நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் மிகத் தேர்ந்த விமானியான ஷங்கர் (தனுஷ்) கட்டுக்கடங்காத கோபமும் யாருக்கும் அடங்காத குணமும் கொண்டவராக இருக்கிறார். அப்படியானவருக்கு மன ரீதியான ஆலோசனை வழங்குவதற்கு உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதற்காக, சிறந்த மனநல நிபுணருக்கு ஷங்கர் குறித்த விவரங்கள் அடங்கிய ரகசிய கோப்பு அனுப்பப்படுகிறது. அதைப் பார்க்கும் அந்த மருத்துவரான முக்தி (க்ரித்தி சனோன்) அவசர அவரசமாக ஷங்கரைக் காணச் செல்கிறார். அங்கு இருவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. உண்மையில், ஷங்கருக்கும் முக்திக்கும் என்ன உறவு இருந்தது? இருவரும் ஏன் ஒருவரை ஒருவர் கண்டு உடைகிறார்கள்? என்கிற கேள்விகளுக்கு காதல், வன்முறை பின்னணியில் பதில் சொல்கிற கதையாகவே தேரே இஷ்க் மே உருவாகியிருக்கிறது.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் - தனுஷ் கூட்டணியில் உருவான ராஞ்சனா (அம்பிகாபதி) திரைப்படத்திற்கு இன்றுவரை ரசிகர்கள் இருக்கின்றனர். காரணம், அப்படத்தில் பேசப்பட்ட ஒருதலை காதலின் உணர்வுகளும் வலிகளும் பலரின் வாழ்க்கையுடன் தொடர்பு செய்ய முடிந்தது. முக்கியமாக, ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்கள் கதைக்கு உயிராக அமைந்திருந்தன.
இக்கூட்டணி மீண்டும் ராஞ்சனா கதையைத் தொட்டு தேரே இஷ்க் மே திரைப்படத்தில் இணைவதாக அறிவிப்பு வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு அழுத்தமான உணர்ச்சிகளுடன் ஆனந்த் எல். ராய் ஓர் கதையைச் சொல்லியிருக்கிறார். மனிதனிடம் நீங்காத வன்முறை மட்டுமல்ல அன்பும் அவனுக்கு மிகப்பெரிய எதிரியே என்பதை தனுஷ் மற்றும் க்ரித்தி சனோனின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு இருவரும் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகளுடன் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனந்த் எல். ராய் ராஞ்சனாவில் என்ன கதையைச் சொன்னாரோ அதே கதையைக் கொஞ்சம் மாற்றி தேரே இஷ்க் மேயில் சொல்லியிருக்கிறார். காதல் என்றாலே வலிதான். அதிலும் ஒருதலைக் காதல் என்றால்? இவை இரண்டும் இப்படத்தில் பதிவாகியிருக்கின்றன.
காதலுக்காக ஏன் இவ்வளவு துயர்களை அனுபவிக்க வேண்டும்? இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் காதல் ஒன்றும் தெய்வீகமானது இல்லை. இருவரின் மனமும் இணைந்தால் இருக்கலாம்; இல்லையென்றால், மனமொத்து பிரியலாம்; தேவையென்றால், மீண்டும் இன்னொரு காதலைச் செய்யலாம். ஆனால், தேரே இஷ்க் மேயில் ஒரே ஒரு காதல்தான் என்கிற கதாபாத்திரத்தையும் அதை பெரிதாக நினைக்காத இன்னொரு கதாபாத்திரத்தையும் மோதவிட்டு ஒரு வெடிப்பை நிகழ்த்த முயன்றிருக்கிறது. அதற்கான, பதில் கதையில் இருந்தாலும் இவ்வளவு சிக்கலான ஓர் உறவை ஏன் கையாள வேண்டும் என்கிற கேள்விகளும் எழுகின்றன.
கதையைச் சொன்ன விதத்திலும் கதாபாத்திரங்களை எழுதிய விதத்திலும் இதன் முடிவு என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிந்தது சின்ன பலவீனம்.
நடிகர் தனுஷின் கடந்த சில திரைப்படங்களை ஒப்பிடும்போது இப்படத்தில் சிறப்பான நடிப்பையே கொடுத்திருக்கிறார். காதலிக்கத் துவங்கும் காலகட்டத்தில் வன்முறையான கல்லூரி இளைஞனாகவும் விமானப்படை வீரரான பின் அனுபவிக்கும் காதல் வலிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். இப்படத்தில் இவரும் க்ரித்தி சனோனும் முதன்முறையாகச் சந்திக்கும் காட்சியில் கண்கலங்க தன் முன்னாள் காதலியைப் பார்க்கும்போது தனுஷின் நடிப்புத் திறன் முகத்திலேயே வெளிப்படுகிறது.
க்ரித்தி சனோனுக்கு கண்டிப்பாக பெயர் சொல்லும் படமாகவே இது இருக்கும். காதலைப் புறக்கணிக்கும் காட்சிகளிலும் அதை சுமக்கும் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். மனவலியால் சிகரெட் புகைப்பதும், குடியை நாடுவதுமாக ஒருகட்டத்தில் க்ரித்தியின் கண்ணீர், இக்கதைக்கு சிறந்த பங்களிப்பையே செய்கிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் தனுஷின் தந்தையாக நல்ல நடிப்பு. தன் மகன் செய்த பிழைக்காக நாயகியின் தந்தையிடம் கெஞ்சுவதில் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
முதல் பாகத்தில் நகைச்சுவை, காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் காதலின் வலி என்ன என்கிற அழுத்தமாக வசனங்கள் உணர்வுப்பூர்வமாக மாறுகின்றன. விமானப்படை போர்க்காட்சிகளை எடுத்த விதமும் நன்றாக இருந்தன.
“காதலில் மரணம் மட்டும்தான் உள்ளது. மோட்சம் இல்லை” என்பது போன்ற பல வசனங்கள் பலமாகவே அமைந்துள்ளன. இப்படம் நேரடியாக ஹிந்தியில் உருவாகியிருந்தாலும் தமிழ் வசனங்களும் பாடல் வரிகளும் அழுத்தமாகவே இருப்பது படத்திற்கு பலமாகவே அமைந்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷும் க்ரித்தி சனோனும் பேசிக்கொள்ளும் காட்சி உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் கதையின் இன்னொரு நாயகனாக அசத்தியிருக்கிறார். பின்னணி இசையிலும் பாடல்களிலும் உணர்வுகளைத் தெளித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப்பாடலான உசே கேக்னா (usey kehna) பாடல் ஒலிக்கப்படும்போது சின்னச் சின்ன மரணங்களுக்குப் பெயர்தான் காதல் என மனம் சஞ்சலமடைகிறது. ரஹ்மானின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும். நல்ல ஒளிப்பதிவும்கூட.
காதல் புனிதமானதா? காதலில் மிஞ்சுவதெல்லாம் வலியும் நினைவும் மட்டும்தானா? என்கிற கேள்விகளுடன் இறுதிக்காட்சியில் பெருமூச்சுடன் ஒரு பதில் கிடைப்பது வரை தேரே இஷ்க் மே ஒரு காதல் படமாக தோற்கவில்லை என்று சொல்லலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.