ஓரு காலத்தில் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்று அழைக்கப்பட்ட கிரிக்கெட் இன்று சூதாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது. எந்த நாட்டு அணிகள் விளையாடினாலும் ரசித்துப் பார்த்த காலம் மாறி, சொந்த நாட்டு அணி விளையாடினாலும் அந்தப் போட்டியின் முடிவு முன்னரே முடிவு செய்ததாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ரசிக்க முடியவில்லை.
பல அணி வீரர்கள் மீது இந்த சூதாட்டப் புகார் கூறப்பட்டிருந்தாலும், பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் பேருக்கு இந்த சர்ச்சையில் தொடர்பு உள்ளது தெரியவந்து பாகிஸ்தான் அணிக்கே சர்வதேச போட்டிகளில் ஆட தடை விதிக்க வேண்டும் என்ற வாதம் எழுந்துள்ளது.
"மேட்ச் பிக்ஸிங்' என்கிற, போட்டியின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கிற சூதாட்டம், பரிணாம(!) வளர்ச்சி அடைந்து, குறிப்பிட்ட ஓவரில் இத்தனை "நோ பால்' வீச வேண்டும், எத்தனை ஓவர்கள் விளையாடினாலும் இத்தனை ரன்களுக்கு மேல் அடிக்கக் கூடாது என்று முன்கூட்டியே தீர்மானிக்கும் "ஸ்பாட் பிக்ஸிங்' ஆக மாறியுள்ளது.
இப்போதெல்லாம் கிரிக்கெட்டை மையமாக வைத்து கோடிக்கணக்கில் "பெட்டிங்' நடக்கிறது. ஒவ்வொரு பந்து வீச்சுக்கும், ஒவ்வொரு ரன்னுக்கும் சூதாட்டக்காரர்கள் பந்தயம் கட்டுகின்றனர். குறிப்பிட்ட ஓவரில் வீசப்படும் பந்து நோ பாலா, வைடு பாலா என்று சூதாட்டக்காரர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டால் அவர்களது காட்டில் அடைமழைதான்.
மேலும் ஆட்டத்தின் முடிவையே மாற்ற வேண்டுமானால் பல வீரர்களை அணுக வேண்டியிருக்கும், ஆனால், ஸ்பாட் பிக்ஸிங்கிற்கு குறிப்பிட்ட சில வீரர்களை அணுகினால் போதும் என்பதால் இப்போது ஸ்பாட் பிக்ஸிங் புகழ்பெற்று (!) வருகிறது போலும்.
அண்மையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், கம்ரான் அக்மல், முகமது ஆஸிப், முகமது ஆமீர், உமர் ஆமீன், வகாப் ரியாத் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. சூதாட்டக்காரர்களின் ஏஜெண்ட் ஒருவருடமிருந்து முகமது ஆஸிப்பும், முகமது ஆமீரும் பணத்தைப் பெற்றுக் கொண்டதை பிரிட்டிஷ் பத்திரிகை கேமராவில் பதிவு செய்து வெளியிட்டு அம்பலப்படுத்தியது. அதன் அடிப்படையில் மஸôர் மஜீத் என்ற ஏஜெண்ட் கைது செய்யப்பட்டார்.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஹைதர் பாதியிலேயே அணியிலிருந்து விலகி, கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.
சூதாட்டக்காரர்களின் கொலை மிரட்டலே இதற்குக் காரணம் என்று அவர் சொன்னது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடத்தல் மாஃபியா போல, கிரிக்கெட்டில் சூதாட்ட மாஃபியா கும்பலின் ஆதிக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இந்தச் சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமல்லர், அண்மையில் இலங்கை அணியுடனான போட்டியின்போது, இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவை சூதாட்டக்காரர்களின் பெண் ஏஜெண்ட் ஒருவர் சந்தித்ததாகப் புகார் எழுந்தது. ஆனால், விளம்பரம் தொடர்பாகவே அந்தப் பெண் சந்தித்தார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்தது.
இலங்கை அணி வீரர்கள் சங்ககரா, தில்ஷான் ஆகியோர் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அதை மறுத்துள்ளது.
ஒரு போட்டித் தொடரின்போது இந்தியா வந்திருந்த தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் மீது சூதாட்டப் புகார் கூறப்பட்டது. இன்றும் அவர் தில்லி போலீஸின் விசாரணை வளையத்தில்தான் உள்ளார்.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியிலும் சூதாட்டம் நடந்ததாகத் தகவல் வெளியானது. இதில் எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால், சூதாட்டம் எல்லா அணியிலும் பரவி வருவது மட்டும் உறுதி.
எல்லாம் சரி, சூதாட்டத்தைத் தடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளனவா? இதற்கு முன்னர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், தென் ஆப்பிரிக்க அணியின் ஹான்சி குரோனி, பாகிஸ்தானின் சலீம் மாலிக், இந்திய அணியின் அசாருதீன் ஆகியோருக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி வீரர் சோயப் மாலிக் மீது எழுந்த சூதாட்டப் புகாரின்பேரில் அவருக்கு சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இப்படி வெறுமனே தடை விதித்தால் மட்டும் சூதாட்டத்தைத் தடுத்துவிட முடியுமா? ""ஐசிசி நினைத்தால் சூதாட்டத்தைத் தடுக்க முடியும்'' என்கிறார் பாகிஸ்தான் வீரர் ஹைதர். சர்வதேசப் போட்டிகளின்போது அதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு வீரரின் டெலிபோன் உரையாடலையும் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என்கிறார் அவர். சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு தடை விதித்தால் மட்டும் போதாது, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. சூதாட்டக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்து.
கால்பந்துக்கு அடுத்தபடியாக கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள கிரிக்கெட் விளையாட்டை நேர்மையாக, நியாயமாக நடத்த வேண்டியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கடமை. கிரிக்கெட் விளையாடாத நாடுகளில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, கிரிக்கெட்டில் படிந்துள்ள சூதாட்டக் கறையை அகற்றுவதிலும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஜென்டில்மேன்களின் விளையாட்டு யாரோ ஆட்டுவிக்கும் பொம்மலாட்டமாக மாறிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.