கட்டுரைகள்

நம்மை மதிக்கத்தக்கவராக மாற்றுவது எப்படி?

நீண்ட நாள்களுக்கு முன் உலக வங்கியின் தலைவராக இருந்த ராபர்ட் மெக்னமாரா தன்னுடைய ஒரு கட்டுரையில் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கப்போவது வளர்ந்துவரும் மக்கள்தொகைதான் என்பதை விளக்கியிருந்தார்.

க. பழனித்துரை

நீண்ட நாள்களுக்கு முன் உலக வங்கியின் தலைவராக இருந்த ராபர்ட் மெக்னமாரா தன்னுடைய ஒரு கட்டுரையில் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கப்போவது வளர்ந்துவரும் மக்கள்தொகைதான் என்பதை விளக்கியிருந்தார். அதுவும், பின்தங்கிய ஏழ்மை நிறைந்த நாடுகளிலும், வளர்கிற நாடுகளிலும் மக்கள்தொகையைக் குறைத்திடவும், நிலைப்படுத்தவும், அங்குள்ள மக்களின் ஆற்றலைப் பெருக்கவும் முனைய வேண்டும்.

மேற்சொன்னவற்றை செய்ய மானுட சமுதாயம் தவறுமேயானால், மானுட வாழ்க்கை பலருக்கு மதிப்பற்றதாகப் போய்விடும், ஏழைகளின் வாழ்வு தாழ்ந்த நிலைக்கும், வசதியுள்ளவர்கள் வாழ்வு எட்ட முடியாத உச்சத்துக்கும் சென்றுவிடும் என்று கூறியிருந்தார் அவர்.

அன்று அவர் சொன்ன கருத்தை எதிர்த்துப் பலர் விவாதம் செய்தபோதும், எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் அவர் இந்தக் கருத்தை கூறினார் என்பதை இன்று சீர்தூக்கிப் பார்க்க முடிகிறது.

இன்று ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஏழ்மையும் இனப்படுகொலைகளும் அதிகரித்து, மக்கள் அந்த நாடுகளில் வாழ இயலாமல், மேலைநாடுகளுக்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம்தான் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இவர்களெல்லாம் தங்கள் நாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள் என்று சொல்ல முடியவில்லை. இவர்களுடைய வாழ்க்கையையும், இவர்களின் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்க்கையில் எவ்வளவு குழப்பமாகவும் நிச்சயமற்ற தன்மையுடையதாகவும் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஒரு காலத்தில் மக்கள்தொகை குறைவாக இருந்த நாடுகளில் குறைந்த கூலியில் உடல் உழைப்புக்கு ஆள் கிடைக்கவில்லை. அதனால், அவை பக்கத்து நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருவோரை வரவேற்றுக் கொண்டன. ஆனால், அதே நாடுகளில் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பல பிரச்னைகள் உருவானபின், குடியேறிகளாக வந்த மக்களை எப்படி விரட்டுவது என்பதுதான், இன்று அந்தந்த நாட்டு குடிமக்களின் குறிக்கோளாக மாறிவிட்டது.

எனவே, புலம்பெயர்ந்த அகதிகள், தாங்கள் குடியேறிய நாடுகளில் ஒரு மதிக்கத்தக்க மானுட வாழ்க்கையை வாழ முடியவில்லை என்பதுதான் நாம் பார்க்கும் யதார்த்தமான உண்மை.

இந்த புலம் பெயர்தலினால் உருவான பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் பல நாடுகள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. அதிகரிக்கும் மக்கள்தொகை என்பது, வறுமையையும், சமூகச் சிக்கலையும் தான் உருவாக்கும். மக்கள்தொகைப் பெருக்கத்திலிருந்து விடுபட்டால்தான், நாட்டில் வசிக்கிற மக்கள் ஒரு தரமான வாழ்க்கையை வாழ முடியும். அது மட்டுமல்ல, பொதுவாக எல்லாத் தரப்பு மக்களும் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்வதற்கு, அரசுகளும் ஆவன செய்ய முடியும்.

அதேநேரத்தில்,. மக்கள்தொகைப் பெருக்கம் என்பது ஒரு நாட்டுக்குப் பாரம் அல்லது பலவீனம் என்பதாக மட்டுமே நாம் பார்க்கக் கூடாது. அதுவே, பெருகும் மக்கள்தொகை, வளமாக மாற்றப்பட்டுவிட்டால் நிச்சயம் அந்த நாட்டுக்கு அது ஒரு வலுதானே தவிர, பாரம் அல்ல. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு நம் கேரள மாநிலம். அங்கு மிகப்பெரிய விவசாயப் பொருளாதாரமோ, தொழில் பொருளாதாரமோ கிடையாது. ஆனால் தரமான, வளமான, ஆற்றல் மிக்க மக்கள் உலகெங்கும் சென்று பொருள் தேடி அந்த மாநிலப் பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கின்றனர்.

சமூகம் பொறுப்புடன் செயல்பட ஆரம்பித்து, அறிவின் அடிப்படையில் வாழ ஆரம்பிக்கும்போது, மக்கள் வளமாக மாறுவார்கள். மக்கள் விழிப்புடன், அறிவு சார்ந்து, அறிவியலை அடிப்படையாகக்கொண்டு வாழத் தொடங்கினாலே, மக்கள் பேறு குறைந்து விடும். குழந்தைகள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டுவிட்டால், மக்கள்பேறு என்பது, அரியதான ஒன்றாக மாறிவிடும். அப்பொழுது, ஒவ்வொரு தம்பதியும் குழந்தை பெறுவதற்கு முன், அதை வளர்க்க வேண்டிய வசதிகள் நம்மிடம் இருக்கிறதா என்பதையெல்லாம் தீர அலசி ஆராய்ந்து, தீர்மானித்துக் குழந்தை பெற்றுக்கொள்வார்கள்.

ஆனால், இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் அறிவுசார்ந்த சமுதாயத்தில்தான் காணமுடியும். உணர்வுகளுக்கு இடம் தந்து, ஆண்டவன் தந்தான், அவன் வளர்ப்பான் என்று யார் மீதாவது தன் செயலுக்கு விளக்கமளித்து செயல்படுவது அல்ல. இந்தச் சமுதாயத்தில் கர்ப்பகால கவனிப்பு, பேறுகால கவனிப்பு, மகப்பேறு, குழந்தை வளர்ப்பு, தாய்சேய் நலம் இவற்றைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.

இவையெல்லாம் விஞ்ஞானிகள் விவாதிக்கும் பொருளாக மட்டுமே கருதி, சாதாரண மக்களிடம் இந்தக் கருத்துகள் வளர்க்கப்படுவது இல்லை. மகப்பேறு என்பது ஆண்டவன் தருவதாக எடுத்துக்கொண்டு, குழந்தைகள் வளர்ப்பும் ஆண்டவன் கையில் என விட்டுவிட்டு குழந்தை பெறுவதுதான் வழக்கம். இவர்களுக்குக் குழந்தைகளின் மதிப்போ, அவர்களை நன்கு பெற்றெடுக்க கருவுற்ற தாய்மார்களின் உடல்நலம் பற்றியோ, எந்தவிதமான அறிவியல் அணுகுமுறையும் கடைப்பிடிக்கப்படாமல் பல்வேறு குறைகளுடன் உள்ள குழந்தைகளாகப் பெற்றெடுக்கின்றனர்.

இந்தக் குழந்தைகள் எப்படி வளர்க்கப்பட வேண்டுமோ அப்படி வளர்க்கப்படுவது இல்லை. இதற்குச் சமுதாயத்தில் எந்த மதிப்பும் இருப்பதில்லை. வசதியானவர்களால் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள்கூட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக வாழ்கின்றன.

அதனால், இக்குழந்தைகள் சமுதாயத்தின் பாரமாகக் கருதப்படுகிறார்களே அன்றி, வளமாக இருப்பதில்லை. இந்த முக்கியத்துவம் அற்ற குழந்தைகள், மற்றவர்கள் காட்டும் இரக்கத்தில்தான் வாழ வேண்டியுள்ளது.

மானுட வாழ்க்கை எப்படி வாழ வேண்டுமோ அப்படி இவர்களால் வாழ முடியவில்லை. எனவே பெரும்பாலான ஏழை மக்கள், மானுட வாழ்க்கைக்குத் தாழ்ந்த நிலையில், மாக்கள் வாழும் சூழலில்தான் வாழ வேண்டி உள்ளது.

மக்கள்தொகையைக் குறைத்துக் கொள்வதுதான் இந்தச் சூழலிலிருந்து மீண்டுவர ஒரே வழி. எந்த முன்னேறிய நாடுகளிலும், துப்புரவு செய்ய, குப்பை அள்ள, ஆடு மாடுகள் மேய்க்க, வீட்டுவேலை செய்ய ஆள்கள் கிடையாது. வீட்டுக்காரர்களே தங்கள் கழிப்பிடத்தை கழுவிக் கொள்ள வேண்டும். குப்பைகளை வகைப்படுத்தி பெட்டிகளில் போட்டு வைத்துவிட வேண்டும். சாக்கடை போக்க, முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொண்டு இயந்திர உதவிகளோடுதான் இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள். அத்துடன் இப்படிப்பட்ட பணிகள் செய்கிறவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் என்பது அதிகம். அவர்கள் மதிக்கத்தக்க வாழ்க்கையை நடத்துகின்றார்கள். ஆனால், இந்த ஆரோக்கியமற்ற பணிகளுக்கெல்லாம் நம் நாட்டில் ஆள்கள் அதிகம் இருக்கிறார்கள். எனவே, இந்த வேலைகளுக்கும் போட்டி இருக்கிறது.

ஒருவேளை நம் நாட்டிலும் ஆள்கள் குறைந்துவிட்டால், இந்த வேலைக்குக் கேட்ட கூலி கிடைக்கும். அடுத்ததாக, இவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். பெரும்பாலான வளர்ந்த நாடுகள் மக்கள்தொகையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறுவது இல்லை. அவர்கள் மட்டும் அல்ல, நம் நாட்டு மேட்டுக்குடி மக்களும் ஏழைகளிடம் குழந்தை பெறுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது கிடையாது.

ஏனென்றால், ஏழைகள் தொடர்ந்து குழந்தைகள் பெற்றால்தான், இவர்கள் வீட்டுக்கு நாய் பிடிக்க, மாடு மேய்க்க, சாணி அள்ள, வீடு கூட்ட, நடவு நட, நாற்று பறிக்க, வயல்களில் உழுதிட, குறைந்த கூலியில் ஆள்கள் கிடைப்பார்கள். குறைந்த கூலி இல்லை என்றால் அவர்களே நாய்பிடிக்க வேண்டியதுதான். அவரவர் காரை அவரவர் ஓட்ட வேண்டியதுதான். அவரவர் வேலையை அவரவர் செய்துகொள்ள வேண்டியதுதான்.

மக்கள்தொகை குறையக் குறைய மக்களின் விலையும் மதிப்பும் உயரும். நமக்கும் நமது குழந்தைகளுக்கும் மரியாதை வேண்டும் என்றால் நல்ல குழந்தைகளைப் பெற வேண்டும். குறைவாகப் பெற வேண்டும். ஆரோக்கியமாகப் பெற வேண்டும். அவர்களை ஆரோக்கியமாகவும் அறிவுடனும் வளர்க்க வேண்டும்.

நல்ல குழந்தைகளை, நல்ல சூழலில்தான் பெற்றெடுக்க முடியும். குழந்தை என்பது ஒரு குடும்பத்துக்குச் செல்வமாக வர, குடும்பச் சூழல், தாயின் உடல் ஆரோக்கியம், தாய்க்குப் பாதுகாப்பு போன்றவைகளும், கண்காணிப்பும் தேவை. இது ஒரு கணவரின் கவனிப்பு அல்லது ஒரு குடும்பத்தின் கவனிப்பு மட்டுமல்ல, ஒரு பொறுப்புமிக்க சமுதாயத்தின் கடமை.

ரத்தசோகையாலும் வறுமையாலும் வாடும் ஓர் இளம் பெண் ஒரு குழந்தை பெற்றெடுத்தால் அது என்னவாக இருக்கும்? அது குறைந்த எடையுடன்தான் பிறக்கும். ஊட்டச்சத்து இன்றிய சூழலில்தான் வளரும். அப்படி வளர்கிற குழந்தை, கை கால்கள், வயிறு என உடல் அமைப்பு இருக்கலாமே தவிர, வலிமையும், அறிவும், ஆற்றலும் உடையவராக இருக்காது. இச்சூழலில், மக்கள் தரமான வாழ்க்கையை வாழ முடியாது.

அந்த வாழ்க்கை எப்படி மதிப்புடையதாக இருக்கும்? எனவேதான் மக்களின் விலை மலிவாகவே உள்ளது. அது கூலியானாலும் சரி, வாக்கானாலும் சரி, உயிரானாலும் சரி, எல்லாமே மலிவுதான்.

இந்தச் சூழல் மாறாத வரையில், மக்களுக்கு மரியாதை கூடப்போவது கிடையாது. எனவே, ஏழ்மை ஒழிய, மரியாதைகூட, நாம் செய்ய வேண்டியது மக்கள் தொகைக்குறைப்பு, தாய்சேய் நலன், முறையான குழந்தை வளர்ப்பு. எந்தச் சமுதாயம் இதில் கவனம் செலுத்துகிறதோ, அந்தச் சமுதாயம்தான், மதிக்கத்தக்க வாழ்க்கையை நடத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT