திரை விமரிசனம்

இயக்குநர் ராமின் 'தரமணி': சினிமா விமரிசனம்

சுரேஷ் கண்ணன்

எச்சரிக்கை: மிகையாக இருந்தாலும் முதல் வரியிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்தத் திரைப்படம் ‘முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கானது’. ஒருவேளை வழக்கமான தமிழ் சினிமாவை எதிர்பார்த்து செல்பவர்கள் கடுமையான அதிர்ச்சியை அடைவதற்கான சாத்தியம் அதிகம். ‘இது இயக்குநர் ராமின் திரைப்படம்’ என்கிற அறிதலுடன், முன்கூட்டிய மனநிலையுடன் செல்கிறவர்கள் கூட அந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கான சாத்தியமுண்டு.

இந்தத் திரைப்படத்தின் உள்ளடக்கம், காட்சிகள், வசனங்கள் என்று எல்லாவற்றிலும் கடுமையான சமூக விமரிசனங்களும், அவல நகைச்சுவையும், மரபு மீறலும், கலாசார அதிர்ச்சியும், இயக்குநரின் குரலும் நிறைந்திருக்கின்றன. 

இதுவரை வெளிவந்த தமிழ் சினிமாக்களில் ‘The most matured cinema’ என்று இயக்குநர் ருத்ரைய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை முன்நிறுத்த விரும்புகிறேன். ஆனால் அந்தத் திரைப்படத்தை விடவும் பல நூறு அடிகள் தாண்டிச் சென்றிருக்கிறது, ராமின் ‘தரமணி’

நிற்க, உடனே ‘இது ஏதோ ஒலக சினிமா’ போல இருக்கு’ என்று ஒதுங்கிக் கொள்ளவும் தேவையில்லை. ராமின் திரைமொழி ‘பெஸ்டிவல் பாணியில்’ இருந்தாலும் அவர் பேசியிருக்கும் விஷயம் மிக அடிப்படையானது; எளிமையானது. எனவே அடிப்படை மனித உணர்வுள்ள எந்தவொரு சராசரி நபருக்கும் இந்தத் திரைப்படம் நிச்சயமாகப் புரியும். அதற்கான பொறுமையும் நுண்ணுணர்வும்தான் தேவை. 

சரி, விமரிசனத்துக்குள் செல்வோம். 

**

ஆண் x பெண் உறவு சார்ந்த சிக்கல் என்பது மேற்பரப்பில் எளிமையானதாகத் தோன்றினாலும் அதனுள் ஆயிரக்கணக்கான இழைகள் உள்ளுறையாக, ரகசியமாக பின்னிப் பிணைந்திருக்கின்றன. தனிநபர்களின் அகச்சிக்கல்கள்தான் குடும்ப வன்முறைகளுக்கு காரணமாக இருக்கின்றன. பெரும்பாலான சமூகக் குற்றங்களுக்கு குடும்ப வன்முறையே காரணமாக இருக்கிறது. இப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் நம்முடைய வாழ்வியல் இயங்குமுறையின் சிக்கல்களை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் பதிவு செய்திருக்கிறார் ராம்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான சிக்கலின் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. ஆதாமின் முதல் ஆப்பிள் கதைக்கு முன்னால் இருந்தே இந்தச் சிக்கல் இருந்திருப்பதற்கான வாய்ப்பு உண்டு. 

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் இனக்கவர்ச்சி, காதல், காமம் என்று அனைத்துக்கும் காரணம் இயற்கையின் தொடர் சுழற்சிதான். இதற்காகவே அத்தனை நாடகங்களும். ஓர் உயிரில் இருந்து இன்னொரு உயிர் உருவாவது. இயற்கையின் இந்தத் தொடர் நாடகம், ஏறத்தாழ எல்லா உயிரினங்களுக்குள்ளும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

காமம்தான் இதற்கான அடிப்படை உந்துவிசை என்றாலும் இந்த நாடகத்தின் பிரதிபலிப்பாக அதன் மேற்பரப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எவ்வாறான காட்சிகள் எல்லாம் நிகழ்ந்து விடுகின்றன?

அகங்கார மோதல்கள், பரஸ்பர ஈர்ப்புகள், அதற்கான வேடங்கள், காதல், அதனுள் மறைந்திருக்கும் காமம், அவை சார்ந்த பாசாங்குகள், நிறைவேறாத ஏக்கங்கள், பெருமூச்சுகள், அகம், புறம் சார்ந்து உருவாகும் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குற்றங்கள், குடும்ப வன்முறை, வன்மங்கள், கொலைகள், தற்கொலைகள், இறந்து போகும் மனங்கள், மரத்துப் போகும் உணர்வுகள் என்று பல்லாயிரக்கணக்கான உணர்ச்சிகளின் விளையாட்டுக்களம் இது. 

இந்தக் களத்தின் பின்னணியில்தான் தன் நாடகத்தை நிகழ்த்துகிறார் ராம். ‘ஒரு பையன், ஒரு பொண்ணு கிட்ட ‘ஐ லவ் யூ’ சொன்னா என்னவெல்லாம் நடக்கும்? என்கிற இயக்குநரின் குரலும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் ஒரு சிறிய உதாரணம். 

**

காதலில் தோற்றுப் போகும்  ஓர் இளைஞன். திருமண வாழ்க்கையில் தோற்றுப் போகும் ஒரு பெண். மழைநாள் ஒன்று தற்செயலாக அவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறது. எழுத்தாளர் ஆதவனின் சிறுகதையில் வரும் பாத்திரங்கள் போல அகங்கார மோதலில் அந்தக் காட்சி தொடங்குகிறது. ஒருவரையொருவர் மெல்லப் பிறாண்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து ஒழுகும் குருதியை ருசிக்கிறார்கள். மிக முதிர்ச்சியான உரையாடல் அவர்களுக்குள் நிகழ்கிறது. 

பரஸ்பரம் தங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தவுடன் தாங்கள் இருவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்கிற எண்ணமும் பிரியமும் உருவாகிறது. 

காதலியால் பாதிக்கப்பட்ட இளைஞன், கணவனால் பாதிக்கப்பட்ட பெண். பாதிக்கப்பட்ட இருவர் இணைந்து அவர்களுக்குள் இனிமேலும் பாதிப்பு வராத ஒரு பயணத்தை உருவாக்க முடியுமா?. ஆம் என்று தோன்றலாம். இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்குமான சில ஆதாரமான குணாதிசயங்கள் அவர்களை அப்படி வாழ அனுமதிக்காது. 

அவர்களுக்குள் நிகழும் குரூர விளையாட்டை கருணையேயின்றி ரத்தமும் சதையுமாக நம் கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர் ராம். 

**

படத்தின் முதல் பிரேம் தொடங்கி கடைசி வரைக்கும் இயக்குநரின் கொடி பறக்கிறது. ஆம். ‘இது முழுக்க முழுக்க இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள திரைப்படம்’ என்று தைரியமாகச் சொல்லலாம். முன்னணி நாயகர்களுக்கேற்ப பல சமரசங்களைச் செய்யும் பிழைப்புவாத இயக்குநர்களுக்கு மத்தியில் தாம் உருவாக்க விரும்பும் படைப்புக்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்க முனையும் ராமின் பிடிவாதமும் கலைஞனுக்கான திமிரும் ரசிக்க வைப்பவை. 

ஆட்சேபகரமான சில காட்சிகளை நீக்கினால் ‘யூ’ சான்றிதழ் பெற்று வரிவிலக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய சூழலை கைவிட்டு ‘அந்தக் காட்சிகளை நீக்க முடியாது, அவைதான் இத்திரைப்படத்தின் அடித்தளம்’ என்கிற நோக்கில் பிடிவாதமாக ‘ஏ’ சான்றிதழ் பெற்ற நேர்மை பாராட்டத்தக்கது. 

ஆனால், இயக்குநரின் திரைப்படம் என்பதற்காக நாயகனின் உடல்மொழி முதற்கொண்டு படம்நெடுக ஒலித்துக் கொண்டேயிருக்கும் ‘வாய்ஸ்ஓவர்’ வரை இயக்குநரே பல இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது நியாயமா? (சரி, இந்த பஞ்சாயத்துக்குப் பின்னால் வருவோம்). 

இந்தியா – இலங்கை கிரிக்கெட் போட்டிக்கும், இராமேஸ்வரத்தில் உள்ள சில மீனவப் பெண்கள் மழை வருவதற்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் என்ன சம்பந்தம்? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம்தான். ஆம், எது புரிகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறது இயக்குநரின் பின்னணிக்குரல். 

இங்கு கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமல்ல. அதுவொரு மதம். சர்வதேசப் பிரச்னைகளுடன் தொடர்புடையது. கேயாஸ் தியரி போல, மைதானத்தில் அடிக்கப்படும் ஒரு சிக்ஸர் எவருடைய உயிரையோ பறிக்கும் சக்தி வாய்ந்தது. ஏனென்பது படத்தைப் பார்த்தால் புரியும். 

ஆண், பெண்ணுக்கான உறவுச்சிக்கல்தான் இத்திரைப்படத்தின் மையம் என்றாலும் படம் நெடுக இம்மாதிரியான சமூக அரசியல் தொடர்பான பிரச்னைகள், ‘சுளீர்” கேள்விகள், அதிலுள்ள இருண்மை நகைச்சுவை என்று பார்வையாளர்களைத் தொடர்ந்து காலணியால் அடித்துக் கொண்டேயிருக்கிறார் இயக்குநர். 

பார்வையாளர்களுக்கு நிச்சயம் வலிக்கும். ஆனால் சந்தோஷமான வலி. சினிமா எனும் வலிமையான ஊடகத்தைப் போதை மருந்து போல பயன்படுத்தி அரசியல் சுரணையற்ற ஒரு சமூகத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் சினிமாக்காரர்களின் மத்தியில் இப்படிச் சமூகவுணர்வுடன் ஓர் உயிர்ப்புள்ள இயக்குநர் இருக்கிறார் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

நாயகனுக்கும் நாயகிக்குமான பிரச்னைகளை விவரித்துக்கொண்டே செல்லும் இயக்குநர், ஓரிடத்தில் ‘Pause’ பட்டனை அழுத்தி விட்டு, ‘இத்தனை நேரம் இதை கவனித்துக் கொண்டிருந்தீர்களே, ஏரிகளை அழித்து உருவாகியிருக்கும் இந்தக் கட்டடங்களைப் பற்றி யோசித்தீர்களா?’ என்று ‘நச்’சென்று ஒரு கேள்வி கேட்கிறார். படம் முழுக்க இது போல் நிறைய கேள்விகள், கிண்டல்கள். மிக கூர்மையான வசனங்கள். 

**

படத்தின் தலைப்பான ‘தரமணி’ என்பது அற்புதமான குறியீடு. தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், பணியாளர்கள் அதிகமுள்ள பகுதி. உலகமயமாக்கலின் துல்லியமான அடையாளம். 

ஐ.டி துறை என்பது பிரத்யேகமான கலாசாரத்தைக் கொண்டது. எப்போது வேண்டுமானாலும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளக்கூடிய பணிப் பாதுகாப்பின்மை சூழல், வழக்கத்துக்கு மாறான இரவு நேரப் பணி, முந்தைய தலைமுறையால் கனவு கூட காண முடியாத ஊதியம், அது தரும் செளகரியங்கள், இடைஞ்சல்கள், பாலியல் சீண்டல்களைச் சகித்துக்கொள்ளவேண்டிய அவலம் (பெண்களுக்கு), சமூகவுணர்வு அற்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கும்பல் ஒருபுறம். அந்தக் கும்பலில் இருந்து கொண்டே தன்னால் இயன்ற சமூகப் பணிகளை செய்யும் உணர்வாளர்கள் என்று விநோதமான கலவை.

எளிய சமூகத்தின் பல்வேறு கனவுகளைக் கலைத்துக்கொண்டு அவர்களின் உழைப்பையும் குருதியையும் உயிரையும் உறிஞ்சிக் கொண்டுதான் நகரமயமாக்கல் எனும் ‘நரகல்மயமாக்கல்’ உருவாகிறது. ஆலயத்தை உருவாக்குவதற்காக பல்வேறு அடிமைகள் உயிரிழந்த அதே ஆதிக்காலத்துக் கதை நவீன உலகத்திலும் தொடர்கிறது. வறுமையிலிருந்து தப்பிக்க பெருநகரத்துக்குள் வந்து விழும் அந்நிய மாநிலத்தைச் சோந்த ஏழைப் பணியாளனின் சடலம், குருதி கொப்பளிக்க எவரும் கவனிப்பாரின்றி அநாதைப் பிணமாகச் சாலையோரத்தில் கிடக்கிறது. தொலைதூரத்தில் உள்ள பல்லடுக்குக் கட்டடம் பின்னணியில் மங்கலாகத் தெரிகிறது. இப்படி அர்த்தம் பொதிந்த பல காட்சிகள் படம் பூராவும் வந்து கொண்டேயிருக்கின்றன.  

ஆனால் இத்திரைப்படம் ஐ.டி. பணியாளர்களைப் பற்றியது அல்ல. அப்படியொரு விநோதமான கலாசாரத்தின் பின்னணியில் பணிபுரிபவள் அல்தியா (ஆண்ட்ரியா). ஆங்கிலோ இந்தியச் சமூகத்தைச் சார்ந்தவளாக இருப்பதாலும், கணவனைப் பிரிந்து வாழ்பவள் என்பதாலும் மிகக் குறிப்பாக அழகாக இருப்பதாலும் உடல் சார்ந்த தொடர்புக்கு எளிதில் கிடைப்பாள் என்று உயர் அதிகாரியால் எண்ணப்படுபவள். ஆனால் தன் மீது வீசப்படும் பாலியல் சீண்டல்களை சாதுர்யமாகவும் துணிச்சலாகவும் எதிர்கொள்ளத் தயங்காதவள் அவள். கணவன் தன்னிடம் மறைத்த பாலியல் அடையாளத்தை, அதன் சிக்கலை கருணையுடன் மன்னிக்கத் தெரிந்தவள். (தற்பால் சேர்க்கையை காட்சி வடிவத்திலும் கண்ணியமாகவும் கையாண்ட முதல் திரைப்படமாக ‘தரமணி’ இருக்கக்கூடும்). 

ஓர் ஆணினால் ஏமாற்றப்பட்டு, தாயால் வசைபாடப்பட்டு தன் மகனுடன் தனிமையில் அலையும் அல்தியாவுக்கு, நேர்மையான ஒரு இளைஞனைப் பார்த்ததும் சலனம் ஏற்படுகிறது. அவன் நல்லவனாக இருக்கக்கூடும் என்கிற எண்ணம் உருவாகிறது. ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட அவனுடைய துயரத்தைத் தன் காதலின் மூலம் துடைக்க முடியும் என நம்புகிறார். 

**

ஒரு பொண்ணு, ஒரு பையன் கிட்ட காதலில் விழுந்தால் என்னவாகும்?

நாயகன், நாயகி என்று இந்தத் திரைப்படத்தில் எவருமில்லை. என்றாலும் சம்பிரதாயத்துக்காகச் சொல்லவேண்டுமென்றால் வசந்த் ரவி, இந்த படைப்பின் நாயகன். ஒரே திரைப்படத்தோடு ஓய்ந்து போன ‘காதல் ஓவியம்’ கண்ணனை நினைவுப்படுத்துகிறார். ஆனால் உடல்மொழி, உச்சரிப்பு என்று எல்லாவற்றிலும் இயக்குநர் ராமே தெரிகிறார். இது ராமின் திரைப்படங்களில் உள்ள வழக்கமான குறை. ஒரு திரைப்படம் இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம், அதற்காகப் பாத்திரங்களும் இயக்குநரின் தோரணையை நகலெடுப்பது அவசியமா? முதல் படம் என்று தெரியாத அளவுக்கு வசந்த் ரவி அபாரமாக நடித்திருக்கிறார். 

தனக்குக் காதலை தந்த ஆண்ட்ரியாவிடம் வழக்கமான ஆணின் நிலவுடமை மனோபாவத்தோடு ‘அவன் கூட படுத்தியா..’ என்று கேட்ட குரூரத்தைப் பிற்பாதியில் வேறொரு இடத்தில் உணர்ந்து மனம் கலங்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

மக்களிடம் அறிமுகமே இல்லாத நடிகரை உபயோகப்படுத்துவது இயக்குநரின் துணிச்சல் என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்தப் பாத்திரத்துக்கு முன்னணி நாயகர்கள் மட்டுமல்ல, இரண்டாவது, மூன்றாவது நிலையில் உள்ள நடிகர்கள் கூட நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பாத்திரத்தின் தன்மை அப்படி. அழகம்பெருமாள் தன் பாத்திரத்தைத் திறம்பட கையாண்டிருக்கிறார். இறுதிக்காட்சியில் நாயகனின் மீது கோபப்பட்டு விட்டு பின்பு அதே காரணத்துக்காக நன்றியும் சொல்வது மிக நுட்பமான காட்சி. 

படத்தில் வரும் சிறு சிறு பாத்திரங்களும் அபாரமாக நடித்திருக்கின்றன. கதாபாத்திரத் தேர்வில் இயக்குநர் எத்தனை கவனமாக இருந்திருக்கிறார் என்பதற்கான உதாரணம் ஒன்று சொல்லலாம். ஆண்ட்ரியாவின் கணவன் பாத்திரத்துக்குச் சுருள்முடி. அதேபோல் சுருள்முடியுள்ள பையனைத் தேடி நடிக்க வைத்திருக்கிறார்கள். குடும்ப வன்முறைக்குப் பலியாகும் இளம்தலைமுறையின் பிரதிநிதியாக அந்தச் சிறுவன் அற்புதமாக நடித்திருக்கிறான். 

**

இந்தத் திரைப்படத்தின் காட்சிகளை, வசனங்களைச் சிலாகித்துக் கொண்டே போனால் விமரிசனம் நூறு பக்கங்களுக்கு மேல் நீளும். எனவே பலவற்றைச் சொல்லாமல் விடுகிறேன். காட்சிகளின் பின்னணிகளில் எங்கெல்லாம் புறா. மழை, ரயில் போன்ற குறியீடுகள் வருகின்றன என்பதைக் கவனிப்பதும் புரிந்து கொள்ள முயல்வதும் பார்வையாளனுக்குச் சுவாரசியமான அனுபவம்.
 
படத்தின் தலைப்பும் காட்சிகளும் ரயில்நிலையத்தோடு தொடர்புடையவை என்பதால் அது சார்ந்த சத்தத்தோடு தொடங்குகிற யுவனின் பின்னணி இசையின் ரகளை படம் பூராவும் தொடர்கிறது. காட்சிகளில் உள்ள நையாண்டிதனத்தை இசையும் பிரதிபலிக்கிறது. ஆனால் பல இடங்களில் திணிக்கப்பட்ட உணர்வைத் தரும் வகையில் இசை ஒலித்துக் கொண்டேயிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். (இயக்குநர் End credits-ல் In the mood for love போன்ற திரைப்படங்களையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறாரே, யுவன். அதற்கு நியாயம் செய்ய வேண்டாமா).

இந்தத் திரைப்படத்துக்குப் பாடல்களே தேவையில்லை என்று தோன்றுகிறது. என்றாலும் நாயகன் மனம் திரும்பி அது சார்ந்த துயரத்தின் ஊடே நாகூருக்குப் பயணமாகும்போது ஒலிக்கிற ‘பாவங்களை சேர்த்துக் கொண்டு’ என்கிற பாடல் மனதை உருக்க வைக்கிறது. மக்கள் சமூகத்தின் பல்வேறு இயல்பான முகங்களும் காட்சிகளும் இதில் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. 

‘நாய்ல என்ன கெட்ட நாய், நல்ல நாய்... ஆண்கள் எல்லோரும் நாய்கள்தான். அப்பப்ப பிஸ்கெட் போட்டா போதும்’ என்பது போன்ற வசனங்கள் ஆண்கள் குறித்து எள்ளலான மதிப்பீடுகளை வைத்திருக்கிற பெண்களின் அகவுலகைச் சித்தரிக்கிறது. 

தன் உடல் பலத்தால் பெண்களை அடக்கி விட முடியும் என்கிற உயர்வுமனப்பான்மையுடன் ஆணுலகம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறது. அவ்வாறல்ல, ஒரு பெண்ணின் மனத்துக்குள் பயணிப்பதும் அவளுடைய அன்பைப் பெறுவதும் அத்தனை எளிதானதல்ல என்பதைப் பல காட்சிகள் உணர்த்துகின்றன. ஆண்களின் போலியான அதிகாரத்துக்குப் பெண் எந்நாளும் பயப்படுவதில்லை. ‘உனக்குத் துப்பாக்கி சுடத் தெரியாது. அதனால நானே சுட்டுக்கறேன்’ என்று காவல்துறை அதிகாரியின் மனைவி சொல்வதில் உள்ள கோபமும் சீண்டலும் எத்தனை ஆண்களுக்குப் புரிந்திருக்கும்?. இந்தத் திரைப்படத்தின் பல காட்சிகளை ஆண்கள் புரிந்து கொள்வார்களா, ஜீரணிப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. 

நிறைவேறாத காமம், அது சார்ந்த ஏக்கங்கள் நவீன நுட்ப வசதிகளோடு எப்படியெல்லாம் பரவுகின்றன என்கிற சமூகத்தின் அழுகல்தன்மை பல காட்சிகளில் வெளிப்படுகிறது. ‘நான் சாப்பிட்ட நரகலை இந்த ஊருக்கும் தர நினைக்கிறேன்’ என்று பெண்களைப் பழிவாங்க முயல்கிற நாயகன் இறுதியில் ஒரு பெண்ணிடம்தான் சரணடைகிறான். 

தான் திருடிய பணத்தை மனச்சாட்சியின் உறுத்தலுடன் அந்தக் குடும்பத்துக்கு இறுதியில் நாயகன் திருப்பித்தருவதையும் பணமதிப்பிழப்பு என்கிற அதிகார முடிவு எளிய மக்களை அல்லல்பட வைக்கும் குரூரத்தையும் அங்கதப்பாணியில் இணைத்து இயக்குநர் கிண்டலடித்திருப்பது அபாரம். 

‘வாய்ஸ்ஓவர்’ உத்தி என்பது முறையாகப் பயன்படுத்தினால் ரசிக்கத்தக்கதுதான்... ஆனால் இதுவே ஓவராக போனால் எப்படி? கலவியின்போது பக்கத்தில் நின்று ஒருவர் குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தால் அது நன்றாகவா இருக்கும்?

தனது திரைக்கதையின் மையத்தோடு சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளையும் சிறுசிறு இழைகளாக நெய்வது ராமின் பலம். ஆனால் சமயங்களில் இதுவே பலவீனமாக மாறுகிறது. இது போன்ற குறுக்கீடுகளால் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பது குறித்து பார்வையாளன் குழம்பிப் போக வாய்ப்புண்டு. 

ஆனால் இந்தத் திரைப்படத்தில் ராமின் குறுக்கீடுகள் பல சமயங்களில் அபாரமாகவே இருக்கின்றன. அதற்கான விளக்கத்தை படத்தின் கடைசி வரியில் இயக்குநர் தந்திருப்பது சுவாரசியம். 

**

தரமணி – பெண்ணியத் திரைப்படமல்ல. இரு பாலினத்தவரின் பிரச்னைகளையும் இணைத்தே பேசுகிறது. அதிகப் பிரச்னைகளை எதிர்கொள்கிறவர்கள் பெண்கள் என்பதால் அவர்கள் தொடர்பான காட்சிகளின் கனம் அதிகமிருப்பது இயல்பே. 

ஒரு பெண்ணை உடல்பலத்தாலோ, அதிகாரத்தாலோ ஓர் ஆண் எப்போதும் வெல்ல முடியாது. பெண்களின் மனத்தில் தங்களைப் பற்றிய பிம்பம் என்னவாக இருக்கிறது என்பதை ஆண்கள் அறிய நேர்ந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள். பரஸ்பர அன்பின் மூலம் புரிதலின் மூலமுமே ஆண் – பெண் உலகம் அதிகச் சிக்கல்கள் இன்றி இயங்க முடியும் என்கிற போதனையை மிக நேர்த்தியான திரைக்கதையுடனும் காட்சிகளின் அழகியலுடன் விவரிக்கிறது தரமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT