கட்டுரைகள்

வேண்டாம் இந்த வறட்டுப் பிடிவாதம்!

முல்லைப் பெரியாரில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள், போராட்டங்கள், பிரசார இயக்கங்கள் போன்றவை மூலமாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, முல்லைப் பெரியாறு அணை உடைந

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

முல்லைப் பெரியாரில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள், போராட்டங்கள், பிரசார இயக்கங்கள் போன்றவை மூலமாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, முல்லைப் பெரியாறு அணை உடைந்து சேதமேற்படுவதுபோல "டேம் 999' என்ற திரைப்படம் கேரளத்தைச் சேர்ந்த ஒருவரால் ஹாலிவுட் பின்துணையுடன் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை எதிர்கொள்ள, ஏதோ அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்பதுபோலப் பீதியைக் கிளப்புவதற்காகக் கேரளத் தரப்பால் இதுபோன்ற மலிவான உத்திகள் களமிறக்கப்படுகின்றன. தமிழகத்தில் இந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் ஏனைய மாநிலங்களில் திரையிடப்பட்டு தமிழகத்துக்கு எதிரான பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறின் தரவுகள் தமிழர்களின் பண்டைய இலக்கியமான சிலப்பதிகாரத்திலேயே உள்ளது. முல்லைப் பெரியாறின் நதி மூலம் ரிஷி மூலம் தமிழகத்தின் தெற்குச் சீமைதான். திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியின் மேற்கே உள்ள மலையில் உற்பத்தி ஆகிறது. ஒன்றுபட்ட மதுரை இராமநாதபுரம் மாவட்டத்துக்கு காலம் வழங்கிய அருட்கொடையாக முல்லைப் பெரியாறு அமைந்தது.

1886 டிசம்பர் 7-ம் நாள் ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகள் குத்தகை இருந்தும் கேரளம் அதை மறுக்கிறது. இந்த குத்தகைத் தொகையைக் கூட்டியும் தமிழகம் கொடுத்துள்ளது. பழுதுபார்ப்பு செலவுகளுக்கும் தமிழகம் பொறுப்பேற்றுள்ளது.

முல்லைப் பெரியாரில் 1979-லிருந்து நமது உரிமைகள் பறிபோக ஆரம்பித்தன. அந்த ஒப்பந்தத்தில் பறிபோன தமிழக உரிமைகள்:

1979 ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னர் அணையின் 48 அடி தண்ணீர் தமிழகத்தின் பயன்பாட்டில் இருந்தது. ஒப்பந்தத்துக்குப் பின் 3-ல் 2 பங்கு தண்ணீர் கேரளத்தின் இடுக்கி அணைக்குச் சென்றது. மீதம் உள்ள 1 பங்கு தண்ணீரே தமிழகத்துக்குக் கிடைத்தது.

அணையின் பாதுகாப்பை கேரளமே ஏற்றுக்கொண்டது. ஆனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸôருக்கு தமிழக அரசு ஊதியம் கொடுக்கிறது.

அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்து குமுளி அணை வரைக்குமான சாலையை கேரள அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. அணையில் நமது மீன் பிடிக்கும் உரிமையும் பறிபோய் விட்டது.

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு போன்றவற்றை தமிழகம் முற்றிலும் இழந்து விட்டது. ஒப்பந்தத்துக்கு முன்பு அணைக்கு தமிழக அரசின் அனுமதி பெற்றுத்தான் செல்ல முடியும். ஆனால், தற்போது தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு முன் சோதனைச் சாவடி ஒன்றை கேரள அரசு அமைத்து, வரி வசூலித்து பின்னர்தான் அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகப் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் இடத்தில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து பல கட்டடங்களைக் கட்டியுள்ளது. படகில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளானாலும், அலுவலரானாலும் கேரள அரசின் சோதனைச் சாவடியில் பெயர் பதிவு செய்துவிட்டுதான் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழகத்துக்கு எனத் தனிப்பாதை ஒன்று அமைக்க எவ்வளவோ முயற்சித்தும் இன்று வரை இயலவில்லை.

அணைக்கட்டில் தனியாக வயர்லஸ் செட் மற்றும் தனி நீர் மட்ட அளவுகோல் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொண்டு கேரளம் நமது உரிமைகளைப் பறித்துக் கொண்டுள்ளது.

அணைக்கு அருகில் உள்ள தமிழக அரசின் வன விருந்தினர் விடுதி மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த மின்சாரத்தையும் கடந்த பத்து ஆண்டு காலங்களில் கேரளம் பறித்துவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு கேரளம் புதிய அணை கட்ட முடிவு செய்ததுதான். அதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரைத் தனக்குத் திருப்பிக்கொண்டு, தனக்குத் தேவையான மின்சாரம் தயாரித்துக் கொள்ளலாம் என்பதே கேரளத்தின் திட்டம்.

கேரளப் பத்திரிகைகள் முதலில் அணையின் பலம் குறைந்து நீர் கசிகிறது எனப் புரளியைக் கிளப்பிவிட்டன. வல்லுநர் குழு அங்கு சென்று பார்வையிட்டு நீர்க் கசிவு இல்லை என்று கண்டறிந்து உறுதி அளித்தது. ஒரு பொய்யான சி.டி.யை உருவாக்கி அணைக்கு ஆபத்து என்று புழக்கத்தில் விட்டது கேரளத் தரப்பு.

தொடர்ந்து 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளம் நொண்டி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. தண்ணீரைக் கடலுக்கு அனுப்பினாலும் அனுப்புவோமே தவிர, தமிழகத்துக்குத் தரமாட்டேன் என்ற கேரளத்தின் பிடிவாதப் போக்குத் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் வெளிமாநிலங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றாலும் சட்டமன்றத்தின் அனுமதி வேண்டும் என்று விநோதமாக, இந்தியாவில் எங்கும் இல்லாத சட்டமே கொண்டு வரப்பட்டுள்ளது.

கர்னல் பென்னி குவிக் தன்னுடைய சொத்துகளை எல்லாம் விற்று மதுரை, ராமநாதபுரம் மாவட்ட பாடுபடும் விவசாயிகள் நன்மை கருதி முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியபோது ""இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதைத் தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை'' என்று குறிப்பிட்டார்.

கேரளத்தின் நடவடிக்கையால் பென்னி குவிக்கின் ஆசைக்கும், அவரின் இந்த உயிரோட்டமான மணிவாசகங்களுக்கும் இன்று அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.

தேசிய ஒருமைப்பாடு, ஒன்றுபட்ட இந்தியா என்பதற்கெல்லாம் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற வேதனை ஏற்படுகிறது. கேரளம் முல்லைப் பெரியாறு மட்டுமல்லாமல் கன்னியாகுமரியில் நெய்யாறு, நெல்லையில் அடவிநயினார் திட்டம், கோவை அருகே பாண்டியாறு புன்னம்புழா, ஆழியாறு பரம்பிக்குளம் என முக்கிய நதிப் பிரச்னைகளில் எல்லாம் கேரளம் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கிறது.

கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்துவதில்லை. அங்கு அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு.

கேரள மாநிலத்தின் நீர்வளம் தமிழகத்தைவிட அதிகமானதாகும். தமிழ்நாட்டின் நீர்வளம் சுமார் 1,350 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் சுமார் 1,300 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக்கடலில் சேருகிறது. இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப்போல 11 மடங்கு ஆகும்.

கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு சுமார் 850 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்துக்குக் கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

கேரளத்தில் 85 மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் உள்ளன. 1,98,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்நதிகளின் மூலம் செல்கின்றன. 1976-ம் ஆண்டு மத்திய அரசு ஒரு திட்டக் குழுவை அமைத்தது. இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து இந்த நதி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகள் உள்ளன என அக்குழு கூறியது. இதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் செல்கிறது என்று திட்டக் குழுவின் 1978-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த நீர் பயன்படும். இம்மாவட்டங்களில் வறண்ட காலங்களில் அருந்துவதற்குக்கூடக் குடிநீர் இல்லாத அவல நிலை அடிக்கடி ஏற்படுகிறது. கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் நதிகளின் எஞ்சிய நீரை அணைகள் கட்டிச் சுரங்கங்களின் வழியாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் நிச்சயம் வளம் பெறும். இப்பிரச்னையைப் பல ஆண்டுகளாகத் தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

சாலியாறு படுகை, பாம்பாறு, அச்சன்கோவில் ஆறு, பெரியாறு படுகை, கல்லட ஆறு எனப் பல நதிநீர்ப் படுகைகளில் உள்ள நீரைப் பெறத் தமிழகம் முயன்றபோதெல்லாம் கேரளம் தலை சாய்க்கவில்லை. மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்துக்குத் திருப்புவது பற்றி மத்திய அரசு அதன் பின்பு, மத்திய, தமிழக, கேரள அரசுகள் சுமார் 11 முறை இதுபற்றிப் பேசியும் எவ்விதத் தீர்வும் ஏற்படவில்லை. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இப்பிரச்னை பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பேசுவதுகூடத் தவறு என்று கூறுகிறது கேரளம்.

கேரள மக்கள் பலர் தமிழகத்தில் வணிகம் செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அரிசி, சிமெண்ட், மணல், வைக்கோல், மீன், இறைச்சி, காய்கறிகள் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெற்றுக்கொள்ளும் கேரளம் கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் நதிநீர்ப் பிரச்னைகளில் நடந்துகொள்வதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. நதி நீர்ப் பிரச்னைகளில் கேரளத்தின் மூர்க்கத்தனத்தை எதிர்க்கும் வகையில் தமிழர்கள் தெற்கே களியாக்காவிளை, செங்கோட்டை புளியறை, கம்பம், வண்டிப் பெரியார் எல்லைப் பகுதியில், தமிழக பாலக்காடு எல்லையில் ஒன்று திரண்டு அத்தியாவசியப் பொருள்கள் போகாமல் தடுத்தால், கேரளம் அதை எதிர்கொள்ள முடியுமா?

கங்கை நதிநீர்ப் பிரச்னைகளை இந்தியாவும் பங்களாதேஷும் பேசி முடித்துவிட்டது. ஆப்பிரிக்காவில் நைல் நதி சிக்கலையும் நாடுகளுக்கிடையில் பேசித் தீர்க்கப்பட்டது. ஐரோப்பாவில் ருமேனியா, பல்கேரியா, பெல்ஜியம் இடையில் பாயும் நதிகளில் எஞ்சிய நீரைத் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் நதி நீரில் மாநிலங்களுக்கிடையில் எந்தப் பிரச்னைகளும் இல்லை.

இப்படி உலக அளவில் நாடுகளுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் தீர்க்கப்படும்போது தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னைகள் மட்டும் தீர்க்கப்படாமல் தொடர்கின்றனவே, அது ஏன்? தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை நாம் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT