செய்திகள்

பணம் பேசும் வசனங்கள்... காந்தி டாக்ஸ் - திரை விமர்சனம்!

காந்தி டாக்ஸ் திரைப்பட விமர்சனம்....

சிவசங்கர்

நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் வசனங்களே இல்லாத திரைப்படமான காந்தி டாக்ஸ் இன்று வெளியாகியுள்ளது.

யார் பணக்காரர், யார் ஏழை என அப்பட்டமாகத் தெரியும் பெருநகர வாழ்க்கையின் பிம்பமாக கதை மும்பையில் நடக்கிறது. அடுத்த வேளை உணவிற்குக் கஷ்டப்படும் ஏழ்மையில் இருக்கும் விஜய் சேதுபதியும் மிகப்பெரிய பணக்காரரான அரவிந்த் சாமியும் அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சங்களால் எப்படி தங்களை இழக்கிறார்கள் என்பதை அவர்களிடம் இருக்கும் ரூ.100 நோட்டிலும் ரூ. 2000 நோட்டிலும் சிரித்தபடி காந்தி பார்த்துக்கொண்டிருக்கிறார். இறுதியில், அவரவர் பணப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்ததா? என்பதே கதையின் ஒன்லைன். மனிதன் பேசாவிட்டால் என்ன? எப்போதும் பணம்தானே இங்கே பேசிக்கொண்டிருக்கிறது? ஒவ்வொரு கணமும் பணம் இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கை நகரும் என்பதை வசனங்களே இல்லாமல் காந்தி டாக்ஸ் பேசுகிறது.

ஒருவேளை உணவிலிருந்து மரணம் வரை நம்முடன் காந்தி இருக்க வேண்டிய தேவை உள்ளது. பணத்தாளில் காந்தி எவ்வளவு அதிகமாக சிரிக்கிறாரா நாமும் நிம்மதியாக இருக்கலாம். நிம்மதி பணத்தால் மட்டுமே வந்துவிடுமா என்ன? அதுவும் இதில் பதிவாகிறது. நம்முடைய ஆன்மாவை அடகுவைத்து பணத்தைத் துரத்தும் நிலைக்கு லஞ்சமும் ஊழலும் இங்கும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ’நீயே மாற்றமாக இரு’ என காந்தி சொன்னதெல்லாம் யாருக்கு நினைவில் இருக்கப் போகிறது? முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு... அரசு அதிகாரிகளுக்கு...

பணம் இருப்பவனும் இல்லாதவனும் அரசு அதிகாரங்களுக்கு முன் ஒன்றுதான் என்கிற நிலையைக் கதாபாத்திரங்களின் ஊடாக இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் உணர்த்தியிருக்கிறார். உடல்நலம் சரியில்லாத அம்மாவைச் சுமக்க வேண்டிய மகனாகவும் காதலியைக் கரம்பிடிக்க காத்திருக்கும் காதலனாகவும் விஜய் சேதுபதியிடமிருந்து வழக்கம்போல இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது. மௌனமும் இயலாமையும் கையைப்பிசையும் இடங்களில் தன் முகபாவனைகளால் வறுமையின் கொடுமைகளை உணர வைக்கிறார்.

இன்னொரு புறம், மிகப்பெரும் பணக்காரராக இருந்து எல்லாவற்றையும் இழக்கும் கையறுநிலையுடன் பிரச்னையிலிருந்து வெளிவரப் போராடும் நபராக அரவிந்த் சாமியும் கவனம் ஈர்க்கிறார்.

நடிகை அதிதி ராவ் உணர்வுப்பூர்வமான விஷயங்களை விழியசைகளிலேயே கடத்துகிறார். தன் தாய் அவரைக் கட்டியணைக்கும்போது அதிதியிடமிருந்து உணர்ச்சிமிகுதியில் அபாரமான முகபாவனை வெளிப்படுகிறது. திறமையான நடிகை.

வசனங்கள் இல்லை என்றாலும் பெரும்பாலான காட்சிகள் அடுத்தது என்ன என்கிற ஊகத்தையும் தாண்டி நம்மை சினிமா என்னும் அனுபவத்திற்கு முன் காத்திருக்க வைக்கின்றன. ஆனாலும், மனிதன் பேசாவிட்டாலும் பணம்தான் இங்கு பேசும் என்பதைச் சொல்ல எதற்கு இத்தனை பெரிய நடிகர்கள் என நினைக்க வைக்கும் அளவிற்கு திரைக்கதை பலவீனத்துடனே இருக்கிறது.

அனைத்து ரூபாய் தாள்களிலும் காந்தி சிரித்தாலும் அதை வைத்திருப்பவர்களிடம் ஏமாற்றமும், குற்றவுணர்வுமே எஞ்சியிருக்கிறது என்பதை மறைமுகமாக பதிவு செய்ய இயக்குநர் விழைந்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவானாலும் சில காட்சிகள் அயர்ச்சியைத் தருகின்றன. நீதிமன்ற காட்சியில் வாட்ஸப் வாயிலாக நீதிபதி லஞ்சம் வாங்க ஒப்புக்கொள்ள வைத்த காட்சி போன்று இன்னும் சில காட்சிகளை எழுதியிருந்தால் நிறைய இடங்களில் சிரித்து இன்றைய இன்றைய ரீல்ஸ் காலத்திலும் நல்ல கதைக்கு வசனங்கள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை என்பதை உறுதி செய்திருக்கலாம். இதனால், சுவரஸ்யமான படமாக காந்தி டாக்ஸ் வரவில்லை. நுட்பமாக பார்ப்பவர்களுக்கான படம்.

வசனங்கள் இல்லையென்றால் என்ன? இசை இருக்கிறதே என பல இடங்களில் ஏ. ஆர். ரஹ்மானே காப்பாற்றுகிறார். விஜய் சேதுபதிக்கும் - அதிதிக்கும் இடையேயான அறிமுக காதல் பாடல் மிக அழகான வரிகளுடன் காட்சியமைப்புகளுடனும் எடுக்கப்பட்டிருக்கிறது. கரண் பி. ராவத்தின் ஒளிப்பதிவில் வெளிப்பட்ட ஒளியமைப்பு உணர்வுகளைக் கடத்தும் நுட்பத்துடன் இருந்தன.

என்னதான் கலை முயற்சிகள் என்றாலும் வியாபாரம் என ஏதாவது நடக்க வேண்டுமே? முழு மௌனக்கதையில் இன்றைய நட்சத்திர நடிகர்களான விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்க முன்வந்ததற்காக, கையைக் கடிக்கும் உண்மையை வசனங்களே இல்லாமல் பேசியதற்காக நடிகர்கள், இயக்குநர், தொழில்நுட்பக் குழுவினருக்கு வாழ்த்துகள்!

vijay sethupathi's gandhi talks movie review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை சற்று குறைவு!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!

Dinamani வார ராசிபலன்! | பிப்.1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்கம்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைய பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT