ஒளிமயமான எதிர்காலத்துக்கு...
சென்னையில் தினமும் 2 மணி நேரமும், கிராமங்களில் தினமும் 4 மணி நேரமும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமலில் உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டையும் சேர்த்து 10 மணி நேரத்துக்கும் மேல்
சென்னையில் தினமும் 2 மணி நேரமும், கிராமங்களில் தினமும் 4 மணி நேரமும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமலில் உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டையும் சேர்த்து 10 மணி நேரத்துக்கும் மேல் மின் தடை உள்ளதாக மக்கள் புகார் கூறுகிறார்கள்.
சிலருக்கு பட்டால் புத்தி வரும் என்பார்கள். ஆனால், நமக்கு மின்வெட்டு விஷயத்தில் புத்தி வரவில்லை என்றே தோன்றுகிறது.
"அடுத்தாத்து அம்புஜங்களை' பார்த்துப் பார்த்து மெகா திரை கொண்ட டி.வி., 2 கதவு கொண்ட குளிர் சாதனப் பெட்டி (டபுள் டோர் ஃபிரிட்ஜ்), குளிர் சாதன வசதி (ஏ.சி.), நவீன மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் (துவைப்பவர்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட), மின் அடுப்பு (இன்டக்ஷன் ஸ்டவ்), மைக்ரோ ஓவன், கம்ப்யூட்டர் (தேவை இருந்தாலும், இல்லாவிட்டாலும்), இன்வெர்ட்டர் என நமது இல்லத்தரசிகள் மின்சார சாதனங்களை வாங்கி குவித்து வருகிறார்கள்.
பெட்ரோல் விலை எவ்வளவு உயர்ந்தாலும், வண்டி ஓட்டாமல் நம்மால் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல, மின்சார சாதனங்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
இதுபோதாதென்று ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை அளித்து கடந்த ஆட்சியாளர்கள் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். இதனால், கேபிள் டி.வி.க்கு நிரந்தர வருமானம் வருவது ஒருபுறம் இருக்கட்டும், முடித் திருத்தகம், பெட்டிக் கடை, மளிகைக் கடை என அங்கிங்கெனாதபடி எங்கும் இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி நிறைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 மணி நேரம் (மின்சார விநியோகம் இருந்தால்) அந்த டி.வி.க்கள் இயங்கினால் எவ்வளவு மின்சாரம் வீணாகிறது என்பதை நாமே கணக்கிட்டுக் கொள்ள முடியும்.
அவர்களுக்குப் போட்டியாக இன்றைய ஆட்சியாளர்களும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இவற்றுடன் மாணவர்களுக்கு மடிக் கணினியையும் வழங்கி வருகிறார்கள்.
தேவைப்படும் அளவுக்கு மின்சார உற்பத்திக்கு வழிவகுக்காமல் மின்சாரத்தை எவ்வளவு அதிகமாகச் செலவழிக்க வழிவகுக்க முடியுமோ, அத்தனை திட்டங்களை மாற்றிமாற்றி தீட்டி வருகிறார்கள்.
குழந்தைகள் அதிக நேரம் டி.வி. பார்க்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால், பெரியவர்கள் அந்த விஷயத்தில் அப்படி நடந்து கொள்கிறார்களா? மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும் நேரத்தில் ஐ.பி.எல். ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 7 மணி நேரம் 2 ஆட்டங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இரவு 12 மணி வரையும் பெரியவர்களும், சிறியவர்களும் ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்து வருகின்றனர். பெண்களோ பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பப்படும் மெகா தொடர்களில் குறைந்தது 5 மணி நேரத்துக்கும் மேல் மூழ்கி விடுகின்றனர்.
ஆனால், குழந்தைகள் அரை மணி நேரத்துக்கும் மேல் டி.வி. முன்னால் அமரக் கூடாது என நிபந்தனை விதிக்கிறோம். நீங்கள் ஐ.பி.எல். ஆட்டங்களையும், மெகா தொடர்களையும் பார்க்கிறீர்களே என சுட்டிக் குழந்தைகள் திருப்பிக் கேட்டால், பெரியவர்களை எதிர்த்துப் பேசுவது கெட்ட பழக்கம் என அவர்களது வாயை அடைத்து விடுகிறோம்.
இதைக் கூறும்போது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு பெண்மணி அவரிடம் தனது குழந்தையை அழைத்து வந்து, தனது மகன் அதிகம் சர்க்கரை சாப்பிடுவதாகவும், அதை நிறுத்த அவனுக்கு அறிவுரை கூற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாராம்.
ராமகிருஷ்ணரும் நாளை வா, நாளை வா என ஒரு வாரம் சொன்னாராம். ஒருவாரம் கழித்து அந்தக் குழந்தையிடம், குழந்தாய், "சர்க்கரை சாப்பிடுவது உடலுக்குக் கேடு, எனவே சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விடு' என்றாராம். உடனே, அந்தத் தாய், இதை போன வாரமே கூறியிருக்கலாமே என ராமகிருஷ்ணரிடம் கேட்டாராம். அதற்கு ராமகிருஷ்ணர் கூறினாராம்: "நானே சர்க்கரை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நேற்றுதான் அதை நிறுத்தினேன்' என்றாராம். அவர் மெய் ஞானி.
பல வீடுகளில் மின்விசிறி தேவையில்லாமல் இயங்கிவரும். அதுபற்றி வீட்டில் உள்ளவர்கள் யாரும் கவலைப்பட மாட்டார்கள். தொலைக்காட்சி யாரும் பார்க்காவிட்டாலும் இயங்கிக் கொண்டிருக்கும். அலுவலகங்களில் தேவையில்லாமல் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும், முதலாளிதானே பணம் கட்டுகிறார் என்ற அசட்டையினால் கவலைப்பட மாட்டோம். மின்வெட்டு கடுமையாக உள்ள இந்த நாள்களிலும் பல ஊர்களில் பகல் பொழுதிலும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
சரி, இதற்கு என்னதான் தீர்வு? நான் மட்டும் செய்தால் பலனில்லை என்ற மனோநிலையை விடுத்து மற்றவர்களின் செயல்களைப் பற்றி கவலைப்படாமல், நல்ல செயல்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். தேவையில்லாமல் எரியும் விளக்குகளையும், மின் விசிறியையும் நிறுத்த வேண்டும். கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய உடன் மின் இணைப்பைத் துண்டித்து விட வேண்டும்.
தொலைக்காட்சி பார்ப்பதற்கு குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதுபோல ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என நமக்கு நாமே சுயக் கட்டுப்பாடு விதித்துக் கொள்ள வேண்டும்.
தேவையில்லாத நேரங்களில் "பிளக் பாயிண்டில்' இருந்து "பிளக்கு'களை அகற்றி விட வேண்டும். தெரு விளக்கு எரிந்தால் அருகில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நமக்கு அளிக்கும் மின்சாரத்துக்கு அரசாங்கம் அதிக அளவில் மானியம் அளித்து வருகிறது என்பதை நினைவில் கொள்வோம். இது அரசு மட்டுமே செய்ய வேண்டிய வேலை என நினைத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக் கொண்டே இருந்தால் பாதிக்கப்படப்போவது நாம்தான், ஆட்சியாளர்கள் அல்ல.
இந்த விஷயத்தில் அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை ஓர் இயக்கமாகவே மேற்கொண்டால், நமது வாழ்வு "ஒளிமயமாக' மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.