கட்டுரைகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...!

யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல  தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு முன்னரே தேர்தல் பணிகளை விறுவிறுப்பாகத்  தொடங்கிவிட்டன அரசியல் கட்சிகள். இந்தத் தேர்தலில் அசத்தப்போவது யாரு?  க

எஸ். ராஜாராம்

யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல  தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு முன்னரே தேர்தல் பணிகளை விறுவிறுப்பாகத்  தொடங்கிவிட்டன அரசியல் கட்சிகள். இந்தத் தேர்தலில் அசத்தப்போவது யாரு?  கலக்கப்போவது யாரு என்று வாக்காளப் பெருமக்களும் வீடுகளில், அலுவலகங்களில், சாலையோர தேநீர் கடைகளில் நின்று வழக்காடு மன்றம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

 கூட்டணியில் இடியாப்ப சிக்கல், இட்லி சிக்கல், உப்புமா சிக்கல் பற்றி எல்லாம்  கவலையே படவேண்டாம்.

 இன்னும் சில நாள்களில் அத்தனை சிக்கல்களும் தீர்ந்து, அடுத்த முதல்வர் நாற்காலி ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என தெரிந்துவிடும் என  நம்பலாம்.

 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீடுதேடி ரேஷன் பொருள் வரும், வீட்டுக்கு ஒரு  "பசுமாடு' (அத்தனை பசுக்களா தமிழ்நாட்டில் இருக்கின்றன?) என கடந்த  சட்டப்பேரவை தேர்தலில் சில கட்சிகள் "புல்லரிக்கும்' வாக்குறுதிகளைத் தந்தன. வாக்காளர்களின் துரதிர்ஷ்டம் இந்த வாக்குறுதிகளை அளித்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

 இந்த முறை இதுபோல மெய்சிலிர்க்கும் வாக்குறுதிகள் எத்தனை வரப்போகின்றனவோ? அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் பயன்படட்டுமே என்ற பொதுநல  நோக்கத்தில் சில வாக்குறுதி யோசனைகள்...

 வீட்டுக்கு ஒரு செல்போன் என்ற திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே சோதனை  முறையில் அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஆதலால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மாதத்துக்கு 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வோம் (முழு டாக்டைம் வசதியுடன்) என்று அறிவிக்கலாம்.

இலவசத்தால் தமிழர்களை எளிதில் வசப்படுத்தலாம் என்பதால், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச டி.வி.போல இலவச கணினி வழங்கப்படும் என தன்னம்பிக்கையுடன் உறுதி அளிக்கலாம்.

 தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக மக்கள் பெரும் அதிருப்தியில்  இருக்கின்றனர். இந்த அதிருப்தியைப் போக்கும் வகையில், அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசே கையகப்படுத்தும் என அதிரடியாக அறிவிக்கலாம். (மதுக்கடைகளையே கையகப்படுத்தி அரசு நடத்தும்போது, பள்ளிகளை கையகப்படுத்துவதா பெரிய விஷயம்?)

 கட்டடப் பணிகளுக்குப் பயன்படுத்த ஆற்றுமணல் கிடைப்பது சிக்கலாக இருப்பதால், இனி ரேஷனிலேயே ஆற்றுமணலும் (எடை குறையாமல்) வழங்கப்படும்  என அறிவிக்கலாம்.

இதனால் மணல்கொள்ளைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.  (ரேஷன் அரிசி போல ரேஷன் மணல் கடத்தப்பட்டால் பரவாயில்லை, தனிப்படை, பறக்கும் படைகள் அமைத்து அதைச் சமாளித்துவிடலாம்.)

 அரசுத் துறைகளில் கொஞ்சி விளையாடும் லஞ்சத்தை அடியோடு ஒழிப்போம் என  சபதம் ஏற்கலாம். லஞ்சம் வாங்கிப் பிடிபடும் அரசு ஊழியர்களை விசாரணையே இன்றி டிஸ்மிஸ் செய்ய சட்டம் கொண்டுவருவோம் (அட, காசா பணமா, சொல்லிவைத்தால்  இருக்கிறது) என சூளுரைக்கலாம்.

 நகரெங்கும் அரசியல் கட்சிகள் தங்கள் "தானைத் தலைவரை' வரவேற்று வைக்கும்  டிஜிட்டல், பிளக்ஸ் போர்டுகளை நிரந்தரமாக அகற்றுவது என்பது இயலாத செயல்  என்பதால், அதற்கு ஈடாக, பொதுமக்களின் வீட்டு விசேஷங்களுக்கு அரசு செலவில் பிளக்ஸ் போர்டுகள் அமைத்துத் தரப்படும் எனக் கூறி (விசேஷத்துக்கு ஒரு மாதத்துக்கு  முன்னரே முன்பதிவு செய்வது கட்டாயம்) சமாளிக்கலாம்.

 இப்போது விலைவாசி ஒரு முக்கிய பிரச்னையாக இருப்பதால், அரிசி, பருப்பு,  காய்கனிகளை குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்து, வியாபாரிகளுக்கு அரசு  மானியம் வழங்குவோம் என (என்னதான் தேர்தல் வாக்குறுதி என்றாலும் ஒரு லாஜிக்  வேண்டும் அல்லவா?) அறிவிக்கலாம்.

 இப்போது அரசின் இலவச டி.வி.யை வைத்திருப்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகளாவது அதைப் (வந்தவிலைக்குத் தள்ளிவிட்டுவிடாமல்) பயன்படுத்தினால், அதன்பிறகு அவர்களுக்கு எல்.இ.டி. டி.வி. வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கலாம் (இதாங்க தொலைநோக்குத் திட்டம்).

 நிறைய விஷயங்களில் பிற மாநிலங்களுக்குத் தமிழகம்தான் முன்மாதிரி (?). அதன்  அடிப்படையில், அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு, சுழற்சி முறையில்  முதல்வர் பதவி என (ஒரு பின்மாதிரியாகவாவது இருக்கட்டுமே) போட்டுத் தாக்கலாம்.

 தேர்தல் அறிக்கையிலேயே ஹைலைட் விஷயமாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை  நிச்சயம் என்பதைச் சேர்க்கலாம். இதன்மூலம் இனி வரும் தேர்தல்களில் வீட்டுக்கு வீடு  அரசு ஊழியர்களின் ஓட்டுகளை அள்ளுவது சுலபம்.

 இத்தனை வாக்குறுதிகளுடன் இடையிடையே, கச்சத்தீவு ஒப்பந்தம், இலங்கைத்  தமிழர் பிரச்னை, சட்டம்-ஒழுங்கு முதலிய சீரியஸôன அம்சங்களையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகென்ன... இங்கே கொஞ்சம் பாரு, எங்களை ஜெயிக்க யாரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT