இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து 3 ஆண்டுகளோடிவிட்டன. போரின்போது கனரக ஆயுதங்கள் கொண்டு ஈழத் தமிழர்கள் தாக்கிக் கொல்லப்பட்டனர். ஆனால், இன்றளவும் தமிழர்கள் உளவியல் ரீதியான தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர்.
÷கறுப்பு ஜூலை, முள்ளிவாய்க்கால் நினைவு தினங்களை அனுசரிக்கும் சமயங்களில் ஈழப் போரின்போது கொடூரமாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்களின் உடல்களைக் காட்சிப்படுத்தும் விடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
தமிழர்கள் மீதான கொடுமைகளை வெளியே கொண்டுவரும் நோக்கில், இத்தகைய விடியோக்களை தமிழ் இணையதளங்கள் வெளியிடுகின்றன. இந்த விடியோக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை அம்பலப்படுத்த வலுசேர்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதே சமயம் போரில் விடுதலைப் புலிகளைத் தங்களுடைய ராணுவம் வெற்றிகொண்டதை சிங்களத் தரப்பும் விடியோக்கள் வாயிலாக வெளியிடுகிறது. இத்தகைய விடியோக்கள் வெளியிடப்படுவதில் இலங்கை ராணுவ உளவுப் பிரிவின் முக்கியப் பங்கு இருக்கிறது.
÷போரின்போது ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்களைத் தொடர்ந்து காட்சிப்படுத்துவதன் மூலம் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் மனதில் அச்ச உணர்வு ஏற்படும் என நம்புகின்றனர் இலங்கை உளவுத் துறையினர்.
÷""உள்நாட்டில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களாலேயே ஈழத்தை அடைய முடியாதபோது, வெளிநாடுகளில் இருந்து அகிம்சை வழியில் போராடி ஈழத்தை எப்படி அடைய முடியும்?'' என்கிற எண்ணத்தை உருவாக்கி, வெளிநாடு வாழ் தமிழர்களிடையே மனச்சோர்வை ஏற்படுத்திவிடும் இக் காட்சிகள் என்று அவர்கள் கருதுகின்றனர்.
÷இலங்கையில் தமிழர்கள் முற்றிலும் ஒடுக்கப்பட்ட பிறகு, அந் நாட்டு உளவுத் துறையினரின் அடுத்த இலக்காக இருப்பது, பிற நாடுகளில் - குறிப்பாகத் தமிழ்நாட்டில் - வாழும் தமிழர்கள்தான்.
விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகும் கூட தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் உளவியல் ரீதியான தாக்குதலின் ஓர் அங்கம்தான்.
÷கடல் பரப்பில் இரு நாட்டுக்கும் இடையேயான எல்லை சரிவர வரையறுக்கப்படாத சூழலில், மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் செல்வது தவிர்க்க முடியாதது. எல்லையைத் தாண்டிய குற்றத்துக்காக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது இங்கு மட்டுமே நிகழ்கிறது. எல்லை தாண்டும் குஜராத் மீனவர்களை எதிரி நாடான பாகிஸ்தானே சுடுவதில்லை என்பது யாவரும் அறிந்ததே.
÷மீனவர்கள் கொல்லப்படுவதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், இப்போது கொல்லப்படாமல், இலங்கைக் கடற்படையினரால் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர்.
கோடியக்கரை அருகே சனிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதே சமயம், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.
எல்லையைத் தாண்டியதாகக் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது, ""போதைப் பொருள்களைக் கடத்தியதாக'' அந் நாட்டில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மீனவர்களின் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதே இச் செயல்களின் நோக்கம்.
இதனால் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு காரணமாக, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர்.
÷தமிழக மீனவர்களைத் தாக்க வேண்டும் என்பது இலங்கைக் கடற்படையின் நோக்கமல்ல. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டாலும், கைது செய்யப்பட்டாலும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பும்; தமிழக மக்களும், மாநில அரசும் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசை வலியுறுத்தும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டால், மக்களின் கோபத்துக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உள்ளாகும் என்பதையெல்லாம் இலங்கை அரசும் நன்கு அறியும்.
அப்படி இருந்தாலும், "சொந்த நாட்டு மக்களே கைது செய்யப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும், சுட்டுக் கொல்லப்பட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எப்போதும் இலங்கைக்குத்தான் ஆதரவாக இருக்கும்' என்பதைத் தமிழக ஆட்சியாளர்களுக்கும், தமிழக மக்களுக்கும் புரிய வைப்பதற்காகத்தான் அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை இப்படி அடுத்தடுத்து தாக்குதல் நடத்துகிறது.
÷இலங்கையுடனான உறவைவிட தமிழர்களின் உயிரும், உடமைகளும்தான் முக்கியம் என்பதை என்றைக்கு மத்திய அரசு உணர்கிறதோ - அல்லது தமிழர்கள் உணர்த்துகிறார்களோ - அப்போதுதான் இத்தகைய தாக்குதல் நிகழாமல் இருக்கும்.
÷வருங்காலத்தில் கூட தமிழர்கள் மீது இலங்கையின் உளவியல் தாக்குதல் தொடரும். "எங்கெல்லாம் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது. அத்தகைய போராட்டங்களை உளவியல் ரீதியான அச்சுறுத்தலால் மட்டுமே தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை சிங்களர்களுக்குக் காலம் உணர்த்தும்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.