அழுகை வருகிறது. ஆனால், இது வருத்ததிற்கு அல்ல... மகிழ்ச்சியாக அவருடைய போராட்டம் முடிவிற்கு வந்ததை நினைத்து.. இறுதியாக தன் அமைதியைக் கண்டடைந்துவிட்டார்.

நான் அமைதியாக இளைபாருங்கள் (rest in peace) எனச் சொல்ல மாட்டேன். ”சந்தோஷமாகக் கொண்டாடு, மச்சி” (party big, buddy) என்றுதான் சொல்வேன். ஏனென்றால், இம்முறை தன் வலிகளை நினைத்து அவர் குடிக்க மாட்டார். தன் விடுதலையை ருசித்துக் குடிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

விஜயலட்சுமியின் இப்பதிவு ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடமும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

actor vijayalakshmi posted about actor abhinay and his memories

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் ஒருநாள்: சதம் விளாசிய சல்மான் அகா; இலங்கைக்கு 300 ரன்கள் இலக்கு!

பிசி ஜுவல்லர் 2-வது காலாண்டு லாபம் 17% உயர்வு!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருவெற்றி? பிகார் வாக்குப்பதிவு கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தாத ஆர்ச்சர்..! ஆஷஸ் தொடரில் நிறைவேற்றுவாரா?

தில்லி கார் வெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ நிலையம் நாளையும் செயல்படாது!

SCROLL FOR NEXT