ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார மையமாக விளங்குவது அதன் பாதுகாப்புக் குழுவேயாகும். பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பு நாடுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தினால் ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானம் எதையும் நிறைவேற்ற முடியாது என்பது அறிந்ததே.
ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்துக்குப் பின்பு உலக நாடுகள் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன. பொருளாதாரம், அறிவியல், தொழில், கல்வி போன்றவற்றில் உலக நாடுகளிடையே வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இச் சூழலில் ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச அளவில் வலுவடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையை சீரமைப்பதில் முதல் கட்டமாக பாதுகாப்புக் குழுவுக்கு சர்வதேச சமுதாயம் பெற்றுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப புதிய வடிவம் கொடுப்பது அவசியமாகும்.
இந்த வகையில் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை தோன்றிய போது அமெரிக்க ஐக்கிய நாடுகள், சோவியத் ரஷியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளுக்கு பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. இக் குழுவில் ஆறு உறுப்பு நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும் என்றும் வரையறுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினர்களை இரண்டாண்டு காலத்துக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். பதவியிலிருந்து ஓய்வு பெறும் நாடு உடனடியாக மீண்டும் நிரந்தரமற்ற உறுப்பினராக வர இயலாது. ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா ஆறுமுறை பணியாற்றியுள்ளது.
உலகில் நிகழ்ந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு 1965-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் சீனா நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்த்தப்பட்டது. இதைப் போலவே இக் குழுவில் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஐந்திலிருந்து பத்தாக உயர்த்தப்பட்டது. சர்வதேச அரங்கில் மாற்றங்களுக்கு ஏற்ப பாதுகாப்புக் குழுவின் வடிவத்தை மாற்றுவது அவசியம் என்பதற்கு இது முன்னோடியாகும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டத்தில் ரஷியா, அமெரிக்கா பனிப் போர் முடிவுக்கு வந்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இணைப்பு, ஓரிரு புதிய நாடுகள் உருவாதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நாடுகளிடையே பொருளாதார, தொழில், அறிவியல் போன்ற துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் பாதுகாப்புக் குழுவின் அமைப்பை மாற்றுவது தேவையானது.
காலத்துக்கு ஏற்ப பாதுகாப்புக் குழுவை அமைக்க தவறியதால்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பு இருந்த சர்வதேசச் சங்கம் வீழ்ச்சியடைந்தது என்பது சரித்திரம் கூறும் படிப்பினை. சர்வதேச சங்க பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய 5 நிரந்தர உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், 1939-ல் இந்த எண்ணிக்கை பல காரணங்களால் இரண்டாகக் குறைந்துவிட்டது. இதன் எதிரொலியாகவே சர்வதேசச் சங்கம் தோல்வியடைந்தது. இதனால் தற்போதைய சர்வதேச சூழலுக்கு ஏற்ப அதிகார சமநிலையை உருவாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் மாற்றம் செய்யப்படாவிடில் ஐக்கிய நாடுகள் சபை சிறப்பாக செயல்பட முடியாது.
கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் பொறுப்பைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என இந்தியா கோரி வருகிறது. இதைப் போலவே ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளும் நிரந்தர உறுப்பினர் தகுதியைக் கோரி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களை நிறைவேற்ற இந்தியா மகத்தான பங்கை ஆற்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைதிப் படைப் பணிகளில் இந்தியா சிறப்பாக தமது பணியைச் செய்துள்ளது. உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியான 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர்.
மக்கள் தொகை அடிப்படையிலும் இந்தியாவுக்கு பாதுகாப்புக் குழுவில் நிரந்தர பிரதிநிதித்துவம் வழங்க வேண்டியது நியாயமானது.
இந்தியா அறிவியல், அணு ஆயுதத் தொழில்நுட்பம், தொழில், கல்வி, பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு முழுத் தகுதி உள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்க வேண்டும். மேலும் தற்போது பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம் பெற கோரிக்கை விடுத்த நாளிலிருந்தே ரஷியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் நிலைமையை ஆதரிக்கிறோம் என்று பிரான்ஸ் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. இந்தியாவின் கோரிக்கைக்கு இங்கிலாந்தும் ஆதரவு தெரிவித்து வருகிறது.
அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவின் கோரிக்கைக்கு இதுவரை நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. வளர்ந்து வரும் இந்திய-அமெரிக்க உறவுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் சம்மதத்தை இந்தியா பெற வேண்டும். தற்போது இந்தியா - சீனா இடையேயும் உறவு வலுவடைந்துள்ளது.
ஷாங்காய் ஒப்பந்த நாடுகள் அமைப்பில் பார்வையாளர் தகுதியை ஏற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சீனாவின் ஆதரவை இந்தியா பெற இயலும். இவ்வாறு 5 வல்லரசுகளின் ஆதரவை பெற தக்க ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியா பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினராக வியத்நாம், லாவோஸ், சைப்ரஸ், சிலி, மொரீஷியஸ், பூடான், போர்ச்சுகல் உள்ளிட்ட பல நாடுகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற இந்தியா தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் பல தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கும். அதைத் தகர்க்க இந்தியா தக்கத் திட்டங்களை தீட்ட வேண்டும்.
தற்போது புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு விரைவாக செயல்பட்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற பாடுபட வேண்டியது அவசியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.