முகப்பு
கட்டுரைகள்

வளம் இழந்த வனப்பரப்புகள்

வளர்ச்சி என்ற பெயரில் அடர்ந்த வனங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வேளையில், அண்மையில் வெளிவந்த "ஃபாரஸ்ட் சர்வே' அறிக்கை இந்தியாவில் பசுமைப்போர்வை உயர்ந்து வருவதாகக் கூறுவது மிகவும் வேதனையான நகைச்சுவை

கட்டுரைகள்

வளம் இழந்த வனப்பரப்புகள்

வளர்ச்சி என்ற பெயரில் அடர்ந்த வனங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வேளையில், அண்மையில் வெளிவந்த "ஃபாரஸ்ட் சர்வே' அறிக்கை இந்தியாவில் பசுமைப்போர்வை உயர்ந்து வருவதாகக் கூறுவது மிகவும் வேதனையான நகைச்சுவை

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:59 PM
பகிர்:

வளர்ச்சி என்ற பெயரில் அடர்ந்த வனங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வேளையில், அண்மையில் வெளிவந்த "ஃபாரஸ்ட் சர்வே' அறிக்கை இந்தியாவில் பசுமைப்போர்வை உயர்ந்து வருவதாகக் கூறுவது மிகவும் வேதனையான நகைச்சுவை.

இந்தியாவிலும் சரி, உலகில் எந்த நாடாக இருந்தாலும் சரி, பூமியின் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 22 சதவீதமாவது அடர்ந்து படர்ந்து மரங்களுடன் பல்லுயிர்ப் பெருக்கங்கள் மிகுந்த வனங்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆகவே, வளர்ச்சி என்ற போர்வையில் சுரங்கம், அணைக்கட்டு என்று வனங்களை இனி தாரைவார்க்க அனுமதிக்கவே முடியாது என்ற தர்மத்தை மறந்து, ஒரிசாவில் போஸ்கோ என்ற மாபெரும் தென்கொரிய நிறுவனத்துக்கு சுமார் 40,000 ஏக்கர் வனப்பகுதி வழங்கப்பட்டுள்ளதில் தனியார் நிலங்களும் அடங்கும்.

ஓரளவு வனப்பகுதியில் பழங்குடி விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்கின்றனர். போஸ்கோ ஸ்டீல் ப்ராஜக்ட் 12 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு கொண்டது. இந்த ஆண்டு மே மாதம் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வனப்பகுதியை மேற்படி ஸ்டீல் சுரங்கத் தொழிலுக்குத் தாரை வார்க்க அனுமதித்துவிட்டது.

தனியார் நிலத்தை வாங்கப் பணத்துடனும், காவல்துறை உதவியுடனும் நிறுவன அலுவலர்கள் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் பலிதுத்தம் கிராமத்துக்கு வந்தபோது, சுமார் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி நிலம் வழங்க மறுத்துள்ளனர்.

சுமார் 600 காவலர்கள் துப்பாக்கியுடன் விவசாயிகளை வேட்டையாடத் தயாராயிருந்தபோது, முதலமைச்சர் நவீன்பட் நாயக், ""விவசாயிகள் சம்மதமில்லாமல் நிலத்தை வழங்க முடியாது'' என்று கூறினார். அப்படியும் நுவாகான் கிராமத்தில் வெற்றிலை பயிரிட்டவனுக்கு இழப்புத்தொகை வழங்காமல் யாருக்கோ பல லட்சம் பணம் கொடுத்துக் கொடிக்காலைத் துவம்சம் செய்ததால், விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர்.

இவைதவிர, சுந்தர்கார் மாவட்டத்தில் கந்தாதார் மலைப்பகுதிகளில் சுமார் 6,000 ஹெக்டேர் வனம் தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து வனங்களில் மக்கள் உரிமைச்சட்டம் 2006-ஐ பயன்படுத்தி, போஸ்கோவின் சுரங்கச் சுரண்டலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், பழங்குடி மக்கள் புரோகிதர் ரேணு சௌத்ரி, ""இங்குள்ள பழங்குடி மக்களின் போராட்டம் வலுப்பட்டுள்ள நிலையில் இப்பகுதி வனம் போஸ்கோவிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிடும்...'' என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஒரிசாவில் நிறைய உண்டு.

மத்தியப் பிரதேசத்தில் கத்திவாடா வனம் பழங்குடி மக்களின் அனுபவத்தில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க பீலர், பாரியர், கோலியர் வசிக்கும் இடங்களை அப்புறப்படுத்தி அதை மனித நுழைவுக்கு அனுமதியில்லாத சரணாலயமாக்கும் திட்டத்தை எதிர்த்து மேற்படி பழங்குடி மக்கள் தங்கள் வசிப்பிடத்தைக் காலிசெய்ய மறுத்துவிட்டனர்.

இம்மக்கள் இந்த வனங்களில் உள்ள இலுப்பைப் பூ, பீடி இலை, அரக்கு, கோந்து, தேன் ஆகியவற்றைச் சேகரம் செய்து பிழைப்பு நடத்துகின்றனர். சால்விதை, இலுப்பை விதைகளும் தாவர எண்ணெய் உற்பத்திக்கு உதவும். அவையும் சேகரிக்கப்படுகின்றன.

மேதா பட்கர் போராடிக் கொண்டிருக்கும் நர்மதை மீது கட்டப்படவுள்ள சர்தார் சரோவர் அணைத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மூன்று மாநிலங்களில் பிரச்னையாகிவிட்டது. இதனால் குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் சார்ந்த 1,10,000 ஹெக்டேர் வனம் இழக்கப்படுகிறது.

வன ஆக்கிரமிப்பு - வன அழிவுக்குரிய உதாரணங்கள் ஒரு சில மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. வனம் மற்றும் சூழலியல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் காத்துக்கிடக்கும் காகிதத் திட்டங்களுக்கெல்லாம் அனுமதி வழங்கப்படுமானால், இந்தியாவில் சொல்லிக்கொள்வதற்கு வனம் என்று எதுவுமே எஞ்சாது. நாமெல்லாம் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்துச் சாவதைத்தவிர, வேறு வழியில்லை!

வனம் என்றால் வருமானம் இல்லாத ஒரு பொருள் என்பதாகவும், வனம் உள்ள இடத்தில் தொழிற்சாலையோ, அணையோ கட்டினால்தான் வருமானம், வேலைவாய்ப்பு எல்லாம் ஏற்படும் என்பதாகவும் ஒரு தப்பான எண்ணம் மனிதனின் சுயநலத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஒரு வனம் வனமாகவே நீட்டிக்கப்பட்டு வனமே வருமானத்தை உயர்த்தாது என்ற சிந்தனை வளர்ச்சிப் பொருளாதாரத்தை நேசிக்கும் வறட்டுப் பொருளியல் நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஒவ்வொரு நாளும் இந்திய வனம் ஒவ்வொரு ஓரமாக அழிக்கப்படுகிறதே தவிர, ஆக்கப்படுவதாகத் தோன்றவில்லை. வனங்களின் வளத்தைப் பெருக்கி மக்களுக்கு வாழ்வு தரும் மரங்களை நட வேண்டும் என்று பலரும் பேசுவதுண்டு. பேசியதைப்போல் வனங்களில் வெட்டப்பட்ட மரங்களை மீண்டும் நடும் திட்டம் அரிதாகவே செயல்படுகிறது.

வனத்தில் மரங்களை அழிப்பவர்கள் வனங்களில் வாழும் பழங்குடிகள் அல்லர். மரம் வெட்டும் ஒப்பந்தக்காரர்கள் தடுக்கப்பட்டாலும் ஊழலில் திளைக்கும் வளர்ச்சிப் பேயர்களான போஸ்கோவும் கோஸ்கோவும் அழிக்கின்றனர். இவர்கள் வழங்கும் எஃகு யாருக்குத் தேவை?

உத்தரகண்ட் மாநிலத்தில் புனித கங்கையை மாசுபடுத்தும் நீர்மின்சாரத் திட்டங்களின் சட்டவிரோத கல்குவாரிகளை அப்புறப்படுத்தி, 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த நிகமானந்தா சுவாமிகள் கங்கையைக் காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்தும் பயன் உண்டா?

கழுகுகள் வட்டமிடும் வானத்தில் ஓர் அன்னப்பட்சியாக வாழ்ந்த நிகமானந்தா இறந்துவிட்டார். நிகமானந்தா மறைந்த பிறகுதான் அப்படியொருவர் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த விவரமே தெரியவந்தது. அண்ணா ஹசாரேவுக்கும், பாபா ராம்தேவுக்கும் வழங்கப்பட்ட விளம்பரம் நிகமானந்தாவுக்குக் கிடைக்கவே இல்லை. நிகமானந்தா மறையும் முன் ஊடகங்கள் அவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

அண்ணா ஹசாரே மற்றொரு அமைதிப்புறா. எனினும், பிணம் தின்னும் கழுகுகளுடன் போராட குறைந்தபட்சம் பாபா ராம்தேவ் போன்ற சண்டைக்கோழிதான் லாயக்கு என்று தோன்றுகிறது. கறுப்புப்பண எதிர்ப்பு அலைகளுக்குத் தயாரான சண்டைக்கோழிகள் வாழ்வு தரும் மரங்களைக் காப்பாற்றவும் முன்வர வேண்டும். வனவளர்ப்பு என்றால் பசுமைப் போர்வைக்குமேல் வனப்பாதுகாப்பு அலுவலர்கள் வேறு சமூகப் பொருளாதாரம் பற்றி விவாதிக்க முன்வருவதில்லை.

வனச்சுரண்டலுக்கு வழிகொடாமல் வனப்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கூறும் வனஇயல் வல்லுநர்கள், ஆண்டுதோறும் பட்ஜெட் தொடருக்குமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருளாதார அறிக்கையில் (எக்கனாமிக் சர்வே) வனங்களின் மதிப்பீடு, வனங்களின் பொருளியல் முக்கியத்துவம் இடம்பெறுவது இல்லை. இந்தியாவின் தேசக்கணக்கில் வனம் விட்டுப்போனது ஏன்?

பொதுவாக வன விளைபொருள்கள் மூலம் பொருளாதாரம் பலம் பெறுவது பற்றிய மதிப்பீடுகள் உண்டு. அப்படி வருமானத்துக்கு ஆதாரமான வனங்கள் பற்றிய மதிப்பீடுகள் உண்டா? வெட்டப்படும் மரங்கள், மூங்கில் பற்றிய மதிப்பீடுகள் உண்டு. ஏனெனில், காவலர்களுக்கும் வருமானத்தில் பங்கு உள்ளது. ஆனால், ஒரு வனம் வழங்கும் ஆக்சிஜன் மூலம் பெறக்கூடிய கார்பன் கிரெடிட் பற்றிய கணக்கு உண்டா?

ஒரு வனம் வழங்கும் மூலிகை, எண்ணெய் வித்துகள், ஏற்றுமதிக்குரிய மரப்பட்டை, வேர் போன்ற மருத்துவப் பொருள்கள், ஆடு மாடு தீவனம், பசும்புற்கள், களைப்புற்கள், வனம் வழங்கும் தீவனத்தால் பெறும் பால் அளவு, வனங்களால் ஏற்றமாகும் நீர்ப்பிடிப்பு, பாசன நீர், வனம் வழங்கும் மண்வளம், வனம் வழங்கும் ஜீவனோபாயம், அதாவது வனத்தில் விளையும் மலர்கள், விதைகள், மூலிகை போன்ற பொருள்களைச் சேகரித்துப் பிழைப்பை நடத்தும் பழங்குடி மக்களின் வசிப்பிடம், அவர்கள் பெறும் வேலைவாய்ப்பு ஆகியவை மதிப்பிடப்பட்டு தேசியக்கணக்கில் சேர்க்கப்பட்டுப் பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்படுமானால், வனங்களும் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் அம்சம் என்பது புலனாகும்.

யாரோ சில தனிப்பட்ட முதலாளிகளும், நல்ல சம்பளம் பெறக்கூடிய மேல்தட்டு நடுத்தர வர்க்கமும் ஆடம்பரமாக வாழவே வனங்கள் அழிக்கப்பட்டு, தொழிற்சாலைகளும் ஆலைகளும் உருவாக்கப்பட்டு மாசுகள் ஏற்படுகின்றன. ஒரு பசுமாட்டைக் கொல்வது எவ்வளவு பாவமோ அவ்வாறே வனங்களை அழித்து ஆலைகளும் சாலைகளும் ஏற்படுத்துவதும் கொடிய பாவச்செயல்.

வனம் வழங்கும் வளத்தில் அரிய தாவரங்கள், பல்வேறு ஜீவராசிகளின் பல்லுயிர்ப் பெருக்கப் பொருள் மதிப்பீடு அங்கு அந்த வனத்தை அழித்து ஏற்படக்கூடிய தொழில் வருமான மதிப்பீட்டைவிட அதிகம் என்பதால், வனங்களைச் சேதப்படுத்தாமல் தொழிலை வளர்க்கத் திட்டமிட வேண்டும்.

வனங்களில் உள்ள பல மரங்கள் தெய்வீகமானவை. புனிதம் கருதி வெட்டும் மரபு இல்லை. சூழலுக்காக உயிர் துறந்த நிகமானந்தா வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். நிகமானந்தாவைத் தொடர்ந்து ஜீவன்முக்தர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டாம். குறைந்தபட்சம் வனங்கள் தொடர்ந்து அழிக்கப்படாமல் காப்பாற்றவும், போஸ்கோவையும் கோஸ்கோவையும் எதிர்த்து ஏழைகளின் நலவாழ்வுக்காக ஆசிரமவாசிகள் அமைதியாகப் போராடினால் சமூகத்தில் சாமியார்களுக்குள்ள அவப்பெயர்கள் மாறவும் வாய்ப்புண்டு. கறுப்புப் பண எதிர்ப்புப் போராட்டம் தேவைதான் என்றாலும், வனப் பரப்புகளைக் குறையாமல் பார்த்துக் கொண்டு வன வளத்தை மேம்படுத்துவது அதைவிடவும் முக்கியமானது.

முழு கட்டுரையைப் படிக்க →