திரை விமரிசனம்

கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ - திரை விமரிசனம்

சுரேஷ் கண்ணன்

பல்வேறு நிதிச்சிக்கல்களால் தாமதமான இந்தத் திரைப்படம், சமூகவலைத்தளங்களின் ஏராளமான ‘மீம்ஸ்’ கிண்டல்களைத் தாண்டி ஒருவழியாக வெளியாகியிருக்கிறது. மூன்று வருடங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டாலும் இதன் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் இருந்ததற்குப் பிரதான காரணம் என்று இயக்குநர் கெளதம் மேனனைத்தான் சொல்லவேண்டும். அவருக்கான பிரத்யேகப் பார்வையாளர்கள் ஆர்வமும் நம்பிக்கையும் இழக்காமல் இருந்தார்கள். கூடுதல் காரணமாக தனுஷ் - மேகா ஆகாஷ் கூட்டணியைச் சொல்லலாம். மிகக் குறிப்பாக இதன் பாடல்கள் இந்தத் திரைப்படத்தின் மீதான புத்துணர்ச்சியை இன்றும் தக்க வைத்திருந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. ‘மறுவார்த்தை பேசாதே’ ‘விசிறி’ ஆகிய பாடல்கள் இணையத்தில் வெளியாகி ஏற்கெனவே பிரபலம் ஆகியிருந்தன.

பார்வையாளர்களின் இந்தத் எதிர்பார்ப்பையும் ஆவலையும் கெளதம் மேனன் பூர்த்தி செய்திருந்தாரா என்று பார்த்தால் அவரது பிரத்யேகமான முத்திரைகளும் அழகியலும் படத்தின் பல இடங்களில் காணப்பட்டாலும் ஒட்டுமொத்த அனுபவத்தில் படம் திருப்தியைத் தரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

*

தனுஷ் படிக்கும் கல்லூரியில் ஒரு சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. அதில் நடிக்க வரும் கதாநாயகியான மேகா ஆகாஷைக் கண்டதும் காதல் கொள்கிறார் தனுஷ். எதிர் பக்கமிருந்தும் இணக்கமான சமிக்ஞைகள் வருகின்றன. ஆனால், அழகிற்குப் பின்னால் ஆபத்தும் இருக்கும் என்பது போல, மேகா ஆகாஷூடனான காதல் என்பது மரணத்திற்கு நெருக்கமான சிக்கல்களுக்கும் அனுபவங்களுக்கும் தனுஷை இட்டுச் செல்கிறது.

இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டுப் பிரிந்து போன, தற்போது மும்பையில் உள்ள தனுஷின் மூத்த சகோதரர் சசிகுமாரும் இந்தச் சிக்கல்களின் புள்ளிகளில் வந்து இணைகிறார். இதற்குப் பின்னால் பெரிய சதியொன்றின் முடிச்சும் இருக்கிறது. இந்தச் சிக்கல்களை தனுஷ் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பரபரப்பும் சாவகாசமுமான காதல் மற்றும் ஆக்‌ஷன் பின்னணியில், தன் வழக்கமான கதை கூறல் பாணியில் விளக்கியிருக்கிறார் கெளதம் மேனன்.

*

பொறியியல் படிக்கும் ஒரு மாணவன், அப்பா-அம்மா-தங்கை கொண்ட அவனுடைய குடும்பம், ஓர் அழகான பெண்ணைக் கண்டதும் அவன் காதலில் சட்டென்று விழுவது, அதன் பின்னுள்ள சிக்கல் என்று கெளதமின் வழக்கமான வடிவமைப்பிற்குள்தான் இந்தத் திரைப்படமும் இயங்குகிறது.

மரணத்தை மிக நெருக்கமாக தனுஷ் எதிர்கொள்ளும் ஒரு காட்சியுடன் படம் துவங்குகிறது. அவர் எவ்வாறு அந்தச் சிக்கலில் வந்து மாட்டிக் கொண்டார் என்பது ஃபிளாஷ்பேக் காட்சிகளாக விரிகின்றன. அவ்வப்போது வந்து இணைந்து விலகும் இந்த நான் – லீனியர் பாணியின் கதைகூறல் இதன் திரைக்கதைக்கு வசீகரத்தை அளித்திருக்கிறது. கெளதமின் பிரத்யேகமான அழகியலும் பல காட்சிகளில் வெளிப்படுகிறது.

ஆனால் திரைக்கதையில் நிகழும் சில குழப்பங்களும் தொய்வும் நம்பகத்தன்மையில்லாக் காட்சிகளும் சோர்வை அளிக்கின்றன. கெளதமின் முந்தைய திரைப்படமான ‘அச்சம் என்பது மடமையடா’வின் இன்னொரு வடிவம் போலவே இந்தத் திரைப்படம் அமைந்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.

ரொமான்ஸ் + ஆக்‌ஷன் என்பதுதான் கெளதமின் பொதுவான பாணி. இந்த வரிசையில் அவர் பிரத்யேகமாக ரொமான்ஸ் வகைமையில் உருவாக்கிய ‘வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற திரைப்படங்கள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. போலவே காவல்துறை அதிகாரி பாத்திரத்தின் பின்னணியில் உருவாக்கிய ‘காக்க காக்க, ‘வேட்டையாடு விளையாடு’ ‘என்னை அறிந்தால்’ போன்ற திரைப்படங்களும் வெற்றி பெற்றன. காவல்துறை அதிகாரி, ஆக்‌ஷன் காட்சிகளில் ஈடுபடும்போது அதிலொரு நம்பகத்தன்மை இருந்தது.

ஆனால் நடுத்தர வர்க்கப் பின்னணியில் இருந்து வரும் ஓர் இளைஞன், கடுமையான நெருக்கடிகளில் சாகசம் செய்யும் போது படம் நம்பகத்தன்மையை இழந்து விடுகிறது. ‘அச்சம் என்பது மடமையடா’விற்கு நிகழ்ந்த அதே விபத்துதான் ‘எனை நோக்கி பாயும் தோட்டாவிற்கும்’ ஏற்பட்டிருக்கிறது எனலாம். ஒருவேளை தனுஷின் சாகசங்களைச் சகித்துக் கொள்ளலாம் என்றாலும் திரைக்கதையில் நிகழும் சில குளறுபடிகள் இடையூறாக இருக்கின்றன. சென்னையில் நிகழும் சம்பவங்களின் தொடர்ச்சியாக மும்பையில் நிகழும் சம்பவங்கள் தனித்தனியாக இருக்கின்றன. இரண்டும் சரியாக ஒட்டவில்லை.

இவற்றைத் தாண்டி கெளதம் உருவாக்கும் காதல் காட்சிகளின் அழகியலும் காதலர்களின் நெருக்கமும் உணர்வுகளும் இத்திரைப்படத்தில் மிக அழகான தருணங்களாக வந்திருக்கின்றன. அந்தந்த சூழல்களுக்கு ஏற்ப மிகக் கச்சிதமாக வெளிப்பட்டிருக்கும் வசனங்கள் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கின்றன.

தனுஷ் இன்னமும் பத்து வருடங்கள் கடந்தும் கூட கல்லூரி இளைஞராக நடிப்பார் போலிருக்கிறது. அவருக்கு அமைந்திருக்கும் உடல்வாகு இதற்குப் பெரிதும் ஒத்துழைக்கிறது. கெளதமின் ‘நாயகனாக’ வசீகரமான தோற்றத்தில் மாறியிருக்கிறார். பல இடங்களில் தனது அசாதாரணமான நடிப்பை இயல்பாகவும் அநாயசமாகவும் வழங்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முக்கியமான பலமாக தனுஷைச் சொல்லலாம்.

இதற்குப் பிறகு சில திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டாலும் மேகா ஆகாஷ் இதில்தான் அறிமுகமாகியிருக்கிறார். சற்று புஷ்டியாக இருந்தாலும் காண்பவர்களைக் கிறங்க வைக்கும் பேரழகோடு இருக்கிறார். ஆனால் நடிப்பு என்னும் ஏரியாவில் இவர் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.

இந்தத் திரைப்படத்துடன் ஒட்டாமல் தனியாக தெரிகிறார் சசிகுமார். இவரின் பாத்திரம் நிறைய எதிர்பார்ப்பிற்குப் பிறகு அறிமுகமாவது ஒரு சுவாரசியம்தான் என்றாலும் அதுவே ஒருவகையில் பலவீனமாக இருக்கிறது. ஒரு தமிழ்நாட்டு கிராமத்து ஆசாமியைக் கொண்டு வந்து  ஐரோப்பிய நகரத்தின் தெருவில் கொண்டு வந்து விட்டதைப் போல, ஆங்கிலமெல்லாம் பேசி தன் பங்கை ஒருவாறாகச் சமாளித்திருக்கிறார். சசிகுமாரை கெளதம் அதிகம் பயன்படுத்தவில்லை. போலவே இந்தத் திரைப்படத்தில் சுனைனா எதற்கென்றே தெரியவில்லை. வீணடிக்கப்பட்ட இன்னொரு பாத்திரம்.

பிரதான வில்லன் பாத்திரத்தில் கெளதமின் அஸோஸியேட் இயக்குநரான ‘செந்தில் வீராச்சாமி’ அற்புதமாக நடித்திருக்கிறார். பார்வையாளர்களின் வெறுப்பை எளிதில் சம்பாதிக்கிறார். ஆனால் இவருடைய பாத்திரம் படத்தயாரிப்பாளரா, மாஃபியா ஆசாமியா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

*

ஏறத்தாழ ‘ரோஜா’ திரைப்படத்தின் போது ரஹ்மான் அடைந்த புகழ், இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளரான தர்புகா சிவாவிற்கு கிடைத்திருக்க வேண்டும். பாடல்கள் அத்தனை புத்துணர்ச்சியாகவும் இளமையாகவும் அமைந்துள்ளன. ஆனால் படவெளியீட்டில் நிகழ்ந்த தாமததத்தின் துரதிர்ஷ்டம் சிவாவின் மீதும் பாய்ந்திருக்கிறது போல. காட்சிகளின் பரபரப்பை பின்னணி இசையில் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். தாமரையின் கவித்துவமான பாடல் வரிகள் கூடுதல் வசீகரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

‘ஸ்டண்ட் சிவாவின்’ அசாதாரண உழைப்பு ஆக்‌ஷன் காட்சிகளில் ரகளையாகப் பிரதிபலிக்கிறது. நான்–லீனியர் பாணியில் அமைந்த இந்தத் திரைக்கதை, பார்வையாளர்களுக்குப் பெரிதும் புரியுமாறு எடிட் செய்திருக்கிறார் ஆண்டனி. அவருடைய வழக்கமான ஸ்டைல் இதிலும் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் படம் ஆங்காங்கே தொய்வடைவதை அவராலும் காப்பாற்ற முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட வடிமைப்பு, பாணி போன்றவற்றில் கெளதம் மேனனின் திரைப்படங்கள் தொடர்ந்து இயங்குவது அவரது அசலான அடையாளத்தை ஒரு பக்கம் காட்டினாலும், இன்னொரு பக்கம் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. தன்னுடைய செளகரியமான வட்டத்தை உடைத்துக்கொண்டு வெவ்வேறு பின்னணிகளில் இதற்குப் பின்னான திரைப்படங்களை அவர் இயக்கினால் நன்றாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT