சமச்சீர் கல்வி, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளை என கல்வி சம்பந்தப்பட்ட பல பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் நிலையில், ஆசிரியர் சரியாகப் பாடம் கற்றுத்தராத காரணத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2
மாணவர் சீனிவாசனின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆசிரியர்களின் நடவடிக்கை இருந்திருக்குமா? என்ற சந்தேகம் நமக்குள் ஏற்பட்டாலும், உயிரிழந்த மாணவரின் 7 பக்கக் கடிதங்கள் பல உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவது வருத்தம் தரும் செய்தியாகும்.
மாணவர் சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில், "பனைமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள்தான் மரணத்துக்குக் காரணம்' என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
கணிதப் பாட ஆசிரியர் பாடம் நடத்தும் முறை புரியவில்லை என்பதும், மாணவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்த வேண்டும் என்பதும்தான் உயிரிழந்த மாணவர் சீனிவாசனின் கோரிக்கை. இதில் தவறுகாண முடியாது.
மாணவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்துவதற்காகத்தானே ஆசிரியர்கள். இல்லையென்றால், பாடப் புத்தகத்தையும், குறிப்பிட்ட சில "வழிகாட்டி' நூல்களையும் படித்து அவர்கள் தேர்வு எழுதிக் கொள்வார்களே? இதற்கு எதற்குப் பள்ளி? பின்னர் எதற்கு ஆசிரியர்கள் என்ற போர்வையில் சில சுயநலவாதிகள்?
பொதுவாகவே, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள், அரசின் மாதச் சம்பளத்தைவிட அதிகம் நம்பியிருப்பது "டியூஷன்' மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயைத்தான்.
வகுப்பறையில் சரியான முறையில் பாடம் நடத்தினால் நம்மிடம் "டியூஷன்' படிக்க யார் வருவார்கள் என்ற எண்ணம் சில ஆசிரியர்கள் மத்தியில் இன்னும் உள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் "டியூஷன்' எடுக்கத் தடைவிதிப்பதே சிறந்தது.
"டியூஷன்' எடுக்காமல் என்னால் இருக்க முடியாது என எந்த ஆசிரியராவது கூறினால், அவரை அழைத்து, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் குறைவான மதிப்பெண் பெறுவோரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்துங்கள் (கட்டணம் வசூலிக்காமல்) என அறிவுரை கூறலாமே!.
மாணவர் சீனிவாசன் இன்று நம்மோடு இல்லை. ஆனால், அவர் எடுத்துக்கூறிய உண்மைகள் கவனிக்கப்பட வேண்டியவை. அலட்சியம் செய்யாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தக்க விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதுதான், இன்னொரு மாணவரின் உயிரைக் காக்க உதவும் செயலாகும்.
பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்துக்கும், பிளஸ் 2 கணக்குப் பாடத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்பது கணிதப்பாடத்தைப் பயின்ற அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, புரிந்து படிக்க வேண்டியதை எப்படி மனப்பாடம் செய்ய முடியும் என்ற மாணவர் சீனிவாசனின் கேள்வி நியாயமானதுதானே?
கரும்பலகை முழுவதும் கணக்கை எழுதிப்போட்டுவிட்டு, பார்த்து எழுதிக் கொள்ளுங்கள் என்பதற்காகவா மாதம் பல ஆயிரங்களைச் சம்பளம் என்ற பெயரில் வாங்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்றிருந்தால் இவர்கள் ஏன் ஆசிரியர் பணிக்கு வர வேண்டும்?
இப்படிக் கரும்பலகையை மட்டும் நம்பி தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கத் தயாராக இருப்பார்களா இந்த அறிவு ஜீவிகள்? தான் அதிக சம்பளம் வாங்கி நன்றாக இருக்க வேண்டும், தனது குழந்தை ஏதாவது ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயில வேண்டும் என்ற நினைப்பு மனதில் இருந்தால் எங்கிருந்து பாடம் நடத்த வரும்.
அரசுப் பள்ளிதானே, தேர்ச்சி விகிதம் எப்படி இருந்தால் நமக்கென்ன? நம்மை யார் கேள்வி கேட்க முடியும் என்ற எண்ணம்தான் இதுபோன்ற செயல்களில் ஆசிரியர்களை ஈடுபடச் செய்கிறது. அந்த அளவுக்கு அரசுப் பள்ளிகள் மீது நமது "அதிகாரி'களின் பார்வை உள்ளது.
"எனது மரணத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் சிறு மாற்றமாவது நிகழ வேண்டும். திறமையான ஆசிரியர்கள் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதல்வர் இதற்கு விரைவில் நிரந்தரத் தீர்வை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லும்படி உயிரிழந்த மாணவர் சீனிவாசன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சரி! இத்தனை குறைகளைத் தெரிவிக்கும் மாணவர் சீனிவாசன் சரியாகப் படிக்காத மாணவராக இருந்தால் பரவாயில்லை. அவர், அரசுப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்புத் தேர்வில் 409 மதிப்பெண் பெற்றுள்ளார். இதைவிட சிறந்த உதாரணம் தேவைதானா?
ஆசிரியர்களைக் கைது செய்வதாலோ, வழக்குப் பதிவு செய்வதாலோ இந்தச் சம்பவம் முடிவுக்கு வந்துவிடாது. இன்னொரு மாணவரின் உயிர் பறிபோகாமல் இருக்க, மாணவர் சீனிவாசன் எழுதிவைத்துள்ள கடிதத்தின் கடைசிவரிகளைப் படித்தாலே போதும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.