கட்டுரைகள்

கவர்ச்சித் திட்டங்கள் ஜாக்கிரதை!

""கொடி அசைந்ததும் காற்று வந்ததா; காற்று வந்ததும் கொடி அசைந்ததா'' - என்று காரணத்தை மையமாக வைத்து கண்ணதாசன் எழுதிய கவிநயம் மிக்க பாடல் மறக்க முடியாதது. மோசடி வலையில் திரும்பத் திரும்ப விழும் முதலீட்டாளர

ஆர். நட​ராஜ்

""கொடி அசைந்ததும் காற்று வந்ததா; காற்று வந்ததும் கொடி அசைந்ததா'' - என்று காரணத்தை மையமாக வைத்து கண்ணதாசன் எழுதிய கவிநயம் மிக்க பாடல் மறக்க முடியாதது. மோசடி வலையில் திரும்பத் திரும்ப விழும் முதலீட்டாளர்களின் நிலைமையைப் பார்க்கும்போது ""ஏமாளிகளால் ஏமாற்றுபவர்களா; ஏமாற்றுபவர்களால் ஏமாளிகளா'' என்று கேட்கத் தோன்றுகிறது.

  அப்பாவி மக்கள் ""சிட்டி லிமோசின்ஸ்'' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தைப் பறிகொடுத்துள்ளார்கள். இழப்பு நூறு கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, தில்லியில் இயங்கி வருகிறது.

  சுற்றுலாத் தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆண்டுக்குச் சில நாள்கள் பங்கு வாங்கும் ""டைம் ஷேர்'' என்ற வர்த்தக முறை பல ஆண்டுகளாக இயங்குகிறது. வாங்கிய குறிப்பிட்ட நாள்கள் அடிப்படையில் அந்த விடுதியிலோ அதோடு இணைந்த மற்ற விடுதிகளிலோ தங்குதல், அதை வாடகைக்கு விடுதல் போன்ற பல வகையில் உபயோகிக்கலாம். இதன் அடிப்படையில்தான் வாகன உரிமை என்று வாகனங்களின் மீது ஒரு தொகை முதலீடு செய்து அந்த வாகனம் வாடகைக்கு விடப்பட்டு ஈட்டும் லாபத்தில் பங்கு முதலீட்டைப் பொருத்துக் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் உருவானதுதான் லிமோசின் நிறுவனம்.

  கவர்ச்சிகரமான பல திட்டங்கள் மக்களை ஈர்ப்பதற்கு அறிவிக்கப்படுகின்றன. நாம்தான் முதலீடு செய்வதற்கு முன், திட்டங்களை ஆராய்ந்து வியாபார நோக்கத்தை அறிந்துகொண்டு வியாபாரம் தொடங்குபவரின் நாணயத்தையும், தகுதியையும் தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

  1990-ல் இருந்து பத்து ஆண்டுகளை கவர்ச்சிகரமான அறிவிப்புகள் நிறைந்த பத்தாண்டுகள் என்று கூறலாம். முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவீத வட்டி, முதலீடு செய்த உடனே முன்வட்டி, தங்க நாணயம், குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பரிசுகள் எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. முதலீடு செய்த பணம் விவசாயப் பண்ணை பராமரிப்பதற்குச் செலவிடப்பட்டு முதலீட்டாளர்களுக்கு அரிசியும், தானிய வகைகளும், காய்கறியும் வழங்கப்படும். பால்பண்ணை மூலம் பால் விநியோகிக்கப்படும் என்றும் இத்திட்டங்களின் பரிமாணங்கள் பல.

  அப்பாவி மக்களும் கவர்ச்சியில் மயங்கி தாம் கொடுத்த பணத்திலிருந்துதான் ஒரு பங்கு முன்வட்டி, பரிசு என்று கொடுக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தனர். இத்தகைய வங்கிசாரா நிதிநிறுவனங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு கூறியபடி வட்டி மற்றும் சலுகைகளைக் கொடுத்து அதன் மூலம் மேலும் பல சந்தாதாரர்களை வலையில் சிக்க வைப்பார்கள். நீர்க்குமிழி போல் வெடித்துச் சிதறும் நிலையில் நிறுவனம் மூடப்படும். பணம் இழந்தவர்கள் காவல் துறையினரிடம் தஞ்சமடைவார்கள்.

  இம்மாதிரியான வழக்குகள் அதிகரிக்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் விரிவாக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மோசடி நிறுவனங்களின் அசையும், அசையாச் சொத்துகளை முடக்கி, பொது ஏலம் மூலம் இழந்த பணத்தை ஓரளவு ஈடுகட்ட வழிவகை செய்யும் அதிகாரம் இந்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்தச் சட்டத்தின் மூலம் பொருளாதாரக் குற்றப் புலனாய்வுத் துறை முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் ஒரு பகுதியையாவது நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர முடிகிறது.

  நூதன மோசடிகளுக்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் "சார்லஸ் பான்ஸி' என்ற இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1949-ம் ஆண்டு வரை அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தவர். மிக அதிகமான பயன், மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கும் என்று ஒரு திட்டத்தை விளம்பரப்படுத்துவார். முதலில் வரும் முதலீட்டாளர்களுக்குத் தடங்கலின்றி சொல்லியபடி முதலீட்டின் லாபம் என்று ஒரு தொகை திரும்பிக் கொடுக்கப்படும். இதில் பயனடைந்தவர்கள் மூலமாக மற்றவர்களும் புற்றீசல்போல பணம் போடுவார்கள். இவ்வாறு புதிதாக வரும் முதலீட்டாளர்களின் பணத்தை வைத்து திட்டத்தின் லாபம் என்று முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதால் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுவதாக ஒரு மாயை உண்டாகும். இத்தகைய தொடர் அடுக்கு மோசடித் திட்டங்கள் "பான்சி திட்டம்' என்று பிரபலமாகியுள்ளது.

  "பான்ஸி திட்டம்' தொடர புதிய முதலீட்டாளர்கள் வரவேண்டும். அவர்கள் வரத்துக் குறைந்தால் இந்தத் திட்டம் குறுகிய காலத்தில் அதனுடைய பளுவாலேயே தொய்ந்துவிடும். திட்டத்தைத் துவக்கியவர் சுருட்டியவரைக்கும் லாபம் என்று மறைந்து விடுவார். அல்லது சட்டப்படி திட்டம் தூய்மையானதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கையில் சாயம் வெளுத்துவிடும்.

  சமீபத்தில் "பெர்னி மெய்டாஃப்' என்பவர் பல ஆண்டுகளாக அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்கு மார்க்கெட்டில் சுமார் 65 பில்லியன் டாலர் மோசடி செய்தது வெளிவந்துள்ளது. இவர் செய்தது பல ஹர்ஷத் மேத்தாக்களை உள்ளடக்கிய மோசடி. அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் இவருக்கு அதிகபட்சமாக 150 ஆண்டுகள் சிறைத்தண்டனை இந்த ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்றம் விதித்துள்ளது.

  பரிசுச்சீட்டு மற்றும் பணம் பட்டுவாடா திட்டங்கள் தடுக்கும் சட்டம் மத்திய அரசால் 1978-ல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி பல அடுக்கு வியாபாரத் திட்டங்கள் மூலம் தொடர்ந்து பலரைத் திட்டத்தில் இணைத்து லாபம் ஈட்டுவது குற்றமாகும். சமீபத்தில் தமிழகத்தில் தொடரப்பட்ட "தங்கப் புதையல்' வழக்கு இதில் அடங்கும். மேற்கு வங்காள அரசுக்கும் ஸ்வபன் குமார் என்பவருக்கும் இடையிலான வழக்கில் இம்மாதிரியான பணப்பட்டுவாடா திட்டம் என்ன என்று உச்ச நீதிமன்றம் விவரித்துள்ளது. எளிதிலும் விரைவிலும் பணம் ஈட்டக்கூடிய திட்டம் என்ற அறிவிப்பும், பணமோ, பொருளோ ஓர் இலக்கை அடைந்தாலோ அல்லது புதிய அங்கத்தினர்களைச் சேர்த்தாலோ கொடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அடங்கிய திட்டம், இந்தப் பரிசுச் சீட்டு ஒழிக்கும் சட்டத்தின் பார்வையில் வரும் என்று கூறியுள்ளது. மேலும் இந்தச் சட்டம் அரசியல் சாசன சட்டம் 19(1)(ஜி) அடிப்படை உரிமைக்குப் புறம்பானது அல்ல என்றும் சீனிவாசா தொழிலகத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் இந்தத் தீர்ப்பில் தனக்கே உரிய நடையில் ""ஒளியில் மாயும் விட்டில் பூச்சியைக் காப்பாற்ற ஒரே வழி அழிக்கும் ஒளியை ஒழிப்பது ஒன்றுதான்'' என்று கூறியுள்ளார்.

  தமிழ்நாட்டில் அமலில் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்தச் சட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

  இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சேர்த்து ஆண்டொன்றுக்கு சராசரி 90,000 மோசடி வழக்குகள் பதிவாகின்றன. இதில் 72 சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் 2007-ம் ஆண்டில் 25.6 சதவிகித வழக்குகளில் தான் தண்டனை அளிக்க முடிந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 42 சதவீத மற்ற வழக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் மோசடி வழக்குகள் சரியாகப் புலனாய்வு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. மேலும் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் திறமையான வழக்காடுதல் மூலம் தப்பித்து விடுகின்றனர் என்பதும் உண்மை. புலனாய்வுத் திறனும் பணம் இழந்த ஏழை முதலீட்டாளர்களின் நம்பிக்கையும், ஆதரவுமே காவல்துறைக்குப் பக்கபலம்.

  பொருளாதாரக் குற்றங்களில் புலன் விசாரணை கடினமானது. தமிழகப் பொருளாதாரக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பாகச் செயல்பட்டு 2007, 2008 - 09-ம் ஆண்டுகளில் சுமார் 170 கோடி ரூபாயை மீட்டுச் சாதனை படைத்துள்ளது. இம்மாதிரியான வழக்குகளில் ஒப்பந்த மீறலும் இருப்பதால் இவை சிவில் வழக்குகள் என்றும் குற்றவியல் வழக்குகள் முறையில் விசாரிக்க முடியாது என்ற வாதமும் இருக்கிறது.

  ஒரு சிறிய திரைதான் கிரிமினல் வழக்குகளை மறைத்து சிவில் வழக்குகளாகக் காண்பிக்கும். தீர்க்கமாக விசாரித்து அப்பாவி மக்களுக்கு உதவி செய்வது காவல்துறையின் பொறுப்பு. மோசடி நிறுவனங்கள் பற்றி தகவல் சேகரித்து தடுப்பு நடவடிக்கை மூலம் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதும் காவல்துறையின் கடமை.

  சமுதாயத்துக்கு விரோதமாக தனிமனிதன் பணம் சம்பாதித்து தழைக்க முடியாது. சமுதாயம் நன்றாக இருந்தால்தான் ஈட்டிய பொருள் நிலைக்கும். மனம் ஆழமானது என்றாலும் சஞ்சலம் மிகுந்தது. பாதாளம் வரை பாயும் பணம் மனதை எளிதாக ஆட்கொண்டுவிடும். மனிதன் நோக மனிதன் பார்க்கும் வழக்கத்தால்தான் இத்தகைய மோசடிகள் நிகழ்கின்றன.   உழைக்காமல் பணம் சம்பாதிக்க முடியும் என்ற மக்களின் பேராசைதான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனமாக அமைகிறது. உழைத்துச் சம்பாதித்தால் உடம்பில் ஒட்டும். பொருள் இலவசமாக சுலபத்தில் கிடைக்கும் என்பது மாயை. அந்த சபலத்திற்கு இடம்கொடுப்பது அழிவுக்கு வழி. அத்தகைய பொருள் பாதாளம்வரை பாய்ந்து மறைந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

போத்து

சுவடிகள் போற்றுதும்

ஒப்பில் வள்ளுவம் - விரிவாக்கப் பதிப்பு

ஆதித்த கரிகாலன்

SCROLL FOR NEXT