கட்டுரைகள்

பிளேரின் அரசியல் பயணம்!

நான் உணர்ச்சிபூர்வமானவன்; அடுத்தவர்களின் கவனத்தைக் கவர்வதற்காக எதையும் மிகைப்படுத்திக் கூறுபவன், எப்போதாவது குடிப்பவன்' என்று சுயசரிதையில் தன்னைப் பற்றி வெளிப்படையாகச் சொல்கிறார் பிரிட்டனின் முன்னாள்

புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

நான் உணர்ச்சிபூர்வமானவன்; அடுத்தவர்களின் கவனத்தைக் கவர்வதற்காக எதையும் மிகைப்படுத்திக் கூறுபவன், எப்போதாவது குடிப்பவன்' என்று சுயசரிதையில் தன்னைப் பற்றி வெளிப்படையாகச் சொல்கிறார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர்.

 இதுபோல தனது எதிரிகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரது தனிப்பட்ட குணங்களையும் இந்தப் புத்தகத்தில் அவர் அலசுகிறார். உலகை ஆக்கிரமித்த வல்லரசு நாட்டில் மூன்று முறை பிரதமரானவர் என்கிற முறையிலும், உலக அரசியல் களம் திரிவுற்ற காலத்தில் முக்கிய முடிவுகள் எடுத்தவர் என்ற வகையிலும் இவரது சுயசரிதை முக்கியத்துவம் பெறுகிறது.

 இன்னொரு முன்னாள் பிரதமர் கார்டன் பிரெüனுக்கும் டோனி பிளேருக்கும் இடையிலான நட்பு மிக ஆழமானது. நீண்ட வரலாற்றைக் கொண்டது. அரசியல் சூறாவளிகளில் இந்த நட்பு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. ஒரே கட்சிக்குள் இருந்தாலும் பலமுறை நீயா-நானா என இவர்கள் முட்டிக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய அரசியல் முடிவுகளில் வேறுபட்டு நின்றிருக்கிறார்கள். மோசடிகளும் துரோகங்களும்கூட இவர்கள் நட்பில் இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் எதையும் கொள்கையுடன்கூடிய உறவாக இருந்த இவர்களது நட்பு, நாளடைவில் உள்பகையாக மாறியது. ஆனாலும், இவர்கள் எப்போதும் தனிப்பட்ட முறையிலான கசப்புணர்வை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால், சுயசரிதை வடிவில் பிளேரே இந்த உறவுக்கு வெடி வைத்திருக்கிறார்.

 எதிர்பார்த்தபடியே "ஒரு பயணம்' என்ற பெயரில் வெளிவந்திருக்கும் பிளேரின் சுயசரிதை, பிரிட்டன் அரசியலைப் பரபரப்பாக்கியிருக்கிறது. லேபர் கட்சி, கார்டன் பிரெüன், அலஸ்டார் கேம்பல், இராக் மீதான போர், ஈரான் அணுசக்தி, அமெரிக்க உறவு, பட்டங்களை வழங்கப் பணம் பெற்ற விவகாரம், டேவிட் மிலிபாண்ட், மத்திய கிழக்கு விவகாரம் என எல்லாக் கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் இருக்கிறது. பிளேர் எதற்காகவும் மன்னிப்புக் கேட்கவில்லை. அதற்காக எல்லாவற்றையும் நியாயப்படுத்தவும் இல்லை. தெரிந்தே எந்தத் தவறையும் செய்யவில்லை என்கிறார்.

 இந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில், "பிரதமர் பதவிக்குச் சரியான நபர் என்று சகாக்களின் பேச்சைக் கேட்டு பிரெüனிடம் ஆட்சியை ஒப்படைத்தது தவறு. கட்சியை பிரெüன் ஒழித்துக் கட்டிவிடுவார் என்று முன்பே எனக்குத் தெரியும்' என்று வெடித்திருக்கிறார் பிளேர்.

 2007-ம் ஆண்டில் தனது புகழுக்குக் களங்கம் ஏற்பட்டு, பிரதமர் பதவியில் இருந்து இறங்க வேண்டிய நிலை வந்தபோது ஏற்பட்ட சங்கடங்கள் குறித்தும், அந்தச் சூழலை "மற்றவர்கள்' பயன்படுத்திக் கொண்டதையும் பிளேர் நினைவுபடுத்தியிருக்கிறார்.

 பிரௌனுக்கு அரசியல் ஞானம் உண்டு; அரசியல் உணர்வு சுத்தமாகக் கிடையாது. பகுத்தறிவு நிறையவே இருக்கிறது, ஆனால் உணர்வுப்பூர்வமான அறிவில் அவர் பூஜ்யம் என்றும் பிளேர் சாடியிருக்கிறார். எல்லாம் தெரிந்திருந்தும் தன்னால் பிரெüனை பதவியிலிருந்து அகற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார். தன்னிடமிருந்து பதவி பறிக்கப்பட்ட விதத்தை பிரெüன் தமக்குச் செய்த துரோகமாகவே மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார். 600 பக்கங்கள் கொண்ட இந்தச் சுயசரிதையில் பல இடங்களில் பிரெüனை தனிப்பட்ட முறையில் தாக்கி பிளேர் எழுதியிருக்கிறார்.

 பிளேரின் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாகக் கருதப்படும் இராக் போர் பற்றி இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. இராக் போர் இப்படிச் சோகமாக முடியும் என்று தாம் முன்பே உணரவில்லை என்றும் அது முழுமையான தோல்வி என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதற்காக பிளேர் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானபோது, தமக்கு போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது என்று தனது நிலையை நியாயப்படுத்தவே அவர் முயற்சித்திருக்கிறார்.

 இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அறிக்கை வெளியானது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களிலும் தம்மீது எந்தக் குற்றமுமில்லை என நழுவியிருக்கிறார்.

 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்புவரை இஸ்லாம் மதத்தை தாம் புரிந்து கொள்ளவில்லை என்று பிளேர் குறிப்பிட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒருவேளை தப்பித்துக் கொள்ளும் வழியாக இருக்கலாம். தனது வாழ்வின் மீதிப் பகுதியை மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதற்காகச் செலவிடப் போவதாகவும், முஸ்லிம் உலகுக்கும் மற்ற மத நம்பிக்கைகளுக்கும் உறவை ஏற்படுத்த முயற்சிக்கப் போவதாகவும் உறுதியளித்திருக்கிறார். இனிவரும் போர்கள் ராணுவ ரீதியிலானவையாக இருக்காது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் பிளேர், நுண்ணரசியல் வழியில் மென்மையான போர்களே இனி உலகை ஆக்கிரமிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

 லேபர் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் நிலையில், உள்ளூர் அரசியலிலும் பிளேரின் புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் அமைச்சர்களான டேவிட் மிலிபான்ட், எட்வர்ட் மிலிபான்ட், எட்வர்ட் பால்ஸ் உள்ளிட்ட 5 பேர் இருக்கின்றனர். இவர்களில் யாருக்கும் வெளிப்படையான ஆதரவை பிளேர் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், எட்வர்ட் மிலிபான்ட் மீது பல குறைகளைத் தெரிவித்திருப்பதன் மூலம், முன்னாள் சகாவான டேவிட் மிலிபான்டுக்கு தார்மிக ஆதரவை வழங்கியிருக்கிறார்.

 இதற்கெல்லாம் மேலாக, புத்தக அறிமுக நிகழ்ச்சியில் பேசி இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் பிளேர். ஈரானின் அணுஆயுதத் தயாரிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியிருக்கும் அவர், அது தொடர்ந்தால் ஈரான் மீது போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று எச்சரித்திருக்கிறார். மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்தப் போகிறேன் என்று கூறிவிட்டு போர் தொடுப்பேன் என்று எச்சரிப்பது எந்த வகையான நியாயம் என்று தெரியவில்லை. ஒருவேளை அவரே கூறியதுபோல எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டுகிறாரோ என்னவோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT