அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான லாக்டவுன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஒரு அமைதியான மிடில் கிளாஸ் குடும்பச்சூழலில் வளர்ந்து வேலை தேடிக்கொண்டிருக்கும் அனிதா (அனுபமா பரமேஸ்வரன்) தோழி ஒருவரிடம் தன் நிலைகுறித்து கூறி வேலை கேட்கிறார். அத்தோழி வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறுவதுடன், பார்ட்டிக்கு அழைத்துச் செல்கிறார். தயக்கமும் அதன்மீது சிறிய ஆசையும் கொண்ட அனுபமா மதுவிருந்தில் கலந்துகொள்கிறார். பின், இரண்டு மாதங்கள் கழித்து உடல்நலக்குறைவால் மருத்துவமனை செல்லும் அனுபமாவிடம் மருத்துவர், ‘வாழ்த்துக்கள் நீங்க கர்ப்பமா இருக்கீங்க” என்கிறார். தொடர்ந்து, கரோனா கால ஊரடங்கும் அமலுக்கு வருகிறது.
எந்த உறவிலும் ஈடுபடாமல் காதலனும் இல்லாத அனுபமா எப்படி கர்ப்பம் தரித்தார்? வீட்டிற்குத் தெரியாமல் அந்தச் சூழலை எப்படிக் கையாள்கிறார்? என்பதை பரபரப்பும் எதார்த்தமும் கலந்த கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். ஜீவா.
நடிகர், இயக்குநர் ஏ. ஆர். ஜீவா ஒரு அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதையைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக உண்மைச் சம்பவத்தையே திரைப்படமாக எடுத்திருக்கிறார். இது உண்மையிலேயே ஒரு பெண்ணுக்கு நடந்த சம்பவம் என்பதால் சில அழுத்தங்களுடன் நிறைவடைவது வரை அதற்கான பதற்றத்துடனே இருக்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் சில விஷயங்களில் எச்சரிக்கை உணர்வுடன் நடக்க வேண்டுமென என்பதை இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எவ்வளவு கருகலைப்பு காட்சிகள் வந்திருந்தாலும் லாக்டவுனின் காட்சி சமூகம் குறித்த வலுவான கேள்விகளை எழுப்பும்படி உள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் லிவிங்ஸ்டன், சார்லி ஆகியோர் தந்தைகளாக நடித்திருக்கின்றனர். இதில், லிவிங்ஸ்டன் தன் மகள் காதல் திருமணம் செய்ததால் ஓர் தவறான முடிவை எடுப்பதுபோல காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் எப்போதும் சரியானவர்களே என்கிற பார்வையே இக்கதையில் வெளிப்பட்டுள்ளது நேர்மையான எழுத்தாக இல்லை.
பெற்றோரிடம் எது நடந்தாலும் சொல்லும் அளவிற்கு பெற்றோரும் நடந்துகொள்ள வேண்டும் என்கிற கோணத்தில் காட்சிகளை எழுதியிருந்தால் லாக்டவுண் மிக முக்கியமான படமாகவும் ஆகியிருக்கக்கூடும்.
திருமணத்திற்கு முன் இளம்பெண் கர்ப்பம் தரித்தால், வீடும் சமூகமும் அவளை எப்படியெல்லாம் புறக்கணித்து அவமானப்படுத்தாவர்கள்? அதை யோசித்து பிரச்னையிலிருந்து தப்பிச் செல்ல போராடும் பெண்ணாக அனுபமா தன் அழுத்தமான உடல்மொழியால் காட்சிகளின் தீவிரத்தன்மைக்கு பெரிதும் உதவியிருக்கிறார். தான் கரப்பமான பின், குழந்தை வளர்ச்சியை மறைக்க வயிற்றில் பட்டை அணிந்துகொண்டு நடப்பதும், அதைக் கழிவறையில் பிரித்து வயிற்றைத் தடவிப்பார்த்து வேதனையடைவதிலும் தன் இயலாமையை நன்றாக கடத்தியிருக்கிறார்.
அனுபமா என்றாலே ஜாலியான, மிக ஸ்டைலான நாயகியாக இயல்பாகவே ஒரு சித்திரம் எழுகிறது. காதல் காட்சிகள் என்றால் சொல்ல வேண்டாம், அனுபமாவிடம் ஏதோ ஒன்று ஈர்க்குமளவிற்கு முகபாவனைகள் இருக்கும். லாக்டவுணில் அப்படி ஒன்று இருக்கும் என நினைத்தால், அதைக் கடந்த ஒன்றை தன் நேர்மையான நடிப்பால் வழங்குகிறார். பார்ட்டியில் நடனமாடும் போது கவர்ச்சியான பெண்ணாகத் தெரிபவர் இறுதிக்காட்சியில் நடந்து செல்லும்போது கொஞ்சம் உலுக்கிவிடுகிறார்.
அனுபமாவின் தோழியாக நடித்த கதாபாத்திரமும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. இறுதிக்காட்சியில் இவர் செருப்பை எடுத்துக்கொண்டு ஓடும் காட்சி பெரிய அமைதியையும் வலியையும் தருவதாகவே இருக்கிறது.
இடைவேளை வரை, சாதாரணமாக யார் இதனைச் செய்திருப்பார்கள் என்கிற கோணத்தில் செல்லும் கதை, இரண்டாம் பாதியில் வேறோரு பக்கம் நகர்வதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளே நம் வாழ்க்கையின் நன்மை, தீமைகளை நிர்ணயிக்கின்றன என்பதையும் அலசியிருந்தது நன்று. படத்தின் கடைசி 20 நிமிடம் சாதாரண கதை வலிமையாக அசைத்துப் பார்க்கிறது.
லாக்டவுன் கதையில் பேசப்பட்ட விஷயங்கள் பலமும் பலவீனமும் கொண்டதாகவே இருந்தாலும் இப்படத்தில் பதிவான சூழ்நிலைகளும், உண்மைக்கதையும் சில எச்சரிக்கை உணர்வுகளை தட்டி எழுப்புகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.