முகப்பு
கட்டுரைகள்

லாட்டரி: மறுபரிசீலனை தேவை

தமிழகத்தில் லாட்டரிக்கு 2003-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது தடையை நீக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வரத்தான் செய்கின்றனர். ஆனால், இதுவரை எந்தப் பயனும் கிட்டவில்லை.

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:56 PM
பகிர்:

தமிழகத்தில் லாட்டரிக்கு 2003-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது தடையை நீக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வரத்தான் செய்கின்றனர். ஆனால், இதுவரை எந்தப் பயனும் கிட்டவில்லை.

  லாட்டரி மீதான தடையை நீக்க வேண்டும். லாட்டரித் தடையால் இருண்டு கிடக்கும் லட்சக் கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் பிரதானக் கோரிக்கை.

  மக்கள் நலத் திட்டங்களுக்காகத் தமிழக அரசுக்கு நிதி வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் 1968-ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு அரசுப் பரிசுச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. "விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு' என்பதே அதன் தாரக மந்திரம்.

  அதற்கு நேரடி வரி விதிக்காமல் மறைமுக வரியாக (லாட்டரி சீட்டு வாங்குவதன் மூலம் பொதுமக்கள் செலுத்தும் மறைமுக வரி) அரசுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தார் அண்ணா.

  1968-க்கு முன் அண்டை மாநிலங்களிலும் லாட்டரி நடந்து கொண்டிருந்தது. தமிழகத்திலும் பிற மாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

  தமிழகத்தின் பணம் பிற மாநிலத்துக்குச் செல்லக் கூடாது என்று அன்றைய முதல்வர் அண்ணா கருதினார். ஒரு ஏழை ரூ.1 அல்லது ரூ.2 செலுத்தி வாங்கும் சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் கிடைக்க வழிவகை செய்தார். இதனால், ஏழையும் லட்சாதிபதியாகும் வாய்ப்பை உருவாக்கினார்.

  இதைத் தொடர்ந்து வாராந்திர, மாதாந்திர, பண்டிகைக் கால (தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு...) சிறப்புக் குலுக்கலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிர்ஷ்டத்தின் மூலம் லட்சாதிபதியாகும் வாய்ப்பால் லாட்டரி மீதான மோகம் மக்களிடையே அதிகரித்தது. அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது.

  வேலை கிடைக்காத இளைஞர்கள், ஆதரவற்றவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் குறிப்பாக கண் பார்வையற்றோர் என பலர் லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

  ஏழை, எளிய மக்கள் சிறு தொழிலாக அதுவும் சுயதொழிலாக சிறிய முதலீட்டில் லாட்டரித் தொழிலையே பிழைப்பாக நடத்தி வந்தவர்களும் உண்டு.

  காலப்போக்கில், பல்வேறு வெளிமாநில லாட்டரி சீட்டுகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டன. மேலும், ஆன்லைன், ஒரு நம்பர் லாட்டரி, அரைமணி நேரக் குலுக்கல் என்று பல லாட்டரிகள் உதயமாகின.

  இந்நிலையில், லாட்டரியால் ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி 8-1-2003-அன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி, தமிழக அரசு ஒட்டுமொத்தமாக லாட்டரிக்குத் தடை விதித்தது.

  ஆனால், தமிழ்நாடு அரசுப் பரிசுச் சீட்டை மொத்தமாக விற்பனை செய்வதற்கான ஏஜென்சி எடுப்பதில் இரு பெரும் "தலை'களுக்கு இடையே நடந்த கடும் போட்டியால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதே தடைக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

  தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள் இப்போது கடத்தப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவது மறைமுகமாகத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

  சாராய வழக்குகளைப் போல, மாதந்தோறும் அங்கொன்றும், இங்கொன்றும் சில வழக்குகள் பதியப்படுவதும், கைது செய்யப்படுவது தொடர்ந்தாலும், விற்பனை அமோகமாகத்தான் நடைபெறுகிறது. அண்டை மாநிலங்களில் எல்லாம் லாட்டரித் தொழில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், லாட்டரி மூலம் கிடைக்கும் வருவாய் பல நலத் திட்டங்களுக்கு செல்வதை உணர்ந்த கேரள அரசு, தடையை உடனே திரும்பப் பெற்றது.

  அரசு நடத்தும் லாட்டரித் துறையில் தவறு நடந்தால், அதை அரசுதான் சீர்செய்ய வேண்டும். குதிரைப் பந்தயம், சீட்டாட்ட கிளப் போன்றவற்றை ஒப்பிடும்போது லாட்டரித் தொழில் சிறு வியாபாரம் தான் என்பதை அரசு உணர வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

  இத் தொழிலில் நிறைய முதலீடு போட்டு செய்த பெரும் தொழிலதிபர்களுக்கு லாட்டரி தடையால் பெரிய பாதிப்பில்லை. ஆனால், இத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஊனமுற்ற, நலிவடைந்த பிரிவினர், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள், லாட்டரி விற்பனை மூலம் அன்றாடப் பிழைப்பு நடத்தியவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  லாட்டரியை முறைப்படுத்த ஒரு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தலாம். அதில் ஓய்வுபெற்ற நீதிபதி, காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை இடம் பெறச்செய்யலாம். பிற மாநில லாட்டரிகளுக்கு நுழைவு வரியை அதிகரிக்கலாம்.

  ஊனமுற்றவர்கள், முதியவர்கள், கைம்பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு லாட்டரித் தொழிலை முறைப்படுத்தி வழங்கலாம்.

  அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நிறைவு பெற்றுள்ள இத் தருணத்தில், அவர் துவக்கிய திட்டத்தை மீண்டும் புதுப்பித்து புதுப் பொலிவுடன் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாமே?

முழு கட்டுரையைப் படிக்க →