கட்டுரைகள்

அசரவைத்த ஹஸôரே!

எலக்சன் கமிசன்ல யாரு சாமி தலைவரு? அவருக்குக் கோயில் வச்சு கும்பிடனும்' இது சாதாரண எழுதப்படிக்கத் தெரியாத ஏழை சலவைத் தொழிலாளியின் கருத்து. தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வாகனச் சோதனையில் பல கோடி

ஆர். நட​ராஜ்

எலக்சன் கமிசன்ல யாரு சாமி தலைவரு? அவருக்குக் கோயில் வச்சு கும்பிடனும்' இது சாதாரண எழுதப்படிக்கத் தெரியாத ஏழை சலவைத் தொழிலாளியின் கருத்து. தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வாகனச் சோதனையில் பல கோடிப் பணத்தை மடக்கி முடக்கிய தேர்தல் ஆணையத்துக்கு ஒரு பொது ஜனத்தின் இத்தகைய பாராட்டு மதிப்பிட முடியாததொன்று.

 இதுவரை தமிழகத்தில் 42 கோடி ரூபாய் வாகனச் சோதனையிலும், சந்தேக இல்லங்களில் சோதனையின்போதும் சிக்கியிருக்கிறது. ஆனால், தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் கைப்பற்றிய பணம்தான் அதிகம் என்று நாம் பெருமைப்படுவதா அல்லது வேதனைப்படுவதா?

 அரசியல்வாதிகளால் நமது மாநிலத்தில் பணப்புழக்கம் அதிகம் என்று சில சுயநலவாதிகள் பெருமைகொள்ளலாம், ஆனால், லஞ்சப் பணப் புழக்கம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறதே என்ற ஆதங்கம் பெருவாரியான மக்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

 காந்தியவாதி அண்ணா ஹஸôரே லஞ்சலாவண்யத்தை எதிர்த்துத் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் சாதாரண இந்தியனின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏதோ ஊடகங்களில் வந்த செய்தியை வைத்து இந்திய நடுத்தர வர்க்கம் மட்டும் ஆர்வமாகக் களம் இறங்கியுள்ளது என்று புறக்கணித்துவிட முடியாது.

 லஞ்சம் என்பது எல்லாவிதத்ததிலும் தலைவிரித்தாடுகிறது என்பது எல்லோருடைய கோபத்தையும் தூண்டியுள்ளது. எவ்வளவுநாள்தான் தாங்கிக் கொள்வார்கள்? எந்த அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும் பணம் கொடுக்காமல் கோப்பு நகராது என்ற நிலை. பணம் வாங்கினாலும் வேலை நடந்தால் பெரிய விஷயம் என்ற நிலை வந்துள்ளது.

 மேலும், நாட்டின் சொத்து இயற்கை வளம், அதிகாரத்தில் உள்ளவர்களால் சூறையாடப்படுவது மத்திய புலனாய்வின் மூலம் வெளிவந்துள்ளது. இது மக்களின் வெறுப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 இதன் வெளிப்பாடுதான் தில்லி ஜந்தர் மந்தரில் அண்ணா ஹஸôரேவுக்குக் கிடைத்த பொதுமக்களின் ஆதரவு.

 1964-ம் ஆண்டு சந்தானம் கமிட்டி அரசுத் துறைகளில் ஊழலைத் தடுப்பதற்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்தவும் பல பரிந்துரைகளைக் கொடுத்தது.

 அதைத்தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்தாலும் அது கடலில் கரைந்த பெருங்காயமாகப் பிசுபிசுத்தது. அதற்கு முக்கிய காரணம் இயற்றப்பட்ட சட்டங்கள் சரியாக முனைப்பாக பாரபட்சமின்றிப் பிரயோகிக்கப்படவில்லை என்பதை மறுக்க முடியாது.

 இப்போது லோக்பால் மசோதாவை விவாதத்துக்குக் கொண்டுவர அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றவர்கள் மீதே அதிருப்தி நிலவியதால் ஓர் அமைச்சர் குழுவில் இருந்து விலக நேர்ந்தது. இப்போது அண்ணா ஹஸôரேயின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு திருத்தி அமைக்கப்பட்ட குழு உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதில் சமுதாயப் பற்றுடைய நல்லோர் இடம் பெறுவார்கள் என்ற ஆணை எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

 அமைதியான முறையில் காந்தியவாதி அண்ணா ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் கண்ணியமான வழியில் மக்கள் ஆதரவோடு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவு ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் முக்கிய ஆரம்பம். இது பரிமாண வளர்ச்சி அடைய வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு.

 தேர்தல் களத்தில் மக்களைப் பணபலத்தால் வசப்படுத்த முடியும் என்ற நிலை ஜனநாயகத்தையே அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்று விடும். இது ஊழல் ஊடுருவலின் உச்சகட்டம். அந்த நிலை மாறுவதற்கு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருமங்கலம் ஃபார்முலா என்று நாட்டிலே பேசப்படுவது தமிழகத்துக்குத் தலைக்குனிவு.

 தேர்தலின்போது அதை அமைதியாக நடத்தத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளில் முக்கிமானது பணம், மதுபானங்கள், பரிசுப்பொருள்கள் சட்டத்துக்கு விரோதமாக விநியோகிப்பதைத் தடுக்க எடுக்கப்படும் முயற்சி. வாகனத் தணிக்கையிலிருந்து தப்பிக்க பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் பணம் கடத்தப்படுவது கவனத்துக்கு வந்துள்ளது. பல மாவட்டங்களுக்குப் பிரத்யேகத் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மதுபானங்கள் விற்கும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் சுமார் 6,800 உள்ளன. எது கிடைக்கிறதோ, இல்லையோ மதுபானம் சுலபமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ள மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். எந்த மாநகரத்திலும் மது விற்கப்படும் கடையை ஒட்டி மது அருந்தும் வசதி கிடையாது. உரிமங்கள் பெற்ற பார்களில்தான் மது அருந்த முடியும். ஆனால், மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் தாற்காலிகமாக கூரை போட்ட சுகாதாரமற்ற இடங்கள் பார்களாகக் கருதப்பட்டு உரிமங்கள் கொடுக்கப்பட்டு நடைபெறும் அவல நிலை தமிழகத்தில்தான் உள்ளது.

 பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் அருகில் மதுபானக்கடைகள் அமையக்கூடாது என்று விதிகள் இருந்தாலும் பல கடைகள் பார் வசதியோடு இயங்குவதைக் காணலாம். கூட்டம் நிரம்பி வழியும் இந்தக் கடைகளில் அதிக விலைக்கு விற்பது, கலப்படம், குறிப்பிட்ட விற்பனை நேர விதிகளை மீறுவது, விடுமுறை நாள்களில் மறைமுகமாக விற்பது போன்ற பல முறைகேடுகளைக் கண்காணித்துக் களையும் பொறுப்பு அமலாக்கப்பிரிவுக்கு உண்டு.

 பார்களிலிருந்து குடித்துவிட்டுத் தள்ளாடும் குடிமகன்களின் அட்டகாசம் அந்த வட்டாரப் பொதுமக்களுக்கும் முக்கியமாக, மகளிருக்கும் பெரிய பிரச்னை. விளக்கு வைத்தால் வெளியில் போக முடியாது.

 பஞ்சாப், ஆந்திர மாநிலங்களுக்கு அடுத்தாற்போல் அதிகமாக மது அருந்தும் மக்கள் தமிழர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் மது விற்பனை 61 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அதுவும் 19 வயதிலிருந்து 26 வயது நிரம்பிய இளைஞர்கள் இடையே மது அருந்தும் பழக்கம் 60 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது.

 ஓர் ஆய்வின்படி கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தில் சராசரி 30 சதவிகிதமும், நகர்ப்புறங்களில் 38 சதவிகிதமும் மது அருந்துவதற்குச் செலவிடுகிறார்கள் என்பது கவலைதரும் தகவல்.

 மது விற்பனை மூலம் வருமானம் பத்தாயிரம் கோடியை 2008-09-ம் ஆண்டு கடந்தது. 2009-10-ம் ஆண்டு ரூ. 12,491 கோடியை எட்டியுள்ளது. மாநில வருவாயில் மதுவிற்பனையில் வரும் வருமானம் சுமார் ஐம்பது சதவிகிதம்.

 1937-ம் ஆண்டு முதல் பூரணமதுவிலக்கு தமிழகத்தில் அமலில் இருந்தது, 1970 -ம் ஆண்டு தளர்த்தப்பட்டது. மதுவைப்பற்றி அறியாமல் ஒரு தலைமுறை வளர்ந்தது. ஆனால், இப்போது மதுவால் இளைய தலைமுறை தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

 தமிழகத்தின் தலைமகன் அப்துல் கலாம், இளைஞர்கள் அதிகமாகக் கொண்ட நமது நாடு வருங்காலத்தில் சிறந்த நாடாக விளங்கும் என்று நமது சமுதாயத்துக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். அது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றால், மயக்கத்தில் உள்ள இளைய தலைமுறை விழித்துக் கொள்ள வேண்டும்.

 இந்தச் சூழலில்தான் அண்ணா ஹஸôரேயின் போராட்டத்துக்கு இளைஞர்கள் கொடுத்த ஆதரவு ஆறுதலைத் தருகிறது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஹஸôரே 1965-ல் இந்திய பாகிஸ்தான் போரில் ராணுவத்தில் பணியற்றியவர். அகமதுநகர் ஜில்லாவில் ரோலேகாவன் சித்தி என்ற கிராமம் 1975-ம் ஆண்டு பின்தங்கிய கிராமம். அந்த எளிய கிராம மக்களின் உழைப்பை உயர்த்தி, தன்னிறைவு அடையச்செய்து செழிப்பான சுற்றுப்புறச் சூழலால் பாதுகாக்கப்பட்ட கிராமமாக மாற்றியவர் அண்ணா ஹஸôரே.

 இன்று அந்தக் கிராமத்தில் சூரிய வெளிச்சம் மூலம் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. மக்கக்கூடிய கழிவுப்பொருள்கள் மூலம் எரிவாயு உற்பத்தியாகிறது. இந்தியாவில் செழிப்பான வசதி படைத்த கிராமமாகத் திகழ்கிறது. யாரிடமும் கையேந்தாமல் சுயமரியாதையோடு இந்தக் கிராம மக்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.

 அண்ணா ஹஸôரே மக்கள் நலனுக்காகப் பல போராட்டங்களில் பங்கு கொண்டவர். 1972-ம் ஆண்டு அப்போதிருந்த சட்ட அமைச்சர் சாந்தி பூஷணால் முன்மொழிப்பட்ட லோக்பால் மசோதா இப்போதாவது குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு. அதிலும் இளைஞர்களின் ஆர்வம் அரசை அசர வைத்தது என்றால் மிகையில்லை.

 விவசாய அமைச்சர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ரசாயன அமைச்சர் போன்றவர்கள் கொண்ட அமைச்சர்கள் குழு கலைக்கப்பட்டு 50 சதவிகிதம் அரசுத் தரப்பிலும் 50 சதவிகிதம் மக்கள் நலம் விரும்பிகள் அடங்கிய 10 நபர்கள் குழு அமைக்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது இந்திய மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.

 நேர்மைக்கு ஒருநிறம்தான். பொய்மையை நியாயப்படுத்தாமல் நேர்மையான அரசு நிர்வாகம் அமைய லோக்பால் சட்டம் வழிவகை செய்யும்.

 சுயமரியாதையை மேடையில் மட்டும் முழங்கி நடைமுறையில் விழுங்கி விழுங்கி ஏழைகளின் பெயரைச் சொல்லிச் சுரண்டும் சுயநலவாதிகள் களையப்பட வேண்டும். மக்கள் ஆதரவைப் பெற்ற அண்ணா ஹஸôரேவின் கனவு மெய்ப்பிக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT