செய்திகள்

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் விமர்சனம்...

Dharmarajaguru.K, க. தர்மராஜகுரு

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் சிறிய காத்திருப்பிற்குப்பின் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமாகிய பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே தனி கவனத்தையும் அன்பையும் பெற்று இயக்குநராக தனுஷ் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால் அவரது 50 ஆவது படமான ராயன் படத்தை எழுதி, இயக்கி, ரசிகர்களின் நம்பிக்கையைக் கொஞ்சமாக இழந்தார் என்றே சொல்லவேண்டும்! அந்த நம்பிக்கையை இட்லி கடை மூலம் மீட்டாரா தனுஷ்? 

இட்லி கடை திரைப்படத்தில் தனுஷ்

சொந்த ஊரில் குட்டியாக ஒரு இட்லி கடை வைத்து தனது கைப்பக்குவத்தால் கொடிகட்டிப் பறக்கிறார் சிவநேசன் (ராஜ்கிரண்). பல கிளைகளைத் திறப்பதைவிட, ஒரு கடையை உருப்படியாக நடத்தி போதுமான பணம் கிடைத்தாலே போதும் என நினைப்பவர். அவரைப் போலவே சமையலில் ஆர்வமாக இருக்கும் அவரது மகன் முருகன் (தனுஷ்) இந்த கிராமத்திற்குள்ளேயே தன் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ள விரும்பாமல் வெளிநாடுவரை சென்று பெரிய நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருக்கிறார். அந்த பொறுப்புகளோடு சேர்ந்து சில உறவுகளையும் உருவாக்கிக்கொள்கிறார். ஆனால் கிராமத்தில் வசிக்கும் அவரது அம்மா, அப்பாவோ ஊரை விட்டு வர விரும்பாத ஜோடி! தனக்குப் பிறகு இந்த இட்லிக்கடையை யார் பார்த்துக்கொள்வது என சிவநேசன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முருகன் வெளிநாட்டிலிருந்து மீண்டும் கிராமத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, அப்படி வருபவர் தந்தை ஆசைப்படி கடையை எடுத்து நடத்துகிறாரா? அல்லது தனது வெளிநாட்டு பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா என்பதுதான் இந்த இட்லிக்கடை! 

இட்லி கடை திரைப்படத்தில் ராஜ்கிரண், கீதா கைலாசம்!

“லாங் ஸ்டோரி ஷார்ட்!”: இயக்குநராக தான் விட்ட இடத்தை நோக்கிய பயணத்தில் தனுஷ் கொஞ்சம் மும்மரமாகியிருக்கிறார்! கதையிலும், எழுத்திலும், இயக்கத்திலும் ராயனைக் கடந்துவிட்டார் என கண்டிப்பாகச் சொல்லலாம். 

முதலில் கதையில் நடித்துள்ள கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்த்தாகவேண்டும்! 

இந்த இட்லி கடையில் பல நடிகர்கள் கைகோர்த்துள்ளனர்! தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், கீதா கைலாசம், சத்யராஜ், இளவரசு, பார்த்திபன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சமுத்திரக்கனி என மேலும் பல பரிட்சயமான நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனைவரும் எந்த ஒரு குறையும் இல்லாத நடிப்பைக் கொடுத்து மனதில் நிற்கின்றனர். அருண் விஜய்க்கு திரையில் தனி இடம் கொடுக்கப்பட்டு, அதை அவர் நன்றாகவும் கையாண்டிருக்கிறார். நித்யா மெனன் கிராமத்துப் பெண்ணாக, வெகுளியாக வந்து கவர்கிறார். சிவநேசன் கதாபாத்திரத்தின் தூய்மையான மனநிலையை ராஜ்கிரண் இயல்பான நடிப்பால் காட்டியிருக்கிறார். அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் நல்ல நடிப்பால் மனதில் நிற்கிறார். 

இட்லி கடை திரைப்படத்தில் ஒரு காட்சி!

மற்றபடி சமுத்திரக்கனி, இளவரசு, பார்த்திபன் ஆகியோரெல்லாம் சிறிய கதாபாத்திரங்கள் போல் தோன்றினாலும் நல்ல கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு, அதை அவர்கள் அழகான முறையிலும் திரையில் காட்டியிருக்கிறார்கள். 

தனுஷின் நடிப்பைப் பற்றி பேசுவதற்கு புதிதாக ஒன்றுமில்லை என்றாலும், இந்தக் கதையில் அவர் மெனக்கெட்டு நடிக்க பல காட்சிகள் இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் அவரது திறமையைக் கொஞ்சமாகக் காட்டிவிட்டு கையைக் கட்டி நின்றுகொள்கிறார். அதனால் நடிப்பு எனப் பார்க்கையில் எல்லா கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்படியாக அனைவரும் நடித்துமுடித்துள்ளனர். 

இட்லி கடை திரைப்படத்தில் ஒரு காட்சி!

அடுத்தபடியாக எழுத்தாளர் மற்றும் இயக்குநராக தனுஷின் வேலை எப்படி? முதலில் எழுத்தாகப் பார்க்கவேண்டுமெனில், விளம்பர நிகழ்ச்சிகளில் தனுஷ் சொன்னதுபோல, இது ஒரு சாதாரணக் கதை. எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் பொறுமையாக நகரும் கதை. அதுவும் கமெர்ஷியல் கதை. எனவே எடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார் தனுஷ். இந்த சாதாரணக்கதையை சலிப்புத்தட்டாமல் சொல்ல முடிந்தவரை முயன்றிருக்கிறார். 

முக்கியமாக கதாபாத்திரங்களை மிகக் கவனமாக கையாண்டிருப்பதை காணமுடிகிறது. சத்யராஜின் கதாபாத்திரமும், பார்த்திபனின் கதாபாத்திரமும் கமெர்ஷியல் சாயங்களால் வெளுத்திவிடாமல் கொஞ்சம் புதுமையூட்டப்பட்டது சிறப்பு. 

"அப்பாவின் தொழிலை நான் செய்வேன்! எனது மகன் பேரன்களுக்கும் கற்றுத்தருவேன்" என்பது மாதிரியான வசனங்கள் கொஞ்சம் நெருடலாகத் தெரிந்தாலும், கதையின் போக்கு சொல்லவரும் கதை வேறு என்பதை பல இடங்களில் உணர்த்திவிடுகிறது.

இட்லி கடை திரைப்படத்தில் ஒரு காட்சி!

Spoiler Alert: ஆரம்பத்தில் சிவநேசனும் இட்லிகடையும் எவ்வளவு நெருக்கம் என்பதை எழுதிய விதமும் அதை படமாக்கிய விதமும், அந்த இட்லிகடை உருவான கதையும், ராஜ்கிரண் - கீதா கைலாசம் கதாபாத்திரங்களின் காதலும், தனுஷுடன் வளரும் கன்னுக்குட்டியும், வெளிநாட்டில் அவர் மாட்டியிருக்கும் திருமணமும், அருண் விஜய் கதாபாத்திரமும் இப்படிப் பட்ட இயல்பான ஆனால் கமெர்ஷியல் கதைக்கு நல்லவிதத்தில் உதவியிருக்கின்றன. 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை சில இடங்களில் தேவையற்றதாகத் தெரிந்தாலும், பாடல்களால் மனதில் நின்றுவிடுகிறார். இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் படம் முடிந்தும் காதில் ஓடுகின்றன. 

இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன்!

கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய அளவில் உதவியுள்ளது. சண்டைக் காட்சிகளும் சரி, சமையலும் காட்சிகளும் சரி, அவரது பங்கு படத்தை நல்லமுறையில் கொண்டுசேர்த்துள்ளது. அந்த ஊரைக் காட்டிய விதமும், அந்த ஊர் மக்களைக் காட்டிய விதமும் எழுத்திலும், கலை வடிவமைப்பிலும் கவனம் பெருகின்றன. 

மொத்தத்தில் இந்த இட்லிக்கடை குடும்பத்துடன் சென்று ரசித்துவிட்டு வரக் கூடிய அளவில் மென்மையாக, பொறுமையாக நல்ல கதையாகவே வந்து சேர்ந்திருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தேவி தரிசனம்... பிரனலி ரத்தோட்!

சிவாஜிகணேசன் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து! சம்பவ இடத்தின் காட்சிகள்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

SCROLL FOR NEXT