திரை விமரிசனம்

'சில நேரங்களில் சில மனிதர்கள்' : சில இடங்களில் சில தடுமாற்றங்கள் - திரை விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் திரை விமர்சனம்

எஸ். கார்த்திகேயன்

ஒரு விபத்து 4 பேர்களின் வாழ்க்கையில் எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் கதை. 

4 வெவ்வேறு நபர்களின் வாழ்க்கை ஒரு புள்ளியில் இணைகிறது என இண்டர்லிங்க் முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையில் தமிழிலும் சில முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. லோகேஷ் கனகராஜின் மாநகரம் இதற்கு சிறந்த உதாரணம். 

படத்தில் முக்கிய வேடங்களில் அசோக் செல்வன், மணிகண்டன், நாசர், அபி ஹசன், ரித்திகா, ரியா, பிரவீன் பாலா, இளவரசு, கே.எஸ்.ரவிக்குமார், பானுபிரியா,அ ஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களில் அசோக் செல்வனுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்புள்ள வேடம். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். எல்லாவற்றையும் பற்றி தெளிவான பார்வை கொண்ட மனிதராக நாசர் தனது வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். 

நடிகர்களில் அதிகம் கவனம் ஈர்ப்பது மணிகண்டன். எல்லா வேடங்களையும் அவரால் இயல்பாக செய்ய முடிகிறது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு நாம் படம்
பார்ப்பதற்கான முக்கியமான காரணியாக இருக்கிறது. எல்லாவற்றையும் மெத்தனமாக செய்யக்கூடிய ஒரு நிலையில் இருந்து மிகச் சரியானவராக மாறுவதை
தன் நடிப்பில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் ஒரு மாறுதல் நிகழ்கிறது. ஆனால் மணிகண்டனில் நேர்த்தியான நடிப்பால் அதனை
நம்மால் உணர முடிகிறது. இந்தப் படத்தின் வசனத்தையும் மணிகண்டன் எழுதியிருக்கிறார். 

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட். கதையாக சுவாரசியமாக இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம்
செலுத்தியிருக்கலாம். இரண்டாம் பாதிக்கு மேல் படத்துடன் இயல்பாக ஒன்றிவிட முடிகிறது. குறிப்பாக எல்லாரும் தங்கள் தவறுகளை உணரும் தருணங்கள் நெகிழ்ச்சியாக இருந்தது. 

படத்தில் அபி ஹசன் முதன்முறையாக ஒரு படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் அறிமுக விழாவில் தலைகணமாக பேசுவார். அது சர்ச்சையாகும். இன்னும் நடித்த ஒரு படம் வெளியாகாமல் இவர் எப்படி திமிராக இருக்கலாம் என்ற சர்ச்சை உருவாகிறது. இதனை தற்போது ஒரு நடிகரின் மேடை பேச்சை ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. அபி ஹசன் பேசுவது சமூக வலைதளங்களில் எதிரொலிக்கிறது என்பது போன்ற காட்சிகள் சுவாரசியமாக இருந்தன. 

ரிதனின் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. இருப்பினும் பின்னணி இசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். பெரும்பாலும் ஸ்டெடி கேம் ஷாட் மூலம் காட்சிகளை நேரடியாக பார்க்கும் உணர்வை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்.

முதலில் சொன்னதுபோல மணிகண்டனின் கதாப்பாத்திரம் மனம் மாற்றம் குறித்த காட்சிகள் படத்தில் மிக முக்கியமானது. அது தொடர்பான காட்சிகள் வாழ்வின் மீதான ஒரு புரிதலை ஏற்படுத்தலாம். கடுமையான பணி சூழலை எதிர்கொள்பவர்களுக்கு இந்தப் படம் புதிய கண்ணோட்டத்தை கொடுக்கும்.

படத்தின் துவக்கத்தில் கதாப்பாத்திரங்களின் பிரச்னைகள் காட்டப்படுகின்றன. அவை எல்லாம் அழுத்தமே இல்லாமல் மேலோட்டமாகவே இருக்கின்றன என்பது படத்தின் முக்கிய குறை. உணர்வுப்பூர்வமான படங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த சில நேரங்களில் சில மனிதர்கள் கை கொடுக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT