இப்போது எங்கும் ஜனநாயகம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இதற்கு ஆபத்து வந்துவிட்டது போலவும், அதனைக் காப்பாற்றுவதற்காகவே அரசியல் கட்சிகள் அவதாரம் எடுத்திருப்பது போலவும் பேசப்படுகிறது. கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், நாட்டில் நடக்கும் நடப்புகளைப் பார்த்தால், "ஜனநாயகத்தைக் காப்பதற்கு யாராவது அவதாரம் எடுக்க வேண்டுமே!' என்ற கவலை ஏற்படுகிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முக்கிய அலுவல் ஏதும் நடைபெறாமல் நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் 23 அலுவல் நாள்களில் ஒருநாள்கூட அலுவல்கள் முழுமையாக நடைபெறவில்லை. இதனால், மக்களாட்சி என்பது கேள்விக்குள்ளாகிறது என்று ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் கூறுகின்றனர்.
தொலைத்தொடர்பு அமைச்சரின் தவறான கொள்கையால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என ஆளும் கூட்டணிக் கட்சியினரும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையைத் தவிர, வேறு எதையும் ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சியினரும் பிடிவாதமாக இருந்ததால் நாடாளுமன்ற அலுவல்கள் முற்றாக முடக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த நிலை தொடரக்கூடாது; ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் கூடிப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்று மக்களவைத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன் தெஹல்கா விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை கோரி 17 நாள்கள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதுபோல போஃபர்ஸ் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை கோரி 45 நாள்கள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. எனவே, இது ஒன்றும் புதிதல்ல. ஆனால், கூட்டத்தொடர் முழுவதும் எந்த அலுவலும் நடைபெறாமல் முடிந்தது இம்முறைதான்.
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்து ஜனநாயக நடைமுறையையே தடுக்கின்றனர் என்பது ஆளும் கூட்டணியினரின் குற்றச்சாட்டு. இதுவரை வரலாறு காணாத ஊழல் நடைபெற்றுள்ளபோது, கூட்டுக்குழு விசாரணை என்ற ஜனநாயக நடைமுறையை ஆளுவோர் ஏற்க மறுக்கின்றனர் என்பது எதிர்க்கட்சியினரின் புகார்.
இந்த ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்கவும் நேரம் இல்லாமல் இந்நாட்டின் அப்பாவிக் குடிமக்கள் விலைவாசி உயர்வால் நொந்து கிடக்கின்றனர். மக்கள் வரிப்பணம் இப்படிப் பாழாகிறதே என அறிவுஜீவிகள் அங்கலாய்க்கின்றனர். ""நாடாளுமன்றம் ஒழுங்காக நடந்துவிட்டால் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் தங்கம் மற்றும் பெட்ரோல் விலைகள் குறைந்துவிடுமா?'' என்று ஏழை எளிய மக்கள் கேட்பது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.
நடப்பு நிதியாண்டில் மக்களவை அலுவல் நடைபெற ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 347.65 கோடி. மாநிலங்களவைக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 172.33 கோடி. இவைதவிர, நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை
ரூ. 7.47 கோடி. ஆக மொத்தம் நாடாளுமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 527.45 கோடியாகும்.
பட்ஜெட் கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடர், மழைக்காலக் கூட்டத்தொடர் என ஆண்டுக்கு மூன்றுமுறை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும். இந்த ஆண்டு மொத்தம் 83 நாள்கள் கூட்டத்தொடர் நடத்த அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகை ரூ. 11.08 லட்சம் கோடியாகும். அவையில் எவ்வித நடவடிக்கையும் நடைபெறாதபோதிலும், ரூ. 45 ஆயிரம் கோடி கூடுதல் செலவு அனுமதி கோரிக்கைக்கு மாநிலங்களவையில் எவ்வித விவாதமும் இன்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது. மக்களவையில் ரூ. 44,945 கோடி கூடுதல் செலவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் செலவு அதிகரித்துள்ளதால், நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை 5.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் எவ்விதப் பணிகளும் நடைபெறாததால் மக்களின் வரிப்பணம் ரூ. 152.40 கோடி வீணாகியுள்ளது என நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் கவலைப்பட்டுள்ளனர்.
நமது ஜனநாயகம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும்தான் இருக்கிறது என்ற பிரமையை ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த மன்றங்களுக்குச் செல்பவர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்று நாம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் உண்மையாக யாருடைய பிரதிநிதிகள் என்பதை அண்மையில் வெளியாகியுள்ள நீரா ராடியா ஒலிநாடாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் நீரா ராடியாவின் தலையீடு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசின் கொள்கையை வகுத்திருப்பது தெரிகிறது. மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவுடன் அவர் தொலைபேசியில் பேசிய விவரங்கள் தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. நீரா ராடியாவுடன் தான் பேசிய விவரங்களை மேற்கொண்டு வெளியிடக் கூடாது என ரத்தன் டாடா உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தியக் குடியுரிமைச் சட்டவிதி 32, வாழ்வதற்கான உரிமை, தனிமனிதரின் சொந்த விவகாரம் காத்தல் உள்ளிட்டவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. தொலைபேசி உரையாடல் விவரங்கள் ரகசியமாக வெளியாவது இத்தகைய விதியை மீறிய செயல். இந்த வழக்குத் தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட தொலைபேசி உரையாடல் பதிவுகளை ரகசியமாக வைத்திருக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று ரத்தன் டாடா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
""தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகிறது. வரி ஏய்ப்பு, கருப்புப்பண மோசடி, நிதி முறைகேடு போன்றவை இதன் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. எனினும் ஒட்டுக் கேட்கப்படும் தகவல்கள் பகிரங்கமாக வெளியாவது கவலையளிக்கிறது'' என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்.
அத்துடன், தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்குமாறு அமைச்சரவைச் செயலருக்கு பிரதமர் ஆணையிட்டுள்ளார். இதன்மூலம் ஊழல் குற்றச்சாட்டின்படி தனது அரசுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் பற்றியோ, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழப்பைப் பற்றியோ கவலைப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் மத்தியில் ஒருவிதப் பதற்றம் உருவாகியிருப்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறார் என்பது தெரிகிறது.
சொந்த நலனா? தேச நலனா? என்ற கேள்வி எழுகிறபோது, தேசநலனே முதலில் நிற்க வேண்டும். விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்க ஓர் அமைச்சர் லஞ்சம் கேட்டதால் ஓர் இரவு முழுவதும் தூக்கம் போய்விட்டது என்று கூறிய டாடாவை, நீரா ராடியாவுடன் பேசிய ஒலிப்பதிவு நாடாக்கள் தூங்கவிடாமல் ஏன் துரத்துகின்றன?
மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவோரை பிரதமர்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், யார் இடம்பெற வேண்டும், யார் இடம்பெறக் கூடாது என்பதை அரசியல் தரகர்கள் தீர்மானித்துள்ளனர். மக்களாட்சி மலர வாக்களித்த பொதுமக்களுக்கு அரசின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டாமா?
தொழிலதிபர்கள் தங்கள் விருப்பம்போல வணிக பேரங்களை நடத்துவதன் மூலம் ஊழலுக்குத் துணைபோவதுதான் தனிமனித சுதந்திரமா? இதைத்தான் அரசியல் சாசனம் அனுமதிக்கிறதா? ஆட்சியாளர்களும், தொழிலதிபர்களும் சேர்ந்துகொண்டு மக்களை ஏமாற்றுவதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?
இந்தியா மட்டுமல்ல, உலகமே உண்மைகளைக் கண்டு அஞ்சுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியத் தகவல்களை வெளியிட்டு விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அதன் நிறுவனர் அசாஞ்சேவை விடுதலை செய்ய வேண்டுமென உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்மையை அறிவதற்கான ஆர்வம் இது.
2005-ம் ஆண்டு நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கே லஞ்சம் வாங்கிய விவகாரத்திலும், முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அதனைக் கண்டுபிடித்து வெளியிட்ட ஊடகத்தின்மீது நடவடிக்கை எடுப்பதற்கே துடித்தனர். லஞ்சமும், ஊழலும் தடுக்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, அவை மக்களுக்குத் தெரியாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதிலேயே அரசாங்கம் குறியாக இருக்கிறது என்பது இதனால் தெரிகிறதா?
""உண்மையில் அதிகாரம் மக்களிடத்தில்தான் உள்ளது. இப்போதைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இல்லாமல் சுயேச்சையாக நாடாளுமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை, அது இருக்கவும் இயலாது'' என்று கூறியவர் காந்தியடிகள். அவரையே மறக்கப்பட்டுவிட்டபிறகு, அவரது வார்த்தைகளா நினைவில் இருக்கப் போகின்றன?
யானைக்குத் தன் பலம் தனக்கே தெரியாது; அது ஒரு சாதாரண மனிதனிடம் அடங்கி நிற்பதுபோல, நம் மக்களும் தங்கள் ஆற்றலை அறியாமல் கையேந்தி நிற்கின்றனர். இந்தியா இப்போதும் வளமானதுதான். ஆனால், இந்தியர்கள் வறுமையில் வாடுவதற்குக் காரணம் இதுதான். மக்களாட்சியின் மாண்பு தெரிகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.