கட்டுரைகள்

புலி வால் பிடித்த நாயர்

உச்ச நீதிமன்றம் 27-2-2006 அன்று அளித்த தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்க கேரள அரசு ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டும். புதுப்பிக்கப்பட்ட அணை வலிமையாகவும், பாதுகாப்பாகவும்

பழ. நெடுமாறன்

உச்ச நீதிமன்றம் 27-2-2006 அன்று அளித்த தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்க கேரள அரசு ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட அணை வலிமையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால் புதிய அணை கட்டும் எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

மத்திய நீர்வள ஆணையம் 1980-ம் ஆண்டில் பரிந்துரைத்தபடியும் 2006-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படியும் அணையை வலுப்படுத்தும் வேலையில் எஞ்சியுள்ள பேபி அணையை வலுப்படுத்தும் பணியை செய்யவிடாமல் கேரள அரசு 31 ஆண்டு காலமாக தடுத்து வருகிறது. எனவே, அணையை வலிமைப்படுத்தும் பணிகளுக்கும் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கும் இடையூறு எதுவும் செய்யாமல் இருப்பதுடன் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு அறிவுரை கூற வேண்டும். பெரியாறு அணை நீரைத் தேக்குவதற்காக தமிழகத்துக்குக் குத்தகையாக வழங்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றுமாறு கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்ட இடம், அத்துடன் இணைந்துள்ள கட்டுமானங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பொருட்டில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட அமைக்கப்பட்ட நிபுணர் குழு பற்றிய அறிவிப்பு ஆணையைத் திரும்பப்பெற வேண்டும்.

மேலே கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய மனு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா அளித்து வற்புறுத்தியுள்ளார்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கைகளாகும். இதற்காகத்தான் தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கம்பம் பள்ளத்தாக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அணையைப் பாதுகாக்கச் சென்று தினமும் போராடி வருகிறார்கள்.

பெரியாறு அணைப் பிரச்னைக்காக ஒருவர் உயிர்த் தியாகம் செய்தும் மற்றுமிருவர் தீக்குளித்து உயிர் ஊசலாடும் நிலையிலும் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சகல கட்சிகளும் இப்பிரச்னைக்காக தனித்தனியாகவும், கூட்டாகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தமிழகத்திலிருந்து உணவுப் பொருள்கள், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, கோழி, ஆடு, மாடு போன்ற எந்தப் பொருளையும் கேரளத்துக்கு அனுப்ப மறுத்து தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டம் வரலாறு காணாததாகும். தங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. பெரியாறு அணைப் பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டுமானால் இவ்வாறு செய்வதைத் தவிர, வேறு வழியில்லை என்ற உணர்வுடன் அவர்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஆகும். பெரியாறு பாசன நீர் பாயும் ஐந்து மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சகல தரப்பினரும் தாமாக முன்வந்து இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியாறு அணைப் பிரச்னை தீரும்வரை கேரள மாநிலத்துக்கு எந்தப் பொருளையும் ஏற்றிச் செல்ல மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் அறிவித்து அதைச் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக வணிகர்கள் கடையடைப்பு நடத்தி தங்கள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வெளிவரவுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக அமைந்துவிடுமோ என்ற அச்சம் கேரளத்துக்கு இருக்கிறது. எனவே, அண்மைக்காலமாக நிலநடுக்க அபாயப் புகாரை முன்வைத்து கேரளம் பொய்ப்பிரசாரம் செய்கிறது. கேரள முதலமைச்சரும், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் மத்திய அரசில் உள்ள முக்கிய கேரள அதிகாரிகளும் இணைந்து பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்து புதிய ஆய்வுக் குழு ஒன்றை நியமிக்கச் செய்திருக்கிறார்கள். பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்களை வகுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் தனியான ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணையத்துக்கு தலைவராக பிரதமர்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரள அரசின் சூழ்ச்சிக்கு பிரதமர் இணங்கியிருக்கிறார் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு அணை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. தனது அறிக்கையை பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த நிலைமையில் அணையின் வலிமையைப் பரிசோதிக்க மற்றொரு குழுவை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்தக் குழு அமைக்கப்பட்ட முறை ஆழமான ஐயங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்னால் கேரள அரசின் சார்பில் ரூர்க்கி ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த பேராசிரியர் டி.கே. பால் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பெரியாறு அணையைப் பரிசோதித்துவிட்டு அணை பலவீனமாக இருக்கிறது என்ற ஓர் அறிக்கையை கொடுத்தது. ஆனால், இந்த அறிக்கையையும் அணைப் பிரச்னை தொடர்பான வழக்கில் ஒரு சாட்சியாக டி.கே. பாலையும் சேர்க்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த ஒருவரை பிரதமர் ஆய்வுக் குழுவில் நியமித்திருப்பது நேர்மையற்ற செயலாகும்.

புதிய அணையை கட்டுவது குறித்து ஆய்வு செய்வதற்கான எந்த கோரிக்கையும் கேரள அரசு இதுவரை அனுப்பவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் கூறியிருக்கிறார். ஆனால், மத்திய அரசின் அனுமதியைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை முடித்து அணை கட்டுவதற்கான கருத்துருவைத் தயாரித்து உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவிடம் கேரள அரசு அளித்தது எப்படி? மத்திய அரசின் அனுமதி பெறாமல் இவ்வாறு நடக்க கேரள அரசு துணிந்ததற்குப் பின்னணி என்ன?

இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பான வகையிலும் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு ஆகியவற்றின் ஆணைகளைப் புறக்கணித்தும் கேரளம் தொடர்ந்து செயல்படுகிறது. இதற்கு மேலாக தமிழ்நாட்டையும் இந்திய அரசையும் ஏமாற்றுவதற்காக பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற நாடகத்தை நடத்துகிறது. கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் தலைமையில் அனைத்துக் கட்சிக்குழு ஒன்று பிரதமரை நேரில் சந்தித்து இரு மாநில முதல்வர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று பிரதமரும் தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.

15-12-11 அன்று உச்ச நீதிமன்றத்தில் இரு மாநில முதல்வர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கும்படி கேரளம் முறையீடு செய்தது. ஆனால், அதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையைத் தீர்க்கத் தயார் என கூறும் உம்மன் சாண்டி புதிய அணையைக் கட்டவேண்டும் என்ற முடிவை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் நிபந்தனை விதிக்கிறார். புதிய அணை கட்டப்பட்டாலும் தண்ணீர் கிடைக்கும் அளவைப் பொறுத்துதான் தமிழகத்துக்குத் தரப்படும் என்றும் கூறுகிறார். புதிய அணையைக் கட்டும்போது முல்லைப் பெரியாறு அணையை எவ்வாறு, எந்தெந்த நிலைகளில் உடைப்பது என்பது குறித்தும் உடைக்கப்படும் அணையின் பகுதிகளைப் புதிய அணையின் கட்டுமானத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் கேரள அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் பேசுகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடந்த 15 ஆண்டுகாலத்துக்கு மேலாக கேரளம் மதிக்காதது போலவே, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவினரின் ஆய்வையும் கேரள அதிகாரிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இவர்கள் கூறியபடி அந்தக் குழுவினர் செயல்பட மறுத்ததுதான் இதற்குக் காரணமாகும்.

இடுக்கி அணை நிரம்பினால் கேரளம் 2,391 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அம்மாநிலத்தில் மொத்த மின்உற்பத்தியில் இது 20 விழுக்காடு ஆகும். இப்போதுள்ள நிலைமையில் பெரியாறு அணையில் உள்ள நீரை முழுமையாக இடுக்கிக்குக் கொண்டுபோனால்தான் இவர்களின் இந்த நோக்கம் நிறைவேறும். எனவேதான் புதிய அணை கட்டுவது என்ற பெயரில் பெரியாறு அணையை இடிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

கேரளம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் உள்ள அகில இந்திய கட்சிகள் எதிர்எதிர் நிலை எடுத்துள்ளன. இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகள் வாய்மூடி மௌனம் சாதிக்கின்றன. இரு மாநிலத் தலைமைகளையும் அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காணவோ அல்லது தவறு செய்யும் மாநிலத் தலைமையைக் கண்டிக்கவோ அகில இந்தியத் தலைமைகள் முன்வரவில்லை.

உண்மையைச் சொல்லப்போனால் தேசியத் தலைமைகள் இப்பிரச்னையில் செயலற்றுவிட்டன. இதன் விளைவாக, தேசிய ஒருமைப்பாடு செயல் இழக்கும். உடலின் ஒருபகுதி செயல் இழக்கும்போது மெல்லமெல்ல உடல் முழுவதும் அது பரவும். இந்த அபாயம் நாட்டைச் சூழ்ந்து வருகிறது.

தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக கேரள அரசியல்வாதிகள் பொய்க்கூக்குரல் எழுப்பி தங்கள் மாநில மக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறப்படும்வரை காத்திராமல், புதிய அணை என கேரள அரசியல்வாதிகள் குதிக்கிறார்கள். கேரள உயர் நீதிமன்றத்தில் அம் மாநில அட்வகேட் ஜெனரல் அணை வலிமையாக இருப்பதாகவும் அணை உடைந்தாலும் அந்தத் தண்ணீர் கீழே உள்ள இடுக்கி மற்றும் இரு அணைகளில் தேக்கப்படும். ஆகவே, மக்களுக்கு அபாயம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கிற துணிவு கேரள அரசுக்கு இல்லை. அவ்வாறு எடுத்தால் உச்ச நீதிமன்றம் தலையிடும் என்ற அச்சம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அங்குள்ள தங்களது வழக்கைத் திரும்பப் பெறும் துணிவு கேரள அரசியல்வாதிகளுக்கு உண்டா?

கொதித்துப் போராடும் தமிழக மக்களின் உணர்ச்சி விரைவில் வடிந்துவிடும் என கேரள அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். தமிழகக் கட்சிகள் ஒருபோதும் ஒன்றுபட்டுப் போராடப்போவதில்லை என மத்திய அரசு நினைக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியாக நமது உரிமைகளை நிலைநிறுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவை முதல்வர் ஜெயலலிதா நாடிப்பெற வேண்டும். கட்சிகளும் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இது ஒரு கட்சிப் பிரச்னை அல்ல. 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதை மனதில்கொண்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் போன்றவற்றை கேரளத்துக்கு அனுப்பாமல் தாங்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் சகித்துக்கொண்டு உறுதியாகப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம் ஒன்றுதான் கேரள அரசியல்வாதிகளைச் சிந்திக்க வைக்கும். எனவே, விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். நமது விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை அந்தந்தப் பகுதிகளில் அரசே கொள்முதல் செய்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் விவசாயிகளின் நஷ்டம் தவிர்க்கப்படும். பொருளாதாரத் தடைப் போராட்டமும் வெற்றிபெறும்.

கேரள மக்கள் பயன்படுத்தும் மாட்டிறைச்சியில் 90 சதவிகிதம் தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் அடிமாடுகளின் மூலம் கிடைக்கிறது. எனவே, தமிழக அரசே மாட்டிறைச்சியைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை பல பகுதிகளில் அமைத்து விவசாயிகளின் அடிமாடுகளை விலைக்குப் பெற்று, உற்பத்தியாகும் மாட்டிறைச்சியை அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அரசுக்கும் விவசாயிகளுக்கும் அதிக வருமானம் கிடைக்கும். கேரள அரசியல்வாதிகளையும் பணியவைக்க முடியும்.

பெரியாறு அணை குறித்து பொய்யான கூக்குரலை எழுப்பி கேரள மக்களை வீண் அச்சத்துக்கு உள்ளாக்கிய கேரள அரசியல்வாதிகள், தண்ணீர் கிடைக்காத தமிழக மக்கள் கொதித்தெழுந்து பொருளாதாரத் தடைப் போராட்டம் நடத்தும் அளவுக்குச் சென்றதை சற்றும் எதிர்பாராத நிலையில், இப்போது என்ன செய்வது என்பது புரியாமல் திணறுகிறார்கள். புலிவால் பிடித்த நாயரின் நிலையாக கேரள அரசியல்வாதிகளின் நிலை ஆகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT