முலாம் பூசிய புத்திரப் பிரதேச முதல்வரின் சித்தப்பா ஆன மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் தமது அதிகாரிகளுக்கு வழங்கிய ரகசிய அருளுரை இது. புதுதில்லி மைதானத்தில் ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடந்துகொண்டிருந்த தருணத்தில் வெளியானது இந்தப் பிரகடனம்.
இனியேனும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் முன்னேற்றம் தேவை. இந்து - கிறித்தவம் - இசுலாம் ஆகிய வாழ்வு நெறிகளின் நிறங்கள் காவி, வெள்ளை, பச்சை மூவர்ணம் என்கிறோம். பெüத்தரின் அசோகச் சக்கரமும் சுமந்து பட்டொளி வீசும் தேசியக் கொடியைக் கறைபடியாத கரங்களால் பறக்க விட வேண்டாமா?
30 கோடி ஜனங்களின் சங்கம் முழுமையும் பொது உடைமை ஆன அரசியல் சாசனப் பை 65 வயதில் இற்றுப்போய் இருக்காதா? இன்றைக்கு 120 கோடி மக்களையும் அதில் திணித்து ஏற்றினால் தாங்குமா? வலுவான புதிய மசோதாக்கள், சட்டங்கள் வகுக்காமல் மனப் பூட்டு எதற்கு? ஆட்சியாளர்கள் மனதில் லோக்பால், கள்ளிப்பால் என்கிற நினைப்பு மாறினால்தான் உண்டு.
பாருங்களேன், 2012 ஆம் ஆண்டு விமான தள ஊழலில் தில்லியில் ஒரு கிரவுண்ட் நிலம் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. நினைத்தால் நீங்களேகூட பத்து கிரவுண்ட் வாங்கிப்போட்டிருக்கலாம். இதில் அரசுக்கு 1,85,000 கோடி ரூபாய் இழப்பாம்! நிலக்கரி, மின்திறன் என்று எல்லாம் புத்தம் புதுப் புகைமூட்டம். மத்திய ஆட்சியாளரிடம் "மண்டையில் புற்று' என்றால், மாநிலக் கெண்டைக்காலிலும் ஆணிப்புற்று என்று எதிர்த் தாக்குதல்; சபாஷ், சரியான போட்டி!
ஊழல் மட்டுமா, வடக்கே மத்திய அமைச்சரின் புத்திரரும் மாநில முதல்வரும் ஆனவர் விவகாரம் அமுங்கிக் கிடக்கிறது. தன் கட்சி முகவர், தொண்டர்கள் இருவரிடம் கட்சிக்காக வசூலித்த 71 லட்சம் ரூபாய், 40 லட்சம் ரூபாய் லஞ்சத் தொகைகளைக் கண்ணில் காட்டவே இல்லையாம். முதல்வர் தமது வீட்டுக்கே அழைத்துப் பின்னிவிட்டாராம்.
நொண்டி அடித்து வெளியே வந்து காவல்துறை எம வாகனத்தில் ஏறின முகவர் மறுநாளே ஆண்டவனிடம் ஐக்கியமாகிவிட்டார். வழக்கம்போல தனி நபர் விசாரணைக்கு அரசு உத்தரவாம்; வழக்கே மறந்துபோன பிறகு தீர்ப்பு யாருக்காம்?
இந்த லட்சணத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் விலைக்குக் கிடைப்பதாக ஒரு மாநில முதல்வரே "சாதிக்கிறார்'. விவசாயி, பேராசிரியர், முன்னாள் நீதிபதி என்று எதிர்த்துப் பேசுவோர்க்கு மிரட்டல்கள். நம் அரசியல்வாதிகளோ எங்கள்மீது வழக்குப் போடுங்கள், "பார்த்துக் கொள்கிறோம்' என்று சவால் விடுகிறார்களே, உள் அர்த்தம் இருக்கிறதோ என்னவோ?
இந்தத் தருணத்தில் நம் நாட்டின் சில வரலாற்றுக் குறிப்புகளையும் செய்திகளையும் அலசுவோமே!
பாடலிப்புத்திரத்தில் நந்தர்களுக்குப் பிறகு கி.மு. 320 ஆம் ஆண்டு சந்திரகுப்த மெüரியர் மகத நாட்டு மன்னரானார் என்பது சரித்திரம். கிரேக்க நாட்டு செல்யூக்கஸ் எனும் படைத்தளபதி தம் மகளைச் சந்திர குப்தருக்கு மணம் புரிவித்தார். மருமகனின் அரசவையில் மாமனார் தன் ஆளாக மெகஸ்தனிஸ் என்கிற கிரேக்கப் பிரதிநிதியை நியமித்தார். அவரால் இந்திய, திராவிட, தமிழ்க் கலாசாரக்கூறுகள் கிரேக்கத்துக்குக் கடத்தப்பட்டன. மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் தொகுப்பு "இண்டிகா' எனப்படும்.
சந்திரகுப்தரது மகன் பிந்துசாரர் வழிப் பேரனான அசோகவர்த்தர் ஆளுகையில் இந்தியாவில் தோன்றியது பெüத்த மதம். பின்னாளில் மகதப் பேரரசின் மீது படையெடுத்த முஸ்லிம் மன்னர் ஷெர் ஷா சூரியின் தலைநகரம் விகார் ஷரீஃப் (நாளந்தா மாவட்டம்) எனப்பட்டது. புத்த விகாரங்கள் (ஆலயங்கள்) மிகுந்த அந்த நகரத்தின் பெயரில் அந்த மாநிலம் விகார் - பிகார் - பீகார் ஆயிற்று. வண்டி - பண்டி ஆனது போலத்தான்.
மெüரியப் பேரரசின் சாதவாகனர்கள் "தென்பிராந்திய அதிகாரிகள்' என்று அழைக்கப்பட்டனர். வடமொழியில் அந்த்ர என்றால் தெற்கு என்று பொருள். அந்தப் பகுதியே பிற்காலத்தின் "ஆந்திர'ப் பிரதேசம். நடுவில் "மத்திய'ப் பிரதேசம். வடக்கே "உத்தர'ப் பிரதேசம். காஷ்மீரிப் பண்டிதர் குடும்பம் சொந்த மாநிலத்தின் வேட்பாளர் ஆக அல்லவா போட்டி இட வேண்டும்? உத்தரப்பிரதேச ஆதிவாசிகளின் பிரதிநிதியாக ஜெயிப்பது யாருக்கு லாபம்? போகட்டும்.
ஜார்கண்ட் என்பதும் காரணப் பெயர். ஜாரி என்றால் வடமொழியில் அடர்வனம். இந்த மாநிலத்தை வனாச்சலப் பிரதேசம் என்றும் வழங்கலாம். 4,000 கோடி கொள்ளையில் இதன் முன்னாள் முதல்வர் சிக்கி இருப்பது துணுக்குச் செய்தி.
அதே போல, பசுமையான காடுகள் (வட மொழியில் "ஹரி' என்றால் பச்சை.) அடங்கியது ஹரியாணா. ஆரண்ய என்றாலும் காடுதான். அரன் (சிவன்) அல்லது ஹரி (விஷ்ணு) குடிகொள்ளும் மாநிலம் என்றும் பொருள் வழங்குகிறது. இங்குதான் இன்று மாநில உள்துறை அமைச்சர் 23 வயது மங்கை தற்கொலை வழக்கில் 85,000 காவல்துறையினர் கண்ணில் மண்ணைத்தூவிய சாமர்த்தியசாலியாகத் திகழ்ந்தார். இரண்டுவாரம் தலைமறைவாகி, சரண் அடைந்திருக்கிறார். அந்த மங்கையின் தற்கொலை மரணக் குறிப்பில் (முன்னாள்) அமைச்சர் பெயர் உள்ளதாமே!
அதே மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன், மாநிலக் காவல் அதிகாரியினால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்டாள்; 19 ஆண்டுகள் கழித்து அந்த அதிகாரிக்கு ஒன்றரை ஆண்டுச் சிறைவாசம்; தற்போது ஓய்வூதியமும் பெற்று சுகமாய் வசித்துவருகிறார். அதிகாரிக்கே இத்தனை முடியும் என்றால் ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்தவர் என்ன மக்கா?
ராஜபுத்திரர்கள் மாநிலம் ராஜஸ்தான். இங்கு ராஜீவ்காந்தி ஓடையில் காணாமல்போன "தாதி'யின் கரிந்த எலும்புச் சடலத் துண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. குற்றப் பின்னணியில் அமைச்சரின் நிழல். என்றைக்கு விடியுமோ?
பீஸ், சட்லஜ், ரவி, ஜெனாப், ஜீலம் ஆகிய பஞ்ச நதிகளின் பூமி பஞ்சாப் (குர்முகி). இதன் முன்னாள் முதல்வர் ஒருவரும் ஊழல் தண்டனை பெற்ற பாக்கியசாலி. இதற்கு இடையில் (முன்னாள்) பெண் அமைச்சர் ஒருவர் தனது மகளையே கொலைசெய்த வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
ராஜா ஜம்பு லோச்சன் நிலம்தான் ஜம்மு. கா (தண்ணீர்) - சுமீரா (ஈரப்பதம் ஊட்டு) தானே காஷ்மீர்! காஸ்யப முனிவரின் நிலம் என்ற தொன்மமும் உண்டு. இன்று அண்டை நாடு இந்தியாவின் சர்வதேச எல்லை தாண்டி பூமிக்கு அடியில் 140 மீட்டர் அளவுக்கு எலிவளை தோண்டி ஊடுருவ முயல்கிறதாம். நமக்கு எப்போதுமே "பேச்சுவார்த்தை'தான்! ""பேசிப் பேசியே, இப்படிப் பேசியே, பொழுதும் போனது அம்மா அம்மா''. தில்லி தெருக்களில் இந்த கீதம் யாரும் பாட மாட்டார்களோ என்று ஏக்கமாக இருக்கிறது.
"அசமா(னன்)' என்ற பெயரில் அசாம் மாநிலம். சம அந்தஸ்து அற்றவன் என்ற பொருள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் சுக்கப்பாவா என்ற தாயி இன இளவரசர் ஆண்ட அஹாம் ராஜாங்கம் நடைபெற்றதாம். அஹாம் மருவலே அசாம் என்கிறார்கள். (சிந்து - இந்து, சமணம் - அமணம் என்றபடி ஒலித் திரிபுகள் இயல்பே). இத்தகையப் பழங்குடிகள் மொழியில் "ஹோ-ஸாம்' என்றால் தாழ்ந்த நிலம் என்று அர்த்தம். இந்த மாநிலத்துக்குள் வங்கதேசத்திலிருந்து கடவுச்சீட்டு இன்றிப் புகுந்த அன்னியர்களால் பிரச்னை.
தேசிய கீதத்தையும் இன்னும் திருத்தாமல் விடாப்பிடியாக, பாகிஸ்தானின் "சிந்து' மாகாணத்தையும் சேர்த்துப் பாடிச் சிலிர்க்கிறோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தாகூர் பாடிய தேசிய கீதம் அன்றைக்கே சர்ச்சைக்கு உள்ளாயிற்று. 1911 டிசம்பர் 27 அன்று முதல்முறையாக கொல்கொத்தா, இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பெற்றது.
உண்மையில் அது "ஜொன கொன மொன ஒதி நாயகொ ஜொய ஹே, பாரதொ பாக்யொ விதாதா...' என்றுதான் பாடப்பட வேண்டும். சமஸ்கிருதம் கலந்தது தற்சமய வங்காள மொழிப்பாடல்.
அதுவே மூன்றாம் நாள் மாநாட்டுக்கு வர இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைப் புகழும் துதிப்பாடல் என்று சில வங்காள ஏடுகள் வர்ணித்தன. கவிஞர் அந்த விமரிசனத்தை வடிகட்டின முட்டாள்தனம் என்று எதிர்த்தாராம்.
எப்படியோ, 1913-ஆம் ஆண்டு தாகூருக்கு முதன்முறையாக நோபல் பரிசு அறிவிப்பு ஆயிற்று என்றால் சும்மாவா? "கீதாஞ்சலி'க்கு நோபல் பரிசு. வங்காள மொழியில் எழுதிய காவியத்தை ""மேலை இலக்கியத்தின் ஒரு கூறான ஆங்கிலத்தில் சொந்த வார்த்தைகளால்'' மொழிபெயர்த்து இருந்தார், அவ்வளவுதான்.
அரசின் நேரடித் தொலைக்காட்சிகளில் உற்றுக் கவனியுங்கள், உங்கள் மாண்புமிகு உறுப்பினர்கள் வருகை இரண்டாம் நாளில் இருந்தே தேய்ந்து கட்டெறும்பு ஆகி வருகிறது. ஏறத்தாழ 800 பேரில் தினம் 500 பேராவது தொடர்ந்து கலந்துகொண்டால் ஆச்சரியம். வாய் திறந்தால் அதிசயம்.
ஆனால், தமிழகத்தின் சின்னத்திரைகளோ சினிமாவுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட மாதிரி, நாள் முச்சூடும் திரைப்படங்களில் முக்குளிக்கின்றன. ஒரே கொட்டாவி மயம். சக்களத்தித் தொடரில் அத்தைக்கு அரிசிப் பாயாசம் பரிமாறியது யார்? அர்த்தபூர்வப் போட்டிகள் வேறு நடத்துகின்றன. அறிவார்ந்த புலனாய்வு ஊடகத் திறம் மருந்துக்குக் கூட இல்லை. கதாநாயகர்களின் விளம்பரங்களை நம்பி "ஈமு' (ஈரோடு முதலீட்டாளர்கள்) மோசம் போனதை மாறிமாறிக் காட்டுகிறார்கள். நாளைக்கே டைனோசார்கள் வளர்க்கச் சொன்னாலும் சம்மதிக்கும் பணத்தாசை எதற்கு?
மத்திய ஆட்சி மன்றத்தில் நடக்கும் எத்தனையோ காரசார விவாதங்கள் இவற்றின் மின்னணுக் கண்களில் பதிவு ஆவதே இல்லை.
உள்துறை அமைச்சரோ "அம்மிணி இது உங்க சினிமா விஷயம் அல்ல' என்று எதிரணியின் "முன்னாள்' நடிகை உறுப்பினரை மூக்கு அறுக்கிறார். பின்னர் அவரைத் தன் சகோதரி என்று மன்னிப்பு கேட்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் துணிச்சலாக ஆளும் கட்சியைச் சட்ட விரோதம் ஆனது என்று குற்றம் சாட்டுகிறார். ஆனாலும் ஆளும் கட்சித் தலைவரோ, அவைத் தலைவர் மாதிரி இருக்கையில் அமர்ந்தபடியே, எதிர்க்கட்சி உறுப்பினரை நோக்கி ஆக்ரோஷமாக இரு கை வீசி எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்.
நாட்டில் உண்மையான ஜனநாயகம் எப்போது எழுந்து நிற்குமோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.