முகப்பு
கட்டுரைகள்

புன்னகைக்கும் "பொன்'நகை!

இந்த நூற்றாண்டு சந்தைகளைப் பொருத்தவரை மிகவும் குதூகலமாகத் துவங்கியது. ஆனால், வெகு நாள்கள் நிலைத்திருக்க முடியவில்லை. 2007-ம் ஆண்டு வரை ஏற்றத்தில் இருந்த அனைத்துச் சந்தைகளும் 2008-ல் அதலபாதாளத்துக்குச்

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:31 PM
பகிர்:

இந்த நூற்றாண்டு சந்தைகளைப் பொருத்தவரை மிகவும் குதூகலமாகத் துவங்கியது. ஆனால், வெகு நாள்கள் நிலைத்திருக்க முடியவில்லை. 2007-ம் ஆண்டு வரை ஏற்றத்தில் இருந்த அனைத்துச் சந்தைகளும் 2008-ல் அதலபாதாளத்துக்குச் சென்றன.

  ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள், வருவாயில் கொழித்த வணிக நிறுவனங்கள், சம்பளத்துக்கு மேல் போனஸ் பெற்ற தொழிலாளர்கள், விண்ணை முட்டிய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்தும் 2001 முதல் 2007 வரை செல்வச் செழிப்பாக இருந்தன. ஆனால், ஓராண்டு காலத்தில் (2008) நிலைமை தலைகீழாக மாறியது. பல விஷயங்கள் மண்ணோடு மண்ணாகியது. ஆனால், இன்று மின்னுவது "பொன்' மட்டுமே. இன்று ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை ரூ. 1,580-க்கு அதிகரித்துள்ளது. அசையும் சொத்து வகைகளில் தங்கத்துக்கு மட்டுமே சுய மதிப்பு உள்ளது.

  இதனால்தான் உலகப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்ததும், அதைத் தொடர்ந்து மற்ற முதலீடுகளின் மீது சந்தேகம் ஏற்பட்டதும் வர்த்தகர்கள் பெரும்பாலானோர் தங்கத்தின் மீது "காதல்'கொள்ளத் தொடங்கினர்.

  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில்துறை வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவே தங்கத்தின் மதிப்புக் கூடியதற்கு முக்கியக் காரணம் என்றே கூறலாம்.

  இப்போது கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை வெகுவேகமாக உயர்வதற்கு வர்த்தக ரீதியாக பல காரணங்ளைச் சொல்லலாம்.

  அமெரிக்காவின் பொருளாதார மீட்புத் திட்டங்கள் சந்தைகளை உற்சாகப் படுத்தாதது; மற்ற சந்தைகளின் போக்கில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலை; பொருளாதார மீட்புத் திட்டத்துக்கு மிகப் பெரிய அளவில் அமெரிக்க அரசு புதிய டாலர் கரன்சிகளை அச்சடிக்கும் என்ற அச்சம்; இவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி குறைந்த காலத்தில் பணம் பண்ணுவதற்காக குறுகிய கால வர்த்தகர்கள் பெருமளவுக்கு இந்த சந்தையில் நுழைந்தது போன்றவையே தங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணமாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

  இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறையால் ரூபாய் மதிப்பு குறைந்துபோனது. இதனால், டாலர் மதிப்பில் ஏற்கெனவே உயர்ந்த தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் கணக்கிடும்போது மேலும் கூடிப்போனது.

  பங்குச் சந்தை உள்பட மற்ற சந்தைகள் மேலும் உத்வேகம் பெறாதவரை தங்கம் விலை உயரத்தான் செய்யும் என்பது வல்லுநர்களின் கணிப்பு.

  சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிக பராமரிப்புச் செலவு போன்றவற்றால் பெரும்பாலான தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால், புதிய சுரங்கங்கள் அந்த அளவுக்குக் கண்டறியப்படவில்லை. உலக நாடுகளில் பெரும்பாலானவை பெருமளவு கரன்சிகளை அச்சடிப்பதால் நிரந்தர நாணயமாகக் கருதப்படும் தங்கத்தின் மதிப்பு கூடத்தான் செய்யும்.

  இருப்பினும் தங்கத்தை சிறந்த முதலீடாக பொருளாதார நிபுணர்கள் ஏற்பதில்லை. தங்கத்தால் தனிப்பட்ட முறையில் பணத்தை உருவாக்க முடியாததே இதற்குக் காரணம்.

  பங்குகளில் முதலீடு செய்தால் டிவிடெண்ட் கிடைக்கும். வைப்புத்தொகைக்கு வட்டி கிடைக்கும். ரியல் எஸ்டேட்டில் வாடகை கிடைக்கும். ஆனால், தங்கத்தில்....?

  வரலாற்று ரீதியாக நீண்டகால அடிப்படையில், பணவீக்கத்துக்கு நிகராக மதிப்பீடு செய்யப்பட்டால் தங்கத்தின் மதிப்பு வளர்ச்சி மிகவும் குறைவுதான்.

  தங்கத்தை வாங்குவோர் அதை ஒரு செலவினமாகவே கருதுகின்றனர். இதனால், தங்கத்தின் விலை ஏறும் போதெல்லாம் அதற்கான தேவை குறைந்து போகிறது.

  இந்தியாவின் இந்த ஆண்டு தங்க இறக்குமதி கடந்த ஆண்டு தங்க இறக்குமதியை விட குறைந்ததே இதற்குச் சிறந்த சான்றாகக் குறிப்பிடலாம்.

  இதனால், மற்ற முதலீட்டு சந்தைகளைப் போல விலை உயர்ந்தால் தேவை அதிகரிக்கும் என்ற வர்த்தகக் கோட்பாடு தங்கத்துக்கு பொருந்தாது. எனவே, தங்கத்தின் விலை சுழற்சி முறையில் வேண்டுமானால் உயரலாம். நேர்கோட்டில் வளர வாய்ப்புக் குறைவுதான்.

  மற்ற வாழ்க்கை அபாயங்களில் இருந்து தாற்காலிகமாகப் பாதுகாத்துக் கொள்ள உதவும் ஒரு மாற்று முதலீடாக மட்டுமே தங்கம் இருக்க முடியும். மொத்த முதலீட்டில் சுமார் ஐந்து சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

  எது எப்படி இருந்தாலும், மற்ற சந்தைகள் புன்னகையை இழந்தன. ஆனால், "பொன்'நகை மட்டுமே புன்னகை செய்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →