முகப்பு
கட்டுரைகள்

மேற்கு வங்கத்தின் மின்னல்!

"மேற்கு வங்கத்தின் மின்னல்' என்பது மம்தா பானர்ஜிக்குத் தரப்பட்டிருக்கும் காரணப் பெயர் என்றுகூடக் கருதலாம். மின்னலைப்போல, அவர் எப்போது வருவார், எப்படித் தாக்குவார் என்பது யாராலும் யூகிக்க முடியாத விஷயம

Updated On : 25 டிசம்பர், 2023 at 1:54 PM
பகிர்:

"மேற்கு வங்கத்தின் மின்னல்' என்பது மம்தா பானர்ஜிக்குத் தரப்பட்டிருக்கும் காரணப் பெயர் என்றுகூடக் கருதலாம். மின்னலைப்போல, அவர் எப்போது வருவார், எப்படித் தாக்குவார் என்பது யாராலும் யூகிக்க முடியாத விஷயம். அவரை ஒரு புயல் என்று கூறுபவர்களும், மின்னல் என்று அழைப்பவர்களும் ஒருசேர ஒத்துக்கொள்ளும் விஷயம், அப்பழுக்கில்லாத அரசியல்வாதி இந்தப் பெண்மணி என்பதே!

  1969-ல் காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு இந்திரா காந்தியின் சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் மம்தா பானர்ஜியும் ஒருவர். 1955 ஜனவரி 5-ம் தேதி பிறந்த மம்தா பானர்ஜிக்கு ஓர் அண்ணன். முதுகலைப் பட்டம் பெற்ற மம்தா பானர்ஜி, வசந்திதேவி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பும், பிறகு ஜோகேஷ்சந்திர சௌத்ரி கல்லூரியில் சட்டப்படிப்பும் படித்துத் தேறியவர்.

  படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் உறுப்பினராகி விட்டவர். சட்டப்படிப்பும் படித்து முடித்தபோது, முழுநேரப் பொதுவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டார். ஏழை, எளியவர்களுக்கு இலவச சட்ட உதவி தருவது, மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குரல் எழுப்புவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள் முறையாகச் சென்றடையப் பாடுபடுவது, எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் துணிந்து சென்று தட்டிக் கேட்பது என்று எழுபதுகளில் இளம் மம்தா பம்பரம் போலச் சுழல்வதைப் பார்த்த பலரும், ஒரு நாள் இந்தப் பெண் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி வியந்திருக்கிறார்கள். "நீ வங்கத்தின் இந்திரா காந்தி' என்று பலரும் பாராட்டியது உண்டு.

  முதலில் மேற்கு வங்க மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட மம்தா பானர்ஜி, விரைவிலேயே தெற்கு கோல்கத்தா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது துடிப்பான செயல்பாடுகளால் கவரப்பட்ட அன்றைய மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கனிகான் சௌத்ரி 1984 பொதுத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், இப்போதைய மக்களவைத் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜிக்கு எதிராகப் போட்டியிட இவருக்கு வாய்ப்பைப் பெற்றுத் தந்தபோது பலர் சிரித்தனர். ஆனால், சோகத்தில் ஆழ்ந்தது என்னவோ சோம்நாத் சாட்டர்ஜிதான். முதல் தேர்தலிலேயே மம்தாவுக்குக் கிடைத்தது மாபெரும் வெற்றி.

  மின்னலாக மக்களவையில் நுழைந்த மம்தாவின் போராடும் குணமும், சுறுசுறுப்பும் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கவர்ந்தது. இளைஞர் காங்கிரஸின் தலைவர் பதவியில் மம்தாவை அமர்த்தினார் ராஜீவ் காந்தி. 1989-ல் காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் தோல்வியைத் தழுவிய மம்தா பானர்ஜி, 1991-ல் தெற்கு கோல்கத்தா மக்களவையில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றுமுதல் இன்றுவரை ஐந்து தேர்தல்கள் வந்து போய்விட்டன. இடதுசாரிகளால் அசைக்க முடியாத மம்தாவின் கோட்டையாகத் தெற்கு கோல்கத்தா தொடர்கிறது.

  1991-ல் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை, இளைஞர் நலம், விளையாட்டு போன்ற துறைகளில் இணையமைச்சராகப் பணியாற்றிய மம்தாவுக்கு மந்திரி பதவியின் கட்டுப்பாடுகளும், வரைமுறைகளும் எரிச்சலைத் தந்தன. தன்னுடைய கோரிக்கைகள் ஏற்கப்படுவதில்லை, செயல்படுத்தப்படுவதில்லை என்கிற கோபம் மேலோங்கி தான் ராஜிநாமா செய்வதாக ஒரு பேரணியில் அறிவித்துவிட்டார். நரசிம்ம ராவ் எவ்வளவோ சமாதானம் செய்தும் பயனில்லை. 1993-ல் அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டார்.

  காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளின் அடிவருடியாக இருக்கிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு. 1997-ல் திரிணமூல் காங்கிரஸ் என்கிற அமைப்பை ஏற்படுத்தி, தனி வழி நடக்கத் தொடங்கினார் மம்தா பானர்ஜி. இப்போது காங்கிரஸ் கட்சி அவரிடம் 14 இடங்களைப் பெற்றுக் கொண்டு கூட்டணி அமைத்திருக்கிறது. மம்தா ஏனைய 28 இடங்களில் போட்டியிடுகிறார்.

  1999-ல் 8 மக்களவை உறுப்பினர்களுடன் திரிணமூல் காங்கிரஸ், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்தபோது, மத்திய ரயில்வே அமைச்சராகப் பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி. 1997-ல் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கம் புறக்கணிக்கப்படுகிறது என்கிற கோபத்தில், தான் போர்த்திக் கொண்டிருந்த கம்பளியை அவர்மீது தூக்கி எறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறிய அதே மம்தா இப்போது ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த அதே ரயில்வே அமைச்சர் பதவியைக் கேட்டு வாங்கினார். மேற்கு வங்கத்துக்கு மிக அதிகமான சலுகைகளைத் தனது 2000-வது ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வழங்கித் தனது கோரிக்கையையும் ஆதங்கத்தையும் தீர்த்துக் கொண்டார் மம்தா.

  தனது எண்ணம் நிறைவேறியதாலோ என்னவோ, அடுத்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய மம்தா தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அமைச்சரவையிலும் இல்லை. மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும், இடதுசாரிகளின் வெற்றியை அவரால் தடுக்க முடியவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சராக 2004 வரை தொடர்ந்தார்.

  எட்டு உறுப்பினர்களைக் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் 2004 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது மம்தா பானர்ஜியின் தெற்கு கோல்கத்தாவில் மட்டும்தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக மம்தாவுக்கும் திரிணமூலுக்கும் பல பின்னடைவுகள். கோல்கத்தா மேயர் பதவி கை நழுவியது. 2006 சட்டசபைத் தேர்தல்களிலும் படுதோல்வி. பாதிக்கு மேல் அந்தக் கட்சியின் பலம் குறைந்துவிட்ட நிலைமை. அதனால் எல்லாம் மம்தா சோர்ந்து போய்விடவில்லை. சிங்குர் மற்றும் நந்திகிராமம் நாடு தழுவிய பிரச்னையாகியதற்கு, அவர்தான் காரணம் என்பது உலகப் பிரசித்தம்.   மம்தா தீதியின் சுண்டுவிரல் அசைந்தால் போதும், கோல்கத்தா ஸ்தம்பித்துப் போய்விடும். மம்தா பானர்ஜியின் பேரணிகளுக்குத் திரண்டு வரும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தைப் பார்த்து ஜோதிபாசு உள்பட இடதுசாரி தலைவர்கள் மிரண்டு போன சம்பவங்கள் பல.

  1998-ல் கோல்கத்தாவில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு சீதாராம் கேசரி தலைமையில் நடந்தது. சோனியா காந்தி அந்த மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினர். மம்தா பானர்ஜி அதேநாளில் கோல்கத்தா பிரிகேட் சாலையில் ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் மாநாட்டுக் கூடாரத்தில் சில நூறுபேர் மட்டும். மம்தாவின் பேரணியில் லட்சக்கணக்கில் மக்கள் வெள்ளம். சோனியா காந்தி மற்றும் சீதாராம் கேசரியின் முகங்களில் அசடு வழிந்தது. மம்தாவைக் கட்சியிலிருந்து வெளியேற வைத்தவர்கள் அவர்கள் இருவரும்தான்.

  நீதிக்காகவும், நியாயத்துக்காகவும் போராடுவது என்பது மம்தாவுக்கு இயல்பாகவே அமைந்த குணம். பலரும் அவரை வங்காளிகள் வணங்கும் காளியாகப் பார்ப்பது அதனால்தான். நரசிம்ம ராவ் ஆட்சியில் ஆளும் கட்சி உறுப்பினரான மம்தா, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மக்களவையில் தர்னாவில் அமர்ந்துவிட்டார். ஒரு தடவை சமாஜ்வாதி கட்சி எம்.பி. அமர்சிங் ஏதோ எக்குத்தப்பாகக் கூறிவிட்டார். மக்களவையிலேயே அவரது சட்டைக் காலரைப் பிடித்துச் சண்டைக்குப் போய்விட்டார் மம்தா.

  இன்னொரு தடவை, சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் தரோகா பிரசாத் சரோஜ் என்பவர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராகப் பேசியபோது, அவரது சட்டையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து சபைக்கு வெளியே கொண்டு போய்விட்டுவிட்டார். சபையே அதிர்ந்துபோய்விட்டது. மத்திய அமைச்சராக இருந்தபோது, மேற்கு வங்கத் தலைமைச் செயலகத்தில் தர்னாவில் அமர்ந்துவிட்டார் மம்தா. மத்திய அரசு தர்மசங்கடத்தில் நெளிந்தது. பிறகு சமாதானம் செய்யப்பட்டார்.

  மம்தா தீதி எப்படி எங்கே வாழ்கிறார்? கோல்கத்தாவின் ஹரிஷ் சாட்டர்ஜி தெரு என்பது இரண்டு புறமும் ஒர்க் ஷாப்புகள் நிறைந்த குறுகிய சாலை. ஒரு வாகனம் நுழைந்தால், எதிரில் இன்னொரு வாகனம் வர முடியாது. அந்தச் சாலையில், வாசல் முற்றத்தில் நந்தியாவட்டை மற்றும் செம்பருத்திச் செடிகள் காணப்படும் ஓர் ஓட்டு வீடுதான் மம்தா பானர்ஜியுடையது. ஓட்டுக்கு மேல் பூசணிக்கொடி படர்ந்திருக்கும்.

  கோல்கத்தாவில் ஒருமுறை அன் றைய பிரதமர் வாஜ்பாய் இவரது வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு ஆச்சரியத்தில் நிலைகுலைந்தார்.

  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னானும், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரும், அமெரிக்க அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் மம்தா தீதியைப் பார்க்க இந்த ஓட்டு வீடைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பது வாஜ்பாயிக்கு மட்டுமல்ல, எல்லோராலுமே நம்ப முடியாத உண்மையிலும் உண்மை.

  ஒரே அறையும் சமையலறையும் கொண்ட பகுதியில் மம்தா பானர்ஜியும் அவரது தாயாரும் வசித்திருக்க இன்னொரு பகுதியில் திருமணமான அண்ணன் குடும்பம். முன் பகுதியில் இரண்டு அறைகள் கொண்ட இடத்தில்தான் திரிணமூல் காங்கிரஸின் தலைமையகம். அங்கேதான் கட்சித் தொண்டர்களையும் தலைவர்களையும் மம்தா பானர்ஜி சந்திக்கிறார். வீட்டிற்குப் பின்புறம், ஓர் ஓடை. ஓடைக்கு அந்தப் புறத்தில் அலிப்பூர் ஜெயிலின் சுவர். மம்தா திருமணம் செய்துகொள்ளவில்லை. பொதுவாழ்வுக்கு அது முட்டுக்கட்டை என்பது மம்தாவின் கருத்து. திருமணமாகாத அரசியல்வாதியான இந்தப் பெண்மணியைப் பற்றி இதுநாள்வரை எந்தவித அபவாதமும் வந்தது கிடையாது. மம்தா ஒரு நெருப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.

  கதர் புடவை, ரப்பர் செருப்பு, முகத்தில் யாருக்கும் பயப்படாத, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயாராக இருக்கும் நேர்கொண்ட பார்வை. இதுதான் மம்தா பானர்ஜி. வீட்டில் அவர்தான் சமையல். பாடிக்கொண்டே மம்தா சமைப்பதைக் கேட்டு ரசித்தவர்களுக்குத்தான் தெரியும் மம்தா நன்றாகப் பாடுவார் என்று. ஏன், அவர் நல்ல ஓவியரும்கூட. கவிதைகள் எழுதுவார். மனித உரிமை பற்றியதாக இருக்கும் அவரது கவிதைகளின் உள்பொருள்.

  மம்தாவின் கட்சியில் இந்த முறை பல திரைப்பட நடிகர், நடிகையர் சேர்ந்திருக்கிறார்கள். சிலர் வேட்பாளர்களாகவும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எந்த சினிமா நடிகரானாலும் சரி, மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை தீதிதான் ஹீரோ. ஏனைய அனைவரும் ஜீரோ. அதுதான் நிஜம்.

  மம்தா பானர்ஜி என்கிற மேற்கு வங்க மின்னல் இந்த முறை இடதுசாரிகளின் கோட்டையைத் தாக்கி விரிசலடையச் செய்யுமா இல்லை தகர்த்துத் தரைமட்டமாக்குமா என்பதை முடிவுகள் வெளிப்படுத்தும்! 

முழு கட்டுரையைப் படிக்க →