கட்டுரைகள்

கறுப்புப் பணமும் கள்ள நோட்டும்!

கள்ளக் கடத்தல்காரர்கள், வரி ஏய்ப்போர், போதைப் பொருள் கடத்துபவர்கள், அரசியலில் லஞ்சம் பெற்றவர்கள், பயங்கரவாதிகள் எனப் பலர், கணக்கில் வராத பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். லண்டனில் சமீபத்தி

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

கள்ளக் கடத்தல்காரர்கள், வரி ஏய்ப்போர், போதைப் பொருள் கடத்துபவர்கள், அரசியலில் லஞ்சம் பெற்றவர்கள், பயங்கரவாதிகள் எனப் பலர், கணக்கில் வராத பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். லண்டனில் சமீபத்தில் கூடிய ஜி-20 நாடுகள் மாநாட்டில் கறுப்புப் பணத்தைப்பற்றிய விவாதம் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசு கோரிக்கை விடுத்தால் சுவிட்சர்லாந்து வங்கிகள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுடன், அந்த நாடுகள் விரும்பினால் கறுப்புப் பணம் முடக்கப்பட்டு அந்தந்த அரசுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும் என்று மாநாட்டில் பல நாட்டுத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர். அப்படி விவரங்களைத் தர மறுத்தால் சுவிட்சர்லாந்து மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

  சுவிட்சர்லாந்து வங்கிகள், சிறப்புச் சட்டமான ரகசியப் பாதுகாப்புச் சட்டங்களின்படி இயங்குகின்றன. எனவே, அதன் நிர்வாகம் எந்தச் சூழ்நிலையிலும் ரகசியங்களை வெளியிட முடியாது என்று பிடிவாதமாக உள்ளது. இந்த வங்கிகளின் போக்கு பல கேடுகளை விளைவிக்கும் என்று நினைக்காமலும், பன்னாட்டு நலனைக் கருதாமல் கறுப்புப் பணத்தைக் குறித்து ஒத்துழைக்க அறவே மறுக்கிறது.

  சுவிட்சர்லாந்தில் இம் மாதிரி நிலைப்பாடு ஏற்பட வரலாற்றுச் செய்திகளும் உண்டு. சுவிட்சர்லாந்து நடுநிலை நாடாக எப்பொழுதும் செயல்பட்டு வருகின்றது. அதன் மீது போர் தொடுக்க இயலாது. சுவிட்சர்லாந்து எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க மாட்டோம் என்ற நிலையில், பாதுகாப்புக்கான ஆயத்தங்களை செய்து கொள்வதில்லை என்ற பிரத்யேகத் தன்மையைக் கொண்டுள்ளது.

  இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யூதர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் தங்களது பணத்தை வைப்பீடு செய்தனர். அதை அந் நாட்டு அரசு ரகசியமாக வைத்திருந்தது. அதற்காகவே ரகசியப் பாதுகாப்புச் சட்டமும் கொண்டு வரப்பட்டது. ஆனால், இன்றைக்கு நிலைமை வேறு. அழிவு சக்திகளின் பணங்கள், லஞ்சப் பணங்கள் எல்லாம் செல்கின்ற இடமாக சுவிஸ் வங்கிகள் அமைந்துவிட்டன. தற்போது அங்கோலா, பெர்முடா ஆகிய நாடுகளின் வங்கிகளிலும் பணம் போடப்படுகிறது.

  இந்தியாவில் ஏறத்தாழ 95 லட்சம் கோடி கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் இருப்பதாக ஒரு கணக்கீடு உள்ளது. சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ள வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

  பிலிப்பின்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் மார்கோஸ், இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுகார்தோ போன்றோர் தங்களது பணங்களை சுவிஸ் வங்களில் போட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்கா, சுவிஸ் வங்கிகளை மிரட்டி தற்போது கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது.

  இந்தியாவில் பல லட்சம் கோடி கறுப்புப் பணம் மறைக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் குறிப்பிடுவதாவது: "" சுவிஸ் வங்கியில் இருக்கும் கள்ளப் பணத்தை வெளியே கொண்டு வர ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்தியா மட்டும் வாய் மூடி மெüனியாக இருக்கின்றது''.

  அவர் மேலும் குறிப்பிடுகையில் "" நமது வருமான வரி அதிகாரிகள் சுவிஸ் நாட்டின் ஜூரிச் நகரில் உள்ள இந்திய உணவகங்களுக்குச் சென்றாலே இந்தியாவின் எந்தெந்த பிரபலங்கள் அங்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்பது தெரிந்துவிடும்'' என்று வேடிக்கையாகச் சொல்கிறார்.

  ""பிரிட்டீஷ்காரர்களால் 90 ஆண்டுகளில் 45 லட்சம் கோடி பணத்தைத்தான் சுவிஸ் வங்கிகளில் சேமிக்க முடிந்தது. ஆனால் நமது இந்தியப் பெருமக்கள் 30 ஆண்டுகளிலேயே 405 லட்சம் கோடி பணத்தை மிகவும் வேகமாக ஓடிச் சென்று சுவிஸ் வங்கியில் சேர்த்துவிட்டனர். எவ்வளவு பெரிய சாதனை'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

  சுவிஸ் வங்கிகளில் மட்டுமல்லாமல், வருமானவரி கணிசமாகக் குறைக்கப்பட்ட நிலையிலும் கறுப்புப் பணப் புழக்கம் என்பது எள்ளளவும் குறைந்ததாகத் தெரியவில்லை. புதிய பொருளாதாரக் கொள்கையும், தாராளமயமாக்கலும் வந்த பிறகு யாரும் கறுப்புப் பணத்தைப் பற்றிப் பேசுவதுகூட இல்லை.

  ஒருபுறம் கறுப்புப் பணம் என்கிற அபாயம். இன்னொருபுறம் கள்ள நோட்டு என்கிற ஆபத்து. இவை இரண்டுக்கும் நடுவில்தான் இந்தியப் பொருளாதாரம் தத்தளிக்கிறது.

  கறுப்புப் பணத்துக்கும் கள்ள நோட்டு அச்சடிப்புக்கும் தொடர்ந்து தொடர்புகள் இருந்து வருகின்றன. ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இந்தியாவில் கரன்சி நோட்டுகள் அச்சடித்தாலும் பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து கள்ள நோட்டுகள் தயாரித்து இந்தியாவுக்குத் தொடர்ந்து கடத்தப்படுகிறது என்ற செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

  இப் பணம் பயங்கரவாத குழுக்கள் மூலமாக புழக்கத்தில் விடப்படுகிறது. மீரட் நகரில் 75 கோடி அளவில் கள்ள நோட்டுகள் மூன்று பாகிஸ்தானியர்களிடம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் நோபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தனர். இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு இருந்தது. இந்த கள்ள நோட்டுகள் நல்ல நோட்டுகளாக மாற்றப்பட்டு கறுப்புப் பணமாக மாறுகிறது. இதனால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் கருவூலங்களில்கூடப் பல கோடி ரூபாய் அளவுக்குக் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகளும் விசாரணையில் உள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத கள்ள நோட்டுகள் எவ்வளவு எனத் தெரியவில்லை.

  காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம். கிளையில் 500 ரூபாய் கள்ள நோட்டு இருந்துள்ளது. திருப்பதியில் ஒரு வங்கி அதிகாரியே கள்ள நோட்டுகளை வைத்துவிட்டு நல்ல கரன்சிகளை எடுத்துக் கொண்டார் என்று கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி போன்ற இடங்களில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு நிலக்கடலை விவசாயிக்கு 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்த வழக்கில் வியாபாரி ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

  கோவையில் இன்று வரை கள்ள நோட்டு அச்சடிப்பு தொடர் நிகழ்வுகளாக நடக்கின்றது எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இப்பிரச்சனை இருக்கின்றது. இதைப் போக்க வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவில் இருப்பது போன்று பாலிமர் கரன்சி நோட்டுகளை அச்சிட வேண்டும். பாலிமர் நோட்டுகள் ரசாயன மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. எனவே போலியான நோட்டுகளைத் தயாரிக்க முடியாது.

  இந்தியாவில் தயாரிக்கப்படும் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளுக்கான காகிதங்கள் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வாங்கப்படுகிறது. இம் மாதிரி காகிதங்களை சமூக விரோதிகளும் வாங்கி கள்ள நோட்டுகளைத் தயாரிக்கின்றனர். எனவே, கறுப்புப் பணத்தைத் திரும்பப் பெறுவது போல கள்ள நோட்டு அச்சடிப்பதை அறவே தடுத்தால்தான் பொருளாதார ஸ்திரத்தன்மையை நாம் காண முடியும்.

  இன்றைக்குப் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், பணப்புழக்கம் இல்லாமை என்ற நிலையில் இந்தியா தள்ளாடுகிறது, அதுமட்டுமா? பங்கு மார்க்கெட் சரிவு, ரூபாயின் மதிப்பு குறைவு, முதலீட்டில் மந்தம், வளர்ச்சியில் மந்தம், வேலைவாய்ப்புகள் இல்லை, பொருள்களின் விலையேற்றம் போன்ற சீர்கேடுகளும் நிலவுகின்றன. ஆயிரம் பொருளாதார மாற்றங்கள், சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாலும் கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழித்தால் தான் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.

  இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் உள்ள இருப்புப் பணத்தை விட கறுப்புப் பணத்தை ஒழித்து கணக்கில் கொண்டு வந்தாக வேண்டும்.

  இந்தியா ஒளிர வேண்டும் என்றால் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழித்தாக வேண்டும். இதை இந்தியா மட்டும் தனியாகச் செய்ய இயலாது. பன்னாட்டு அளவில் முயற்சிகளில் ஈடுபட இந்தியா ஆர்வம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.

  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் ஆட்சி அமைத்தால் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தை 100 நாள்களுக்குள் கொண்டு வருவோம் என பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்தது. கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் குப்தா, நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு இக் கறுப்புப் பணம் குறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். தொடர்ந்த தயக்கத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் கறுப்புப் பணத்தைப் பெற முயற்சி மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தது.

  காங்கிரஸ் கறுப்புப் பணத்தைப் பற்றி தனது தேர்தல் அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் பதவி ஏற்றுள்ள மன்மோகன் சிங் அரசு இதற்கான கடமையை ஆற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT