முகப்பு
கட்டுரைகள்

தண்ணீரைக் குறை சொல்லலாமா?

தமிழகம் முழுவதும் தொடர் மழை... சாலையில் ஓடிய தண்ணீரால் போக்குவரத்து பாதிப்பு.. வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் பொதுமக்கள் தவிப்பு... இது போன்ற செய்திகள் கடந்த பல நாள்களாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் அண

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:22 PM
பகிர்:

தமிழகம் முழுவதும் தொடர் மழை... சாலையில் ஓடிய தண்ணீரால் போக்குவரத்து பாதிப்பு.. வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் பொதுமக்கள் தவிப்பு... இது போன்ற செய்திகள் கடந்த பல நாள்களாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் அணிவகுத்து வந்தவண்ணம் இருந்தன.

 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அளவுக்குக் கனமழை பெய்துள்ளது என்றால் இந்த ஆண்டு கிராமப்புறங்களிலுள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பிவிடும். விவசாயம் செழிப்பாக இருக்கும்.

 விவசாயிகள் வாழ்வு மலர வாய்ப்பிருக்கும் என தொலைக்காட்சிப் பெட்டியையே உலகம் என நினைத்து வாழ்ந்து வரும் நகரவாசிகள் ஒவ்வொருவரின் எண்ணமாக இருக்கும். ஆனால், அது உண்மையா என்றால், நிச்சயம் இல்லை என்பதுதான் கிராமப்புற விவசாயிகளின் பதிலாக இருக்கும்.

 வரப்புயர என்ற ஒற்றை வார்த்தையில் உலகை விவரித்தவர் ஒளவையார். வரப்புயர்ந்தால் நீர் உயரும், நீர் உயர்ந்தால் நிலம் உயரும். தொடர்ந்து விவசாயம் உயரும். விவசாயி உயர்வான். அதனால் உலகமே உயரும் என்ற பொருளில் என்றோ பாடிச்சென்ற ஒளவையாரின் வைரவரிகள் என்றுமே பொருந்தும் என்பது நிஜம்.

 அப்படி வரப்புயர வேண்டுமென்றால், குளங்கள் பெருக வேண்டும். குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு வரும் வாய்க்கால்கள் அல்லது கால்வாய்கள் உயர வேண்டும். இதுவெல்லாம் நடந்த பின்னர்தானே வரப்புயருவது குறித்து சிந்திக்க முடியும் என்ற நிலைதான் விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் காணப்படுகிறது.

 அந்த அளவுக்குக் குளங்களுக்கு தண்ணீர் சுமந்து செல்லும் கால்வாய்கள் மோசமான நிலையிலுள்ளன. மலையை மறித்துக் கட்டப்பட்டிருக்கும் அணைகளிலிருந்து தண்ணீரை பல கிலோ மீட்டர் தொலைவுக்குச் சுமந்துசென்று ஒவ்வொரு குளமாக நிரப்ப வேண்டிய முக்கிய பணியைக் கொண்டுள்ள பல கால்வாய்கள் அந்த வேலையை இப்போது செய்ய வேண்டியதே இல்லை.

 இன்னும் சொல்லப்போனால் கால்வாய்கள் தங்கள் கடமையை மறந்து குளத்துக்குத் தண்ணீரைக் கொண்டு செல்லாமல், அவ்வளவு தொலைவு ஏன் தண்ணீரைச் சுமக்க வேண்டும் என்று நினைத்து கால்வாயின் பாதையிலுள்ள ஊருக்குள் தண்ணீரைப் பாய்ச்சியடிக்கின்றன.

 கரை வலுவாக இருந்தால்தானே அவ்வளவு தொலைவு செல்ல வேண்டும். நமது கரைதான் வலுவற்று உள்ளதே என்று நினைத்தோ என்னவோ, ஒவ்வொரு மழைக்காலங்களிலும் கால்வாய்களின் கரைகளும், குளங்களின் கரைகளும் உடைந்து வருவது வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது.

 நதிக்கரைகளின் ஓரங்களில்தான் நாகரிகங்கள் பிறந்ததாகவும்,வளர்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அன்றைய வரலாறு தெரியாதவர்கள்கூட கவலைப்பட வேண்டியதில்லை. இப்போதுகூட கரைகளின் ஓரங்களில்தான் நாகரிகம் பிறக்கிறது. கட்டடங்களாக உயர்கிறது.

 இந்தக் கட்டடங்களின் பெரும்பகுதி கரையை ஆக்கிரமித்தும், சிறு பகுதி சொந்த இடத்திலும் அமையுமாறு பார்த்து பார்த்துக் கட்டுவதுதான், இன்றைய நாகரிக மக்களின் அடிப்படைத் தத்துவமாகவே உள்ளது.

 இப்படி பெரும்பாலான கால்வாய்களின் கரைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் செல்லும் பாதை குறுகலாகிவிட்ட நிலையில் மழைக்காலங்களில், வெள்ள அபாய நேரங்களில் மலைப் பகுதிகளில் பொழியும் மழைநீர் மற்றும் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் எங்கு செல்லும்?

 பஸ் இல்லை என்றால் பைக். அதுவும் இல்லை என்றால் கார். அதுவும் இல்லை என்றால் விமானம் என மனிதனைப்போல் நீர் தனது போக்கை மாற்ற முடியுமா?

 அது தனது வழியில்தான்தானே பயணம் செய்ய முடியும். அதில் குறுக்கீடு ஏற்பட்டால் கிடைத்த வழியைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறத்தானே செய்யும்.

 இப்படி மற்றவர்கள், பயணம் செய்வதற்காக வாங்கிப்போட்ட இடத்தில் நாம் குடியிருந்து கொண்டு, பாதை சரியில்லை. பயணம் சரியில்லை என்று கூறுவதைப்போல, வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிட்டது என்று நாம் செய்த தவறுக்குத் தண்ணீரைக் குறைசொல்லி கூச்சலிடுவதால் என்ன பயன்?

 இப்படி குளக்கரையோரங்களிலும், கால்வாய்களிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் முறையாகக் குளங்களைச் சென்றடையாமல், சாலைகளில் வீணாக ஓடுவதால் குளங்கள் தண்ணீரற்ற குளங்களாகவே இருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது. குளத்து நீரை நம்பியுள்ள விவசாயமும் பல பகுதிகளில் கேள்விக்குறியாகி வருகிறது.

 எனவே, பெரும்பான்மை விவசாயிகளைக் கொண்டுள்ள நம் நாட்டில் விவசாயம் மேம்பட குளங்கள் மற்றும் கால்வாய்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சண்யமின்றி அகற்ற வேண்டும். அப்படிச் செய்தால் குளங்களும் பெருகும். விவசாயமும் பெருகும். அதைவிட தேவையற்ற கரை உடைப்புகள் நிகழாததுடன், ஊருக்குள்ளும் வெள்ளநீர் புகுந்து சேதம் விளைவிப்பது தடுக்கப்படும். சமூக சிந்தனையாளர்கள் குரல் கொடுப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.