திரை விமரிசனம்

அமீர் கானின் டங்கல்: நிறைகளும் குறைகளும்!

படத்துக்கு யுத்தம் என்று தமிழில் பெயர்வைத்தவர்கள் வசனங்களிலும் மல்யுத்தம் என்கிற...

ச. ந. கண்ணன்

முதல் வாரத்தில் மட்டுமே ரூ. 300 கோடி வசூலித்த படம், டங்கல். உலகம் முழுக்க பலத்த பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. கிட்டத்தட்ட அனைத்து விமரிசனங்களும் படத்தைப் பாராட்டித் தள்ளுகின்றன. சமீபகாலத்தில் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் விமரிசகர்களிடமும் பேராதரவைப் பெற்ற படம் வேறு எதுவும் கிடையாது.  

டங்கல், யுத்தம் என்கிற பெயரில் தமிழிலும் வெளிவந்துள்ளது. ஒரு சராசரி தமிழ்சினிமா ரசிகனுக்கு இந்தப் படம் பலவிதங்களில் ஆச்சர்யம். அமீர் கான் போன்ற ஒரு பிரபல நடிகர், தந்தை வேடத்தில் படம் முழுக்க அமைதியாக நடித்துவிட்டுப் போகமுடியுமா? அட, கடைசிக் காட்சியில் அந்தப் பயிற்சியாளருடன் விஷால் போல ஒத்தைக்கு ஒத்தை மோதியிருக்கவேண்டாமா? பாபநாசத்தில் கூட கமலும் கெளதமியும்
கொஞ்சிக்கொள்ளும் காட்சிகள் உண்டு. இதில் மருந்துக்குக்கூட மனைவியுடன் அமீர் கான் காதல் செய்கிற காட்சிகள் எதுவும் இல்லையே! இதுபோன்ற பல ஆச்சர்யங்களுடன்தான் படத்தில் பயணிக்கமுடிகிறது.  

பெண்ணுரிமையை உயர்த்திப் பேசும் இந்தப் படம், அநாவசியக் காட்சிகள் எதுவுமின்றி அடுத்தடுத்தக் கட்டத்துக்குச் செல்கிறது. அதைவிட பேராச்சர்யம், படத்தில் மருந்துக்கும் காதல் காட்சிகள் கிடையாது. அமீர் கான் மட்டுமல்ல, அவர் மகள்களுக்கும் படத்தில் எந்தவொரு காதல் காட்சியும் கிடையாது. இறுதிச்சுற்று படத்தில்கூட தன் பயிற்சியாளர்மீது காதல் வயப்படும் கதாநாயகியைக் கண்டோம். ஆனால் இதில் வயது காரணமாகக் கொஞ்சம் கவனம் திசைதிரும்பும் கதாநாயகி, அதிகபட்சமாக தன் வயது பையன்களை சைட் அடித்து உள்ளூற மகிழ்கிறார். அவ்வளவுதான். காதல் காட்சிகளே இல்லாத எத்தனை தமிழ்ப்படங்களைக் காண நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது?! அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அவற்றில் எத்தனை இப்படி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது? 

படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரியையும் மறக்காமல் பாராட்டவேண்டும் (பெரும்பாலான பாராட்டுகள் அமீர் கானுக்கே கிடைக்கின்றன). மல்யுத்தக் காட்சிகளைத் தத்ரூபமாக எடுத்துள்ளார். ஆயிரம் பேர் மத்தியில் மத்தியில் மல்யுத்தக் காட்சியைப் பார்க்கும் அனுபவத்தைத் திரையரங்கில் ஏற்படுத்தியுள்ளார். மேலும் கதாபாத்திரத் தேர்வுகள் எல்லாம் துல்லியம். முதல் பகுதியில் வந்த அந்த சின்னஞ்சிறுமிகளை எந்த ஒரு ரசிகனாலும் மறக்கமுடியாது. மூத்த பெண் கீதா, முதல்முறையாகப் பையன்களுடன் குஸ்தி போடும் காட்சிகள் எல்லாம் படத்தை வேறுதளத்துக்குக் கொண்டுசென்று விடுகிறது.

காட்சிபூர்வமாக நகரும் திரைக்கதை படத்தின் பெரிய பலம். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவதெல்லாம் இதில் கிடையாது. பல முக்கியமான தருணங்கள் குறைந்த வசனங்களிலும் முகபாவங்களிலுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் சினிமா இயக்குநர்கள் கற்றுக்கொள்ள இந்தப் படத்தில் நிறைய அம்சங்கள் உள்ளன. 

மேலும், குறைகளுடன் கொண்டாடப்படவேண்டிய படம்தான் டங்கல். 

முதல் பாதி அவ்வளவு யதார்த்தம். ஒரு காட்சியில்கூட யாரும் கைவைக்க முடியாது. ஆனால் இரண்டாம் பாதியில் பல இடங்களில் கதை திடீர் திடீரென சினிமாத்தனத்துக்குத் தாவிவிடுகிறது.

படத்தில் வில்லன் இல்லாத குறையைப் போக்குகிறார் பயிற்சியாளர். இத்தனைக்கும் நிஜவாழ்வில் கீதா போகட்டும் பபிதா குமாரியும் அப்படியொரு பயிற்சியாளரிடம் எந்தவொரு அவஸ்தையும் படவில்லை. நிஜத்தில் என்ன நடந்தது என்றால், பட்டியாலா பயிற்சி மையத்துக்குச் சென்றபிறகு மகள்கள் இருவரும் முன்புபோல கடுமையாக உழைப்பதில்லை என்று அவர்களுடைய தந்தை கோபம் கொண்டிருக்கிறார். பட்டியாலாவில் அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகள் கடுமையாக இல்லாததால் விமரிசனம் செய்துள்ளார். இந்த முரண்பாடு இயக்குநரைக் கவர்ந்துள்ளது. அதில் சினிமாத்தனம் கலந்ததுதான் படத்தின் இரண்டாம் பகுதி. படத்தில் வருகிற பயிற்சியாளர் ஒரே குரலில் தந்தையின் பயிற்சிமுறைகளை நிராகரிக்கிறார். இதனால் தந்தைக்கும் பயிற்சியாளருக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்படுகிறது. மேலும் கீதா தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் தோற்கவே, இதைப் பயன்படுத்திக்கொண்டு தனது பயிற்சிமுறைகளின் வலிமையை மகளிடம் எடுத்துரைக்கிறார் தந்தை. இதுதான் டங்கல் இரண்டாம் பகுதியில் காட்சிகளாக விரிகின்றன. 

பயிற்சியாளரின் வில்லத்தனத்தில் செயற்கை அம்சமும் கொண்டிருப்பது திரைக்கதை மீது கறையைப் பூசிவிடுகிறது. மேலும் இரு தரப்பின் பயிற்சிகளில் உள்ள வேறுபாடுகளையும் இயக்குநர் சரியாக முன்வைக்கவில்லை. பாட்டியாலாவில் இருந்து ஊர் திரும்பும் கீதாவின் குஸ்தித்திறமையில் தந்தைக்குக் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. அதிலும் ஒரேயொரு பயிற்சிமுறையில்தான் அவர் வேறுபாடு காண்கிறார். இதைவைத்து அவருடையது பயனில்லாதது, இவருடையது மகத்தானது என்கிற ஒரு கருத்து படத்தில் முன்வைக்கப்படுகிறது. இதை எப்படி ஏற்கமுடியும்? உதாரணமாக, இன்று கிரிக்கெட்டில் உள்ள எல்லாப் பயிற்சியாளர்களும் குறிப்பிட்ட பிட்சில் ஆடும் விதம் குறித்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். இதேதான் ஒவ்வொரு விளையாட்டிலும். சமகாலப் பயிற்சியாளர்களிடமே ஒரே அம்சம் குறித்து பல்வேறுவிதமான பயிற்சிமுறைகள் நிலவுவது இயல்பு. எனில் இருவேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களிடம் தோன்றும் இந்தக் கருத்துவேறுபாட்டில் பெரிய விசித்திரம் கிடையாது. இயக்குநர் முன்வைக்கும் வேறுபாடுகளை இன்னமும் ஆதாரபூர்வமாக, அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம். திரைக்கதையிலும் காட்சிகளின் அமைப்பிலும் முன்பகுதியில் காண்பிக்கப்பட்ட சிரத்தை, பின்பகுதியில் இதுபோன்ற காட்சிகளில் மட்டும் மேலோட்டமாகச் செல்வது உறுத்துகிறது.

கீதா, தங்கம் வென்ற அதே காமன்வெல்த் கேம்ஸில் அவர் சகோதரி பபிதா குமாரி, வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவருடைய சாதனையை இயக்குநர் தவிர்த்தது ஏன் என்று புரியவில்லை. ஒரே போட்டியில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி வாங்கித் தந்த தந்தை என்றால் கதைக்கு இன்னும் வலு சேர்த்திருக்குமே!

டங்கல் படத்தின் இறுதிக்காட்சியைத் தமிழ் ரசிகர்கள் இறுதிச்சுற்று படத்திலேயே பார்த்துவிட்டார்கள். வழக்கம்போல, இறுதிப்போட்டியைக் காணமுடியாதபடி பயிற்சியாளரைப் பழிவாங்கும் இன்னொரு உச்சக்கட்டக் காட்சிதான் டங்கலிலும். ஆனாலும் அந்தத் தேசிய கீதம் ஒலிக்கும் காட்சியில் மாஸ் படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.

வசனங்களில் பெரிய குறையில்லைதான். அதேசமயம் பல இடங்களில் பிரமாதமாகவும் இல்லை. பல காட்சிகளில் அதன்பொருட்டு வெளிப்படுத்தவேண்டிய உணர்வுகளை வசனங்கள் இன்னும் அழுத்தமாகவும் கூர்மையாகவும் பிரதிபலித்திருக்கலாம். (தமிழில் ஜெயமோகன் போன்றவர்கள் வசனம் எழுதியிருந்தால் நிறைவு கிடைத்திருக்குமோ?). மேலும், மல்யுத்தத்தைத் தொடர்புபடுத்தி இன்னும் சில பொருத்தமான வசனங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற ஆதங்கமும் எனக்கு உண்டு. லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற யோகேஸ்வர் தத் ஒரு பேட்டியில், மல்யுத்தத்தில் ஒருநாள் பயிற்சியைத் தவறவிட்டாலும் மூன்று மாதங்கள் பின்தங்கிவிடுவோம் என்றார். இதுபோன்ற அந்த விளையாட்டுக்குரிய பல வசனங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன். மேலும் தமிழ் ஊடகங்களில் மல்யுத்தம் என்கிற சொல் இயல்பாக இடம்பெறுகிறபோது படம் முழுக்க இந்த விளையாட்டை குஸ்தி என்றே குறிப்பிடுகிறார்கள். படத்துக்கு யுத்தம் என்று தமிழில் பெயர்வைத்தவர்கள் வசனங்களிலும் மல்யுத்தம் என்கிற சொல்லை இடம்பெறவைத்திருந்தால் தலைப்புக்கும் பொருத்தமாகவும் இருந்திருக்குமே!  

தமிழில் அதிக வசூல் செய்த ஹிந்தி டப்பிங் படம் என்கிற பெருமை நிச்சயம் டங்கலுக்குக் கிடைக்கும். இதேபோல பெரிய நடிகர்கள் நடித்த மற்றும் முக்கியமான படங்களை தமிழிலும் டப் செய்தால் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மார்க்கெட்டை பாலிவுட்டால் உருவாக்கமுடியும். அதற்கான முதல்படியாக டங்கல் அமையட்டும். ( ஹிந்திப் படங்களை தமிழில் ரீமேக் செய்து சொதப்பித் தள்ளுவதற்கு டப்பிங் படங்களைத் தாராளமாக வரவேற்கலாம்.) 

அமீர் கான் மற்றும் தமிழில் டப் செய்ய விரும்புபவர்களுக்கு ஓர் ஆலோசனை: படத்தின் டைட்டில் கார்டு, முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உள்ளது. அதாவது தமிழில் இல்லை என்பது என் புகார். மணி ரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களின் டைட்டில் கார்டில் முழுக்க முழுக்க தமிழே இடம்பெறும். டப்பிங் படம் தானே என டைட்டில் கார்டில் அலட்சியம் காண்பித்திருக்கவேண்டியதில்லை. அதேபோல படம் முடிந்தபிறகு மஹாவீர் சிங் போகட், கீதா போகட், பபிதா குமாரி ஆகியோரைப் பற்றி ஆங்கிலம், ஹிந்தியில் குறிப்புகள் இடம்பெறுகின்றன. அந்தக்குறிப்புகளும் தமிழில் இடம்பெறாதது ஏன் என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகனின் அடிப்படை உரிமைகள். அடுத்துவரும் டப்பிங் படங்களில் இக்குறைகள் கட்டாயம் களையப்படவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT