பல வகைகளில் இந்தத் தேர்தல் கவனமுடன் உற்றுநோக்க வேண்டிய தேர்தலாக அமைந்துவிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் ஆளுயர கட்அவுட்டுகள், டிஜிட்டல் பேனர்கள், வண்ண வண்ணச் சுவரொட்டிகள் இல்லாமலும் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்ற முன்னுதாரணத்தை நமக்கு தேர்தல் ஆணையம் காட்டியிருக்கிறது.
ஆனால், பணத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியைத்தான் கொடுத்திருக்கின்றன. மக்களே நேரடியாகத் தொடர்புடையவர்களாக இருக்கும்வரை இது இயல்புதான். பிடிபட்ட பல கோடிகளில் பெரும்பகுதி முறையான கணக்கின்றி தொழில் செய்யும் தொழிலதிபர்களின் பணம்தான். மிகச்சில கோடிகள்தான் மக்களுக்கு விநியோகிக்கத் தயாராக இருந்த அரசியல்வாதிகளின் பணம்.
மாநிலம் முழுவதும் பிடிக்கப்பட்ட மொத்தத் தொகையின் அளவுக்கு பல மடங்கு அதிகமான தொகை மக்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான உண்மை.
சாலையோரங்களில் இருக்கும் இரவு நேரக் கடைகளில் "ரூ. 500, 1000-க்கு சில்லறை இல்லை' என்று எழுதிப் போடும் அளவுக்கு சரளமான புழக்கம்.
சில தொகுதிகளில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி எல்லாக் கட்சியினருமே இந்தச் செயலைச் செய்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
மே 13-ம் தேதிதான் இந்தப் பணத்தின் முகம் என்ன என்பது தெரியவரும். பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கும் அதிசயங்கள் நிகழுமா என்பதெல்லாமும் கேள்விகள்தான். அரசியல்வாதிகளில் பலரும் "பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; எனக்கு வாக்களியுங்கள்' என்றும் கூறியிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதும் விரைவில் தெரியவரும். இரு தரப்பும் "கொடுத்த' தொகுதிகளில் மட்டும் குழப்பம் வரலாம்!
பணம் வாங்காதீர்கள் என்று சொல்லி துண்டுப் பிரசுரம் கொடுத்தவர்களுக்கும் பெரிய வெற்றி கிட்டவில்லை. ஒருவேளை, அது விதையாக இருந்திருக்கலாம்; பின்னொரு நாளில் முளைக்கலாம்.
"ரூ. 500 வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள். 5 ஆண்டுகள் உங்களைச் சுரண்டுவதற்கு நாளொன்றுக்கு 25 பைசா வீதம் கொடுக்கிறார்கள். ரூ. 200 வாங்கிக் கொண்டால், நாளொன்றுக்கு 10 பைசா! இந்தக் காசுகளையெல்லாம் ரிசர்வ் வங்கியே செல்லாது என்று அறிவித்துவிட்டது' என்ற அந்த வரிகள் நம்மில் நுழைந்திருக்கும் மோகத்தின் உண்மையை- மென்று, காறி உமிழ்பவை.
இதற்கிடையே, இன்னொரு முக்கியமான, கவனிக்க வேண்டிய அம்சம்தான்- "49 ஓ'. பெரும்பாலான தொகுதிகளில் பரவலாக, சில தொகுதிகளில் அதிகமாகவும் இந்தப் பிரிவு வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் "49 ஓ' இருக்குமானால், இப்போது அரசியல்வாதிகள் அடிக்கும் கொட்டம் சப்தமின்றி மட்டுப்படும். முறைப்படி உடல் முழுவதும் மயிர்கூச்செறியும் வண்ணம் வெட்கம் பிடுங்கித் தின்ன வேண்டும். ஆனால், அது நடக்குமா? நடந்தால் ஆச்சரியம்தான்.
இவர்களுக்கு ஏன் யாருக்கும் வாக்களிக்கப் பிடிக்கவில்லை? வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை. அப்படியானால் என்ன? இந்தத் தேர்தல் களத்தில் இருப்பது திமுகவும், அதிமுகவும்; முற்றிலும் எதிரெதிர் அணியில் இருந்தவையெல்லாம் இந்த முறை ஏதோவொரு சாக்குபோக்குச் சொல்லி ஒன்று சேர்ந்திருக்கின்றன.
இந்திய ஜனநாயகக் கட்சி, இன்னும் சில ஜாதிக் கட்சிகளுடன் இணைந்து ஓர் அணியை உருவாக்கிக் கொண்டு போட்டியிட்டது. நல்லவேளையாக அவர்கள் மூன்றாவது அணி என்று சொல்லவில்லை! பாஜக, ஜனதா கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டது.
மற்றவர்கள் சுயேச்சைகள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் அதிருப்தியாளர்கள் (முடிவுக்குப் பிறகு சேர்ந்து கொள்வார்கள்!), பினாமிகள். "மாற்று' என்ற பெயரில் சில அமைப்புகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டனர். ஆனால், அவர்களிலும் சிலர் வசதி வந்தபக்கம் சாய்ந்த "மாற்றமும்' இந்தத் தேர்தலில் காணப்பட்டது.
தீர்வைச் சொல்ல வேண்டிய பலரும் இதுவரை "வேறு வழியில்லை' என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். "வேறுவழி தெரியவில்லை' என்று இவர்கள் சொல்வதை மட்டும் மறுப்பது ஏன்?
கொள்ளையும், அராஜகமும் தலைவிரித்தாடி, பணம் மட்டுமே எல்லாவற்றையும் முடிவு செய்யும் என்ற நிலை உச்சகட்டமடைந்து, உணவுகூட கிடைக்காத நிலை உருவாகி எல்லாவற்றையும் இழக்கும்போதுதான் உண்மையான ஒரு மாற்றுத் தேவையை உருவாக்கும்.
இன்றில்லாமல் இருக்கலாம்; நாளையில்லாமல் இருக்கலாம். ஒரு நாள் ஆர்த்தெழுந்து கிளம்பும் கோடிக்கால் பூதமாக அது மாறும். இப்போதிருப்பவர்கள் "யாருமே' அப்போது அந்தப் பூதத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. அது முற்றிலும் புதிய பூதமாக இருக்கும். அந்த அளவுக்கு இப்போதிருக்கிற "எல்லோரும்' உறுதிப்பாடில்லாது நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.