திரை விமரிசனம்

காதலில் வென்றாரா ‘ரோமியோ’? திரை விமர்சனம்

பிரபாகரன் சண்முகநாதன்
கல்யாணத்துக்குப் பிறகு மனைவியின் காதலைப் பெற போராடும் கணவன்கள் குறித்த கதைகள் ஒரு நூறு தமிழில் எழுதப்பட்டும் படமாக்கப்பட்டும் உள்ளன. இந்த நிலையில் ’ரோமியோ’ அதே போலான களத்தைத் தேர்வு செய்து பயணிக்கிறது. படம் வெற்றி பெறுகிறதா?

அறிவு (விஜய் ஆண்டனி) குடும்பத்தின் கடன் சுமை காரணமாக வெளிநாட்டில் பணி புரிகிறார். மிக முக்கியமான விஷயம் அவர் 35 வயது வரை மொரட்டு சிங்கிளாகவே உள்ளார். நகரத்தின் தனிமையையும் இணையர்களாக காதலர்களைப் பார்க்கும்போது உருவாகும் வெறுமையையும் அறிவு கதாபாத்திரம் உணர்ந்து வருகிறது. அதனை தனது முக பாவனைகள் மூலமாக கடத்த விஜய் ஆண்டனி பெரிதும் முயற்சிக்கிறார்.

சென்னையில், சினிமாவில் கதாநாயகியாகும் கனவோடு வாழ்ந்து வருபவர் லீலா (மிருணாளினி). அவரைப் போலவே சினிமா கனவோடு இருக்கும் நண்பர்களுடன் வசித்து வருகிறார். பெற்றோர்களிடம் ஐ.டி.யில் வேலை செய்வதாகக் கூறி சினிமாவில் வாய்ப்பு தேடுகிறார்.

இந்த நிலையில் தனது காதலைத் தேடி அறிவு இந்தியா திரும்புகிறார். காதல் வந்த பிறகுதான் கல்யாணம் செய்ய வேண்டும் என விரும்பும் கதாநாயகன், ஒரு துக்க வீட்டில் லீலாவைப் பார்க்கிறார். அவர்கள் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு நடக்கிறது. அதன் பிறகு இருவரும் இணைகிறார்களா, அறிவு லீலாவின் காதலை பெற்றாரா என்பதே கதை.

கல்யாணமா? கனவா? என தடுமாறும் மனைவி. மனைவியின் அன்பைப் பெற முயற்சிக்கும் கணவன். இப்படியான ஒரு வரிக் கதையை விரித்து படமாக்கியுள்ளார்கள்.

மனைவியின் கனவை நிறைவேற்ற போராடும் கணவன் பற்றிய கதைக் களம் தமிழுக்குப் புதிதல்ல. சத்யராஜ், நமீதாவின் விளையாட்டுக் கனவை நனவாக்கும் ’இங்கிலீஷ்காரன்’ தொடங்கி ‘நட்சத்திர ஜன்னலில்’ பாடும் சரத்குமார், மனைவி தேவயானியை கலெக்டர் ஆக்கும் படம் வரை பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

கல்யாணத்துக்கு பிறகு கணவனை வெளியே தள்ளி கதவடைக்கும் மனைவிகளும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ’மெளன ராகம்’ தொடங்கி சின்ன மெளன ராகமான ’ராஜா ராணி’ வரை.

எதுவுமே புதிது இல்லாத களத்தில் எதுவுமே புதிதாக இல்லாமல் ஒரு படத்தை எடுப்பதற்கும் பெரிதும் மெனக்கெட வேண்டியிருக்கிறது.

தென்காசி, விஜய் ஆண்டனியின் ஊராகக் காட்டப்படுகிறது. பெயருக்கேனும் வட்டார வழக்கு மொழி இருந்திருக்கலாம். நாடகீயமான தருணங்களும் கதையமைப்பும் பொறுமையை சோதிக்கின்றன.

படத்துக்குள் ஒரு படம் எடுக்கிறது போல காட்சிகள் வருகின்றன. விஜய் ஆண்டனி இயல்பாக இருப்பது அவருக்கு பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். இயல்பாக இருக்கிறாரா அல்லது படத்தில் நடிக்கிறாரா என்பதை ரசிகர்களால் வேறுபடுத்தி பார்க்கவே முடியாது.

மிருணாளினி நடிப்பில் மெருகேறி உள்ளார். கோபத்தை காட்டுகிற இடங்களிலும் ஏமாற்றைத்தை காண்கிற இடங்களிலும் லாவகமாக நடித்துள்ளார். லீலா கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் அவர் குறைவாகவே தன்னை வெளிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இசை பரத் தனசேகர். எல்லா பாடல்களும் முன்பு எங்கோ கேட்டது போலவே இருக்கிறது. 

வசனங்கள் தேய்வழக்காக உள்ளன. விஜய் ஆண்டனி ஒரு காட்சியில் ஆண் என நிரூபிக்க, ”அடிச்சா அவன் ஆம்பளையா” என பேசுவதை மிருணாளினி கேட்டு ’என்ன ஒரு மனுஷன்யா’ என நினைப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை காலம்தான் ஆண்கள் பெண்களுக்கு ஆதரவாக இருந்தால் பெண்கள் காதல்வயப்படுவார்கள் என பேசுவார்களோ.

யோகி பாபு கதாபாத்திரம் விஜய் ஆண்டனிக்கு ஆலோசனை கொடுக்கிற பெயரில் இடைச்செருகலாக வந்து செல்கிறது. நகைச்சுவை என அவரும் விடிவி கணேஷும் பேசுகிற வசனங்கள் எதுவும் எடுபடவில்லை.

லீலாவின் நண்பர்களாக வருபவர்களில் ஷாரா ஆங்காங்கு சிரிப்பூட்டுகிறார்.

தங்கை காட்சிகள் ஒரு லேயர் வருகிறது. இந்த காலத்தில் இப்படியான காட்சிகள் நம்பும்படி இல்லை அல்லது நம்பும்படி எடுக்கப்படவில்லை.

இயக்குநர் அந்த படத்தில் வருகிற இயக்குநரைப் போலவே ஒரு தயாரிப்பாளரை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து கடைசியில் விஜய் ஆண்டனியிடம் வரும்போது படத்தில் வருவது போலவே ‘நான் நடித்துவிடுகிறேன்’ என விஜய் ஆண்டனி புறப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். ஒரு மாறுதலுக்கு இந்தப் படத்தை அவர் மனைவி தயாரித்திருக்கிறார். அவ்வளவே.

கதைத் தேர்வில் நாயகரும் கதை எழுதுவதில் இயக்குநரும் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம்.

புரட்சிகரக் காதலனான ரோமியோ, தேய்வழக்குக் கதையில் சிக்கிக் காதலைத் தொலைத்து நிற்பது பரிதாபத்துக்குரியது. 

- பிரபாகரன் சண்முகநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT