திரை விமரிசனம்

விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ – சினிமா விமரிசனம்

சுரேஷ் கண்ணன்


இதுவொரு விநோதமான பாணியில் அமைந்த நகைச்சுவைப் படம். ஹாலிவுட்டில் ‘Stoner films’ போன்ற வகைமைகள் உண்டு. எவ்வித இலக்கும் இல்லாமல், அதன் போக்கில் காட்சிகள் தன்னிச்சையாக நகர்ந்து கொண்டிருக்கும். பார்வையாளர்களுக்கு மெலிதாக ‘கிச்சு கிச்சு’ மூட்டுவதே இம்மாதிரியான படங்களின் நோக்கம். இந்த மாதிரியானதொரு பாணியை தமிழில் முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார். நல்ல விஷயம்தான்.

ஆனால், என்னதான் ‘விநோத’ வகை நகைச்சுவை என்றாலும் பாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சிகள், சூழல்கள், வசனங்கள் என்று அவற்றிற்கு என்று இருக்கவேண்டிய மெனக்கிடலும் சிரத்தையும் போதுமான அளவு இல்லாத காரணத்தினால், பார்வையாளர்களைக் கவர்வதில் பின்தங்கியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

**

பல்லண்டம், பேரண்டம், பால்வீதி என்று அதீதமான முஸ்தீபுகளுடன் துவங்குகிற திரைப்படம், ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் ‘எமசிங்கபுரம்’ என்கிற கற்பனையான பிரதேசத்தை அறிமுகப்படுத்துகிறது. திருடுவதைத் தங்களின் குலத் தொழிலாக கொண்டுள்ளது ஓர் இனக்குழு. எமராஜா இவர்களின் குலசாமி. எவரையும் காயப்படுத்தாமல், கொல்லாமல், அரசியல் போன்ற வழிகளில் ஈடுபடாமல் திருடுவது இவர்களின் பாணி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் கொடூரமாகக் காட்டப்பட்ட கொள்ளைக் கும்பலை, அதற்கு நேர்மாறாக ‘சிரிப்புத் திருடர்களாக’ சித்தரிக்கிறது இந்தத் திரைப்படம்.

இந்த இனக்குழுவின் தலைவி விஜி சந்திரசேகர். இவர் குறிசொல்வதின் மூலம் அடுத்து செய்யவேண்டிய திருட்டுக்கு இவரது மகனான விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார் என்கிற இரண்டு உதவாக்கரை உதவியாளர்களுடன் ‘தொழில் செய்ய’ சென்னைக்குக் கிளம்புகிறார். ஒரு வீட்டில் திருடும்போது அங்குள்ள குடும்பப்படத்தில் ஓர் இளம்பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கிறார்.

வந்த வேலையை விட்டு விட்டு, அந்தப் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ய திட்டமிடுகிறார். இதன் மூலம் தன்னுடைய 14 வருட தவவாழ்க்கையை நிறைவிற்குக் கொண்டுவருவது அதன் நோக்கம். ஆனால் அந்த இளம்பெண்ணிற்குச் சக மாணவனான கெளதம் கார்த்திக் என்கிற கிறுக்கனின் மீது ஈர்ப்பு உண்டாகிறது.

அந்த இளம்பெண் யார், விஜய் சேதுபதி எதற்காக அவரைக் கடத்த வேண்டும், இந்தப் பயணத்தில் நிகழ்ந்தவை என்ன போன்றவற்றை மென்நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

**

விதவிதமான ஒப்பனைகளில் வரும் விஜய் சேதுபதி, தனது வழக்கமான பாணியில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். ‘ச்சீ.. தள்ளு’ என்று தன்னுடைய உதவியாளர்களைக் கட்டுப்படுத்துவது, தனது தவவாழ்க்கையின் கொடுமையைப் பற்றி மூச்சு விடாமல் நீளமான வசனத்தின் மூலம் விளக்குவது போன்ற காட்சிகளில் கவர்கிறார்.

ஒரு முன்னணி நடிகராக அவர் வளர்ந்து வரும் நேரத்தில், இம்மாதிரியான பரிசோதனை முயற்சிகளுக்குத் தயங்காமல் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுவது ஒருபுறம் பாராட்ட வைக்கிறது என்றாலும் அவர் மீதான நம்பகத்தன்மையை இன்னொருபுறம் சிதைக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.

நாயகிகளையே ‘லூஸூ’ பாத்திரங்களாகச் சித்தரித்துக்கொண்டிருக்கும் போக்கிலிருந்து விலகி நாயகனை அதுபோன்று காட்ட முயன்ற இயக்குநரின் வித்தியாசமான, பெண்ணியச் சிந்தனையைப் பாராட்ட வேண்டும். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா போன்று ஒரு ரசிக்கத்தக்க முட்டாள் பாத்திரத்தை நன்றாகவே கையாண்டிருக்கிறார் கெளதம் கார்த்திக். ‘உனக்கென்ன ‘மெளனராகம்’ கார்த்திக்குன்னு நெனப்பா’ என்று ஓரிடத்தில் கேட்கப்படும் வசனத்தைப் போல தனது தந்தையின் உடல்மொழியை நகலெடுக்க முயன்றிருக்கிறார்.

நாயகி நிஹாரிகாவிற்கு நல்வரவு. எளிமையான அழகுடன் தோன்றும் இவர் நடிக்கவும் முயன்றிருக்கிறார். ‘நேரம் வரட்டும்மா.. சொல்றேன்’ என்று தொடர்ந்து கடுப்படிக்கும் தந்தையை ‘லூஸாப்பா நீ’ என்று உலுக்கும் காட்சி உதாரணம். ஒருவகையில் பார்வையாளர்களின் எண்ணத்தை இந்தக் காட்சி பிரதிபலிக்கும் அதே சமயத்தில், இயக்குநரை நோக்கியும் மனதிற்குள் கேட்க வைத்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் உதவியாளர்களாக வரும் ரமேஷ் திலக்கும், ராஜ்குமாரும் தங்களின் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை மிக எளிதாக முந்திச் செல்கிறார் டேனியல். கெளதம் கார்த்திக்கின் நண்பராக வரும் இவர்தான் படத்தின் மிகப் பெரிய ஆறுதல். பல காட்சிகள் ரசிக்கப்படுவதற்கு இவர்தான் காரணமாக இருக்கிறார். ‘பிரெண்டு… லவ் பெயிலர்’ என்பது போன்று இதுவரை துண்டு வேடங்களில் வந்து கொண்டிருந்த டேனியலுக்கு இத்திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.

‘பாவா’வைப் பத்தி தப்பா பேசினே கொன்னுருவேன்’ என்று தன் கண்களாலேயே காதலைப் பொழியும் காயத்ரி, சில காட்சிகளில் வந்தாலும் ரசிக்கவே வைக்கிறார்.

**

குற்றப்பரம்பரையாக முத்திரை குத்தப்பட்ட இனக்குழு ஒன்றை, தமிழக சூழலில் காட்டினால் பிரச்சினை உருவாகலாம் என்று ஆந்திராவிற்கு நகர்த்திச் சென்ற புத்திசாலித்தனத்தைப் படத்தின் திரைக்கதையிலும் இயக்குநர் காட்டியிருக்கலாம். ‘சிரிக்கலாமா, வேண்டாமா’ என்று தயங்க வைக்கும் அளவில் சில காட்சிகள் நகரும்போது, ‘இதற்குப் போயா சிரிக்க வேண்டும்’ பல காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், டேனியல் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே படத்தை ஓரளவிற்காவது காப்பாற்றுகின்றன. ‘எப்போது முடியும்’ என்கிற சோர்வையும் சலிப்பையும் படத்தின் இரண்டாம் பகுதி உருவாக்கிவிடுகிறது. ஆந்திர மாநிலத்தின் பின்னணியில் காட்சிகள் நகர்வதால் அதன் சினிமா கலாசாரத்தை நக்கலடித்திருப்பது ‘தமிழர்களை’ ரசிக்க வைக்கிறது.

இப்படியொரு அபத்த நகைச்சுவை திரைப்படத்திற்கும் தனது அசாதாரண உழைப்பைத் தந்திருக்கும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரைத் தனியாகப் பாராட்ட வேண்டும். பாடல்கள் பிரத்யேகமான ருசியில் இருக்கிறது என்றால் பின்னணி இசையில் அபாரமாக அசத்தியிருக்கிறார் ஜஸ்டின். ‘எமசிங்கபுரம்’ என்ற பிரதேசம் உண்மையிலேயே இருக்குமோ என்கிற மயக்கத்தை உருவாக்குவதில் கலை இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். கொம்புகளுடன் கூடிய இருக்கை முதற்கொண்டு பல அரங்கப் பொருட்கள் கவனத்தைக் கவர்கின்றன. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் குறைசொல்லுமளவிற்கு ஏதுமில்லை.

‘சூது கவ்வும்’ மாதிரியான ஓர் அபத்த நகைச்சுவைத் திரைப்படத்தை மாறுபட்ட பாணியில் இயக்குநர் தர முயன்றிருக்கிறார் என்று தோன்றுகிறது. அதற்காக அவரைப் பாராட்டலாம்தான் என்றாலும் அதற்கான உழைப்பும், தீவிரமும் இல்லாததினால் வாழ்த்த முடியவில்லை. ஏற்கெனவே சோர்வடைந்திருக்கும் பார்வையாளர்களை ‘இரண்டாம் பாகம் வரக்கூடும்’ என்கிற அறிவிப்பின் மூலம் பயமுறுத்தி வெளியே அனுப்புகிறார்கள்.

‘நல்ல நாள்’ பார்த்து ஒரு திரைப்படத்தை துவங்குவதை விடவும் ‘நல்ல’ திரைக்கதையை நம்புவதே அடிப்படையானது என்பதை உறுதி செய்கிறது இந்தத் திரைப்படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT