கட்டுரைகள்

நேரு உருவாக்கினார் -சோனியா உருக்குலைக்கிறார்

தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே 2004-ம் ஆண்டு ஜுன் மாதம் 4-ம் தேதி தேசிய ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக  சோனியா காந்தி நியமிக்கப்பட்டதையொட

பழ. நெடுமாறன்

தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே 2004-ம் ஆண்டு ஜுன் மாதம் 4-ம் தேதி தேசிய ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக  சோனியா காந்தி நியமிக்கப்பட்டதையொட்டி  பெரும் சர்ச்சை எழுந்தது.

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதாயம் தரும் எந்தப் பதவியையும் ஏற்கக்கூடாது என்ற விதியை சோனியா காந்தி மீறிவிட்டதாகவும் எனவே அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரின.

 இதையடுத்து 2006-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியிலிருந்தும் சோனியா காந்தி விலகி வெளியேற நேர்ந்தது. மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

÷முன்னால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் விளைவாக இப்போது தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியை அவர் வகித்தாலும் அதற்கான பணப்பயன்கள் எதையும் அவர் பெறமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  சட்டரீதியாக சோனியா காந்தியின் பதவியைக் காப்பாற்றுவதற்கு இவ்வாறு அறிவிக்கப்பட்டாலும் தார்மிக ரீதியாக அவரின் மதிப்புச் சரிந்துள்ளது.

÷தேசிய ஆலோசனைக் குழு அமைப்பதற்கு அரசியல் சட்ட ரீதியான ஒப்புதல் கிடையாது. தேசிய நிதிக் கமிஷன் மட்டுமே அரசியல் சட்டப்படி குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிற கமிஷனாகும். தேசியத் திட்டக்குழுகூட அரசியல் சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட ஒன்றல்ல. மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி திட்டக்குழு அமைக்கப்பட்டது.

 திட்டக்குழு நடவடிக்கையின் விளைவாக மாநிலங்கள் தங்களின் சுய ஆதிக்கத்தை இழக்க நேரிட்டுள்ளது. திட்டங்களை இறுதி செய்வதில் மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை. இதைப்போல, மாநில முதல்வர்களைக் கொண்ட தேசிய வளர்ச்சிக்குழுவுக்கும் அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது. இவைகளைப் போன்றதுதான் இப்போது அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனைக் குழுவாகும்.

÷இக்குழுவுக்குள்ள அதிகாரங்கள் என்ன? எந்தெந்த விஷயங்களில் மத்திய அரசுக்கு இக்குழு ஆலோசனை வழங்கும்? இக்குழுவின் ஆலோசனைகளை ஏற்கவோ, மறுக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு உரிய விடை இதுவரை கிடைக்கவில்லை.

÷காங்கிரஸ் தலைவர் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி தலைவராக இருக்கும் தேசிய ஆலோசனைக் குழுவின் ஆலோசனைகளை பிரதமரோ, மத்திய அமைச்சரவையோ ஏற்க மறுக்கும் நிலை நிச்சயமாக இல்லை.

 மத்திய அமைச்சரவைக்கு மேலான அதிகாரம் கொண்டதாக இக்குழுவும் பிரதமருக்கு மேலான சூப்பர் பிரதமராக சோனியா காந்தி விளங்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளைச் சிதைத்துவிடும்.

÷இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் காலத்தில் அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்த தலைவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் யாருக்கும் இத்தகைய பதவிகளை உருவாக்கித் தரும் முயற்சி நடைபெறவில்லை. காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது பிரதமர்களாக இருந்த லால்பகதூர், இந்திராகாந்தி ஆகியோர் இப்படியோர் பதவியை உருவாக்கி  காமராஜருக்கு அளிக்க ஒருபோதும் மனதாலும் நினைக்கவில்லை. இத்தகைய கொல்லைப்புற வழியில் அதிகாரத்தில் அமர காமராஜரும் விரும்பவில்லை.

÷1962-ம் ஆண்டு சீனப் படையெடுப்பு நடைபெற்ற காலகட்டத்தில் பிரதமர் நேரு தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், கட்சி சார்பற்ற அறிஞர்கள் ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகித்தனர். இக்குழுவில் தெரிவிக்கப்பட்ட பல கருத்துகளை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டார். சிலவற்றை அவர் ஏற்கவில்லை.

÷நேரு, இந்திரா ஆகியோர் காலங்களில் அவர்களுக்கு ஆலோசனை வழங்க இது போன்ற குழுவோ அல்லது ஆலோசகர்களோ ஒருபோதும் நியமிக்கப்பட்டதில்லை. அவ்வாறு நியமிக்கப்படுவது பிரதமரின் மதிப்பையும் அதிகாரத்தையும் சீர்குலைக்கும் என அவர்கள் கருதினார்கள்.

 தங்களின் வேலைச் சுமையைப் பகிர்ந்துகொள்ள, துறை எதுவும் ஒதுக்கப்படாத அமைச்சர்களை நியமித்தனர். நேரு காலத்தில் லால்பகதூர் சாஸ்திரியும், இந்திராவின் காலத்தில் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரும் இவ்வாறு நியமிக்கப்பட்டு பிரதமருக்கு உதவி புரிந்தனர். இவர்கள் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் கட்டுப்பட்டவர்கள். இதன் மூலம் நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருந்தது.

÷ஆனால், பிரதமராக பி.வி. நரசிம்மராவ் பொறுப்பேற்றபோது அவரின் ஆலோசகராக ஓய்வுபெற்ற அதிகாரியான பிரிஜேஸ் மிஸ்ரா என்பவர் நியமிக்கப்பட்டார். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் அவருக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.

 மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போதும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவி உருவாக்கப்பட்டு ஓய்வுபெற்ற அதிகாரிகளான எம்.கே.நாராயணன், சிவசங்கரமேனன் போன்றவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மத்திய அமைச்சர்களுக்கு மேலான அதிகாரம் பெற்றவர்களாகத் திகழ்ந்து பிரதமருக்கும் நாட்டுக்கும் பல நெருக்கடிகளைத் தேடித் தந்தனர்.

 மாநில முதல்வர்களும், தேசிய ஆலோசகர்களின் வரம்பற்ற அதிகாரத்துக்குப்  பணிந்து போக நேர்ந்ததற்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இலங்கைத் தமிழர் பிரச்னையில் பிரதமரின் ஆலோசகரான எம்.கே.நாராயணன் எப்படியெல்லாம் தமிழக முதலமைச்சரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் என்பது நாடறிந்த உண்மையாகும்.

 ஓய்வுபெற்ற அதிகாரிகளைப் பிரதமருக்கு ஆலோசகர்களாக நியமிக்கும் வேண்டாத பழக்கம் அதிகார நிர்வாக இயந்திரத்தில் வீணான குழப்பங்களுக்கு வழிவகுத்தது. அதைப்போல பிரதமருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை கூட்டுப் பொறுப்பில் செயல்படும்போது அதற்கு மேலாக தேசிய ஆலோசனைக் குழு என்ற அமைப்பு தேவையா? இதன் விளைவாக இரு அதிகார மையங்களிடையே  உராய்வும் மோதலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

÷தேசிய ஆலோசனைக் குழுத் தலைவரான சோனியா காந்தி நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டவரல்லர். அதற்குப் பதில் சொல்லும் பொறுப்பு அவருக்குக் கிடையாது. பிரதமருக்கு மேலான அதிகாரம் படைத்தவராக அவர் திகழ்வார். இது பிரதமர் பதவியை மதிப்பிழக்கச் செய்யும் செயலாகும். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் இம்முயற்சியைக் கண்டிக்க முன்வர வேண்டும்.

இந்தத் தவறான முன்னுதாரணத்தின் விளைவாக மாநில முதல்வர்களும் இதுபோன்ற ஆலோசனைக் குழுக்களைத் தங்களுக்கு அமைத்துக்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது.

 மாநிலங்களில் முதல்வர்களுக்கு எதிராக அவர்களது கட்சிகளிலேயே பலமான போட்டியாளர்கள் இல்லாமல் இல்லை. அவர்களைத் திருப்தி செய்ய இதுபோன்ற ஆலோசனைக் குழுத் தலைவர் பதவிகளை வழங்க முதல்வர்கள் முன்வரக்கூடும். இதன் விளைவாக  இரட்டை அதிகார மையங்கள் உருவாகி அரசு நிர்வாகம்  சீர்குலைந்துபோகும்.

பிரதமர் என்ற மணிமகுடத்தைச் சூட்டிக்கொள்ள மறுத்த தியாகவல்லி என கருணாநிதி போன்றவர்களால் பாராட்டப்பட்டவருக்கு இத்தகைய பதவியை உருவாக்கி அதில் அமரவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டது ஏன்?

கட்சியிலும் ஆட்சியிலும் அவரை எதிர்ப்பதற்கும் அவரை மீறிச் செயல்படுவதற்கும் இன்று யாரும் இல்லை. அவர் வகிக்கும் காங்கிரஸ் தலைவர் பதவி உன்னதமானது. உயர் அதிகாரம் படைத்தது. அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு இந்தியா முழுவதிலுமுள்ள தனது கட்சி அமைப்புகளையும் மத்திய அரசையும் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகளையும் அவர் ஆட்டிப்படைத்து வருகிறார்.

 பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் முக்கிய பிரச்னைகளில் அவரின் சம்மதம் பெற்றே முடிவெடுக்கிறார்கள். தன்னிடம் குவிந்துள்ள இந்த அதிகாரத்தால் அவருக்குப் போதுமான திருப்தியில்லையா என எழும் கேள்விக்கு அவரிடம் நிச்சயமாக எந்தப் பதிலுமில்லை.

÷காங்கிரஸ் தலைவர் பதவியை விட அதிக அதிகாரம் உள்ள பதவியில் அமரவேண்டுமென்று சோனியா காந்தி விரும்பினால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியில் அதைத் தடுப்பவர்கள் கிடையாது. நேர்வழியில் அவ்வாறு செய்யாமல் குறுக்கு வழியில் தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியை உருவாக்கி அதில் அமர்ந்துகொண்டு பிரதமரையும், மத்திய அரசையும் ஆட்டிப்படைக்க சோனியா காந்தி முயல்வது அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்காகும். தவறான முன்மாதிரிகளை உருவாக்கி ஜனநாயக நெறிமுறைகளைச் சீரழிப்பது பெரும் தீங்காகும் என்பதை அவர் உணரவேண்டும்.

ஜவாஹர்லால் நேரு உருவாக்கி வளர்த்த உன்னதமான ஜனநாயக மரபுகளை அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே மதிக்காமல் தூக்கி எறிவது காலம் செய்த கோலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT