ஜன நாயகன் விவகாரத்தில் முழுமையான அரசியல் ஈடுபாடு இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களுடன் விஜய் வசந்த் பேசுகையில் “ஒரு திரைப்படத்தை எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல; அதனை எடுத்து, வெளியிடுவதும் சாதாரண விஷயமல்ல. வெளியீடு வரையில் வந்துவிட்டு, திரைகளில் வராமலிருப்பது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கக் கூடியது.
ஏனெனில், இதில் பல பேரின் உழைப்பு இருக்கிறது. பல விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் இது பாதிப்பைத் தரும்.
ஓடிடி வந்ததிலிருந்து திரையரங்குகளில் சென்று படம் பார்க்கும் கூட்டமே குறைந்து விட்டது. குறிப்பிட்ட சில படங்கள் மட்டும்தான் திரையரங்குகளில் ஓடுகின்றன.
ஆனால், இந்த 6 நாள் விடுமுறையில் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால், ஜன நாயகன் தள்ளிப்போவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கும். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெரிய இழப்பாக இருக்கும்.
இந்த விவகாரத்தில் தணிக்கைச் சான்றிதழ் வாரியம் மீண்டும் மேல் முறையீடு செய்திருப்பது, வேண்டுமென்றே படத்தை தள்ளிப்போட வேண்டுமென்ற நோக்கமாகத்தான் இருக்க வேண்டும்.
நடப்பவற்றையெல்லாம் பார்க்கையில் இதில் முழுமையான அரசியல் ஈடுபாடு இருப்பதாகத் தெரிகிறது” என்று தெரிவித்தார்.
விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய இரு படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியத்தின் போக்கு ஏற்கத்தக்கதல்ல என்று அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.