தினமணி 85

பாரதியார்

DIN

பாரதியார்

எல்லையற்ற இருட்படலத்தை விரட்டும் ஒளியைப் போல, தறிகெட்டு, தளர்ந்து நம்பிக்கையையும் இழந்து மடியும் தறுவாயிலிருக்கும் மனித சமூகத்திற்கு புதிய சக்தியை, ஏன் ஒரு புதிய ஜீவனையே அளிக்கும் ஓர் வீரனது பிறவிக்கு, சிருஷ்டியின் மகத்தான புதிர்.

"எப்போதுயெப்போது தர்மம் அழிந்து போய், அதர்மம் எழுச்சி பெறுகிறதோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன்.''

இதுதான் நமது பெரியோர்கள், அந்தப் புதிருக்குக் கண்டுபிடித்த ஒரு விடை. கவிஞனும் பல அம்சங்களில் ஒரு வீரன்தான். அவனும் சிருஷ்டியின் புதிர்களில் ஒன்று. கவிஞனை ரஸிக்க முடியும். அவனைக் கேள்வி கேட்க, பிரித்துப் பிரித்து அளிக்க முடியாது. பழைய பெருவாழ்வின் கனவுகளைத் தோற்றுவிப்பவனும் அவனே; புதிய வருங்கால இலட்சியத்தை இசைப்பவனும் அவனே. இருளில் அவனது குழலோசை நம்பிக்கையைத் தருகிறது. போர் முனையில் அவனது சங்கநாதம் வெற்றியைத் தருகிறது. செழிப்பில் மோட்ச சாம்ராஜ்யத்தையே சிருஷ்டிக்கிறது.

பாரதி ஒரு கவி... தேசீய கவி. அதாவது தேசத்தின் சோர்விலே அதன் தாழ்வில் பிறந்த தவக்குழந்தை. தேவியை அவர் கண்ட கோலம்.

"ஆடை குலைவுற்று நிற்கிறாள்- அவள் ஆவென்றழுது துடிக்கிறாள்.''
 என்பதுதான்.

தேவியின் பெருவாழ்விலே அவளது சிறப்பைக் கண்டவன் அவனே. பாரத தேசத்தை உலகத்தின் இலட்சியமாகக் கண்டான்.

 பேரறமும் பெருந் தொழிலும் பிறங்கும் நாடு,
 பெண்கள் எலாம் அரம்பையர் போலொளிரும் நாடு,
 வேள்வி எனு மிவையெல்லாம் விளங்கும் நாடு,
 சோரமுதற் புன்மை எலாம் தோன்றா நாடு,
 தொல்லுலகின் முடிமணிபோல் தோன்றும் நாடு.

பழைய பெருவாழ்வைப் பெற வேண்டும் என்பது அவரது ஆசை; அல்ல, அவரது ஜீவனத் துடிதுடிப்பு. நிலையற்ற சோர்வுகள், பழைய கனவுகள், புதிய இலட்சியங்கள், சிருஷ்டி ரகசியம் இவைதான் பாரதி. இவற்றின் பல்வேறு உருவங்கள்தான் அவரது கவிதை.

கிரேக்கக் கதைகளிலே பிராமிதீயுஸ் என்பவன் மக்களுக்காக தெய்வலோகத்திலிருந்து அக்னியைக் கொணர்ந்து, அதனால் இன்னல்கள் அடைந்தான் என்பது ஒன்று. அந்தக் கதை பொய்யாகவே இருக்கட்டும். இன்று புதிய ஒளியைக் கொண்டு வந்ததின் பயனை அடைந்தவர் பாரதி. அவரை ஏன் இரண்டாவது பிராமிதீயுஸ் என்று கூறலாகாது?

"பள்ளத்திலே நெடுநாளழுகுங் கெட்ட பாசியை ஏற்றிவிடும். பெருவெள்ளத்தைப் போலருள்'' கொணர்ந்தவர் பாரதி. அவை மறைவாக தமக்குள்ளே பழங்கதைகளைப் போலாகிவிடுமோ என்ற பயம் மற்ற மாகாணங்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது. தேசக் கவி என்றவுடன் எவ்வளவு பெருமிதங்கொண்டு போற்றுகிறார்கள். நாம் என்ன ஆழ்ந்த உணர்ச்சியேயற்ற மரக்கட்டைகளா? அல்லது பாரதியார் படம் பிடித்துத் தந்த வேடிக்கை மனிதர்களா, போலிகளா? இதுவும் கவிஞனது பிறப்பைப் போல் ஓர் புதிர்தான் போலும்.

கவிஞன் காத்திருக்கிறான், தனது தெய்வீகமான கனவுகளை வைத்துக்கொண்டு. அவை,

வெள்ளமடா, தம்பீ! விரும்பியபோ தெய்தி நினதுள்ள மிசைத்தான் மூவூற்றாய்ப் பொழியுமடா!

பாரதியின் பெருமையைப் போற்றும் வகையில் தினமணியில் 11.9.1935-ல் வெளியான தலையங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT