கட்டுரைகள்

மின்சாரத் தட்டுப்பாடு: சில கவலைகள்

ஒரு வழியாக 2 மணி நேர மின் தடை, வளர்ந்து (ஒளிர்ந்து!) மார்ச் 28-ம் தேதியிலிருந்து 3 மணி நேரமாகிவிட்டது. மின் வாரிய அறிவிப்பு 29-ம் தேதியிலிருந்துதான்.   ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்

சா. ஜெயப்பிரகாஷ்

ஒரு வழியாக 2 மணி நேர மின் தடை, வளர்ந்து (ஒளிர்ந்து!) மார்ச் 28-ம் தேதியிலிருந்து 3 மணி நேரமாகிவிட்டது. மின் வாரிய அறிவிப்பு 29-ம் தேதியிலிருந்துதான்.

  ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 2 மணி நேர மின் தடை மக்களுக்கு இயல்பாகிவிட்டதைப்போல, கொஞ்சநாள்களில் 3 மணி நேர மின் தடையும் இயல்பாகிவிடத்தான் போகிறது. அதனால் ஏற்படும் தொழில்ரீதியான சிக்கல்களுக்கு மானியம், தள்ளுபடி, உடல் அவதிகளுக்கு மருந்துகளும் வரலாம், காத்திருப்போம்.

  அரசுத் தரப்பிலிருந்து மெகாவாட், மில்லியன் யூனிட், பற்றாக்குறை, மத்தியத் தொகுப்பு, காற்றாலைகள், பருவமழை பொய்ப்பு என ஏராளமான சொற்பதங்கள் கணக்கீடுகளுடன் உமிழப்படுகின்றன.

  ஆனால், இவையெதுவும் சாதாரண மக்களுக்குத் தேவையில்லை. இந்த ஆய்வுகள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும்தான் தேவை. அவற்றைக் கொண்டு சரிசெய்யப் போகிறவர்கள் அவர்கள்தான். "ஜனநாயக நாட்டில்' வெளிப்படையாக அறிவிக்கிறோம் என்ற பெயரில் ஒரு வகையான குழப்பத்தைத்தான் இந்த சொற்பதங்களும், கணக்கீடுகளும் செய்கின்றன.

  இரண்டே விஷயங்கள்தான் இப்போது உயர்ந்து உயிரை எடுக்கும் மின் தடையின் அம்சங்கள். முதலாவது, மக்கள் தொகைப் பெருக்கம்- மக்களின் தேவைப் பெருக்கம். இரண்டாவது, இந்தப் பெருக்கங்களுக்குத் தக்கவாறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை- அல்லது உற்பத்தி செய்ய முடியவில்லை என்பது.

  தட்டுப்பாடு என்ற சொல்லே எப்போதாவது பிரயோகிக்கப்பட்டு வந்த ஒன்றாக இருந்து, சமீபகாலமாக எல்லா துறைகளிலும் நுழைந்துவிட்டது. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கேற்ப அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள்... அவற்றுக்கான மின்சாரத்துக்கு இன்று தட்டுப்பாடு.

  சோம்பேறிகளை உருவாக்கிவரும் நுகர்வுக் கலாசாரத்தால் இப்போது பெரும்பாலான வீடுகளிலும் மின்சாதனங்கள் துணி துவைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி எனப் பெருகிவிட்டிருக்கின்றன. ஆள்வோரின் அரசியல் தேவைக்காக வீடுகள்தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள். இவையெல்லாமும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணங்கள்.  மரபுசாரா எரிசக்தி பயன்பாடு, சூரிய சக்தி விளக்குகள், அடுப்பு போன்ற மின் சிக்கனத்துக்கான அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைச் சாத்தியமுள்ளவையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

 இப்போது "புளோரோசென்ட்' பல்புகள்தான் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் என்று அதிக விற்பனையை எட்டியிருக்கின்றன. ஆனால், இந்த வகை பல்புகளால் சுற்றுச்சூழலுக்குப் பெரும்கேடு காத்திருக்கிறது என்ற எச்சரிக்கையும் நம்மை அச்சமுறச் செய்கின்றன.

  அடுத்ததுதான், மின் உற்பத்தி. தேவைக்கேற்ப தொலைநோக்குத் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் வலுவான குற்றச்சாட்டு.

அடுத்த சில பத்தாண்டுகளுக்குத் தேவையான மின் உற்பத்திக்கு இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலும் கிடைக்கவில்லை.

  தமிழ்நாட்டில் 2012-ல் ஏறத்தாழ 5,900 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்திக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பிலும் சந்தேகமே எழுகிறது. ஏனென்றால், நாடு தழுவிய அளவில் மின் உற்பத்திச் சாதனங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

  அப்படியானால், என்னதான் தீர்வு என்று கேள்வி கேட்கும் நிலையிலும் எவரும் இல்லை. தள்ளுபடிகளுக்குள்ளும், இலவசங்களுக்குள்ளும், மானியங்களுக்குள்ளும், சலுகைகளுக்குள்ளும் மக்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.

 நிரந்தரத் தீர்வு என்ற சொற்றொடர் மறைந்துபோய்விட்டது, குறைந்தபட்சம் நீண்டகாலத் தீர்வாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

  ஒருபுறம் மின் சிக்கனத்துக்கான வழிமுறைகள், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், மறுபுறம் தொலைநோக்குத் திட்டங்களை வகுக்கவும் அரசு முயல வேண்டும். இவை இரண்டையும் சமவேகத்தில் செய்யாமல் போனால், அடுத்த ஆண்டு இந்த மின் தடை நேரம் 4 மணி நேரத்தையும் தாண்டலாம்.

  ஏனென்றால், மின் தட்டுப்பாடு தவிர்க்க முடியாது என்பதுடன், இப்போதுள்ள மின் தட்டுப்பாடு இன்னும் பல மடங்கு அதிகரிக்கப் போகிறது என்பதும் உண்மை.

 மக்களுக்கான பொறுப்புணர்வுகளை மட்டும் கூறிக் கொண்டு, திட்டங்களை வகுக்காமல் இருக்கும் அரசும் குற்றவாளி. திட்டங்களை வகுக்க வேண்டியதுதானேஎன்று குறைகூறிக் கொண்டே பொறுப்புணர்வுகளை மறந்துவிடும் மக்களும் குற்றவாளி.

  இதைப் பற்றியெல்லாம் அரசியல்வாதிகளுக்குக் கவலையில்லை. அடுத்த பொதுத் தேர்தல் எப்படியிருக்கும், எப்படியிருக்க வேண்டும் என்பது அவர்களுக்கான பிரதான கவலை. மின் தடை பெரிய பிரச்னையை ஏற்படுத்தினால், அதற்காக மக்களுக்குக் கூடுதல் தொகையைப் பங்களிக்க வேண்டியிருக்கும் அவ்வளவுதானே?

  மின் தடையால் ஏதாவது சலுகைகள் கிட்டுமா? தேர்தலின்போது தவறாமல் நம் வீட்டுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டுமே! இவை மக்களுக்கான கவலைகள். இந்தக் கவலைகள் மாறாமல் மாற்றம் சாத்தியமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT