முறைப்படுத்தப்படுமா பஸ் கட்டணம்?
ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு நகரம் முதல் கிராமம் வரை பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் முக்கிய பிரச்னையாக இருந்தது விலைவாசிதான். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தை ஆட்சி செய்துவந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந
ஆ ட்சி மாற்றம் ஏற்படுவதற்கு நகரம் முதல் கிராமம் வரை பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் முக்கிய பிரச்னையாக இருந்தது விலைவாசிதான். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தை ஆட்சி செய்துவந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவிடாமல் செய்தது முறையற்ற பஸ் கட்டணங்கள்தான்.
கடந்த திமுக ஆட்சிக்கு முந்தைய ஆட்சிகளில் எல்லாம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நிகழ்வுகளாக இருந்துவந்தன. ஆனால், அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ்கள் (திருவள்ளுவர் போக்குவரத்து கழக பஸ்கள்) மற்றும் டவுன் பஸ்கள் தவிர்த்து மற்ற அனைத்து பஸ்களுக்கும் கட்டணம் என்பது பொதுவானதாகவே இருந்துவந்ததும் வழக்கம்தான். சில குறிப்பிட்ட வகை பஸ்கள் கூட, நிறுத்தங்களுக்கு ஏற்ற வகையில் எல்எஸ்எஸ் என பெயரிடப்பட்டிருக்குமே தவிர்த்து கட்டண உயர்வுக்காக எல்எஸ்எஸ் என அன்றைய காலங்களில் பெயரிடப்பட்டிருக்கவில்லை என்பதை அதிமுக, திமுக,காங்கிரஸ் என்று கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் அறிவார்கள்.
ஆனால், கடந்த திமுக ஆட்சியிலோ இந்த மரபுகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு விதவிதமான பஸ்கள் உருவாக்கப்பட்டதுடன், அவைகளின் கட்டணங்களும் யாரும் யூகிக்க முடியாக வகையில் நிர்ணயிக்கப்பட்டன. அப்படி உயர்த்தப்பட்டபொழுதும்கூட அன்றைய அரசு, தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் எப்பொழுதும் உயர்வு செய்யப்படவில்லை என்றே தெரிவித்துவந்தது. இது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்ற கதையாகவும் இருந்தது.
கடந்த திமுக ஆட்சிக்கு முந்தைய ஆட்சிக்காலங்களில், சொந்த ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய ஊருக்கு எவ்வளவு பஸ் கட்டணம் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அந்தப் பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்புவதுதான் வழக்கம். அதுவும் குறிப்பாக , தங்கள் பிள்ளைகளை வெளியூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்களும், பஸ் கட்டணத்துக்கு இவ்வளவு என்றும் இதர செலவுகளுக்கு இவ்வளவு என்றும்தான் பாக்கெட் மணி கொடுப்பது வழக்கம்.
ஆனால், கடந்த ஆட்சியிலோ ஒரு குறிப்பிட்ட ஊரிலிருந்து, குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல இவ்வளவுதான் பஸ் கட்டணம் என்று யாராலும் கூற முடியாது என்பதே உண்மை. தினமும் பஸ்ஸில் பயணம் செய்யும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், பெண்கள், விவசாயிகள், வயதானவர்கள் என யாராக இருந்தாலும், பஸ்ஸில் வெளியூருக்குச் சென்றுவிட்டு மீண்டும் பஸ்ஸில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருவதற்கு இவ்வளவு ஆகும் எனத் துல்லியமாகக் கணக்குப் பார்த்துப் பணத்தை எடுத்துச்செல்வது என்பது நடந்ததே இல்லை என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு ஒவ்வொரு பஸ்ஸிலும் ஒவ்வொருவிதமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. பி.பி., எஸ்.எப்.எஸ்., எல்.எஸ்.எஸ்., தாழ்தள சொகுசுப் பேருந்துகள், ஒன்-டூ-ஒன் பேருந்துகள், டிரிபிள் எஸ், என விதவிதமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பஸ்கள் சாலைதோறும் வலம் வந்தன. இவைகளில் எந்த பஸ்ஸில் எவ்வளவு கட்டணம் என்பது அந்த பஸ்ஸின் நடத்துநரைத் தவிர, மற்றவர்கள் அனைவருக்கும் டிக்கெட் எடுக்கும் பொழுதுதான் தெரியவந்தது.
நேற்று இந்த பஸ்ஸில்தானே ஏறினோம், அப்பொழுது இவ்வளவு கட்டணம்தானே வாங்கினார்கள் என நினைத்து இன்றும் அதே பஸ்ஸில் ஏறியவர்கள் பலர் அடுத்த ஸ்டேஜில் இறக்கிவிடப்பட்டதே அதிகம். அந்த அளவுக்கு நாளொரு கட்டணமும், பொழுதொரு நிக் நேமுமாக (டிஎஸ்ஸ், சிறப்பு பஸ் என) பயணிகளை அவதிப்படுத்தி வந்தது பஸ் கட்டணங்கள்.
இந்த முரண்பட்ட குளறுபடியான பஸ் கட்டணங்கள் காரணமாக, பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டங்கள் ஏராளம். இதுபோன்ற கட்டணங்களுக்கான போராட்டங்கள், சண்டைகள் கடந்த ஆட்சியின் மீது ஆங்காரத்தை ஏற்படுத்தியதையும் யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் தினமும் பயன்படும் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்ட்டது பாமரன் முதல் படித்தவன் வரை என அனைவரையும் பாதித்துள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இவர்களின் மனக்குமுறல் எல்லாம் ஒன்றுசேர்ந்து மௌனமாக ஒரு யுகப்புரட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளன என்றால் அது மிகையில்லை.
இந்த பஸ் கட்டண உயர்வு, இன்னும் சொல்லப்போனால், விதவிதமான முறையற்ற பஸ் கட்டணங்களின் தாக்கத்தால், ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட வாக்காளர்கள் கொடுக்கவில்லை என்பது ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகக்கூட அமைந்திருக்கும்.
கடந்த ஆட்சியில் ஒரு சட்டமன்ற கூட்டத்தொடரில், கேள்வி நேரத்தின்பொழுது கடையநல்லூóர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சா. பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), டீசல் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக ஆட்சியில் 16,000 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 15,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை 16 முறை உயர்த்தப்பட்டபொழுதும், பஸ் கட்டணம் ஒருபோதும் உயரவில்லை எனத் தெரிவித்தார்.
அவருடைய இந்தப் பதில் ஆளும் கட்சிக்கு ஆதரவான பதிலாக இருந்தது என்பது மட்டுமே உண்மை. ஆனால், அந்தப் பதிலில் சிறிதும் உண்மையில்லை என்பதை உணர்ந்த தமிழர்கள், அதை இன்று உணர்த்தியுள்ளனர். அதிமுக மீது நம்பிக்கை வைத்து சாதனை வெற்றியை வழங்கியுள்ளனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வென்றுள்ள இந்த அரசு முதலாவதாக பஸ் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதுதான் வாக்களித்தவர்களின் விருப்பம், நிறைவேற்றப்படுமா?