கட்டுரைகள்

விழிப்புடன் இருப்போம்

 பிள்ளையார் பால் குடித்ததுதான் இந்த நூற்றாண்டிலேயே பெரிய அளவில் பிரபலமான மூடநம்பிக்கை என்று நினைத்திருந்தால் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக, தினுசுதினுசாய் வந்துகொண்டுதான் இருக்கிறது.  ரம்ஜான் பண்டிகைக்கு ம

சா. ஜெயப்பிரகாஷ்

 பிள்ளையார் பால் குடித்ததுதான் இந்த நூற்றாண்டிலேயே பெரிய அளவில் பிரபலமான மூடநம்பிக்கை என்று நினைத்திருந்தால் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக, தினுசுதினுசாய் வந்துகொண்டுதான் இருக்கிறது.

 ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாள் இரவில் எல்லா நகரிலும் ஒரே பரபரப்பு. கையில் மெகந்தி வைத்திருந்தவர்கள் பெங்களூரில் 100 பேர், திருவாரூரில் 200 பேர், வேலூரில் 100 பேர் "இறந்தே விட்டதாக'ப் பொய்த் தகவல். இரவு சுமார் 10 மணிக்குத் தொடங்கிய இந்தத் தகவல், 11 மணியளவில் எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பாகவே வெளிவந்துவிட்டது.

 பண்டிகையையொட்டி கைகளில் மெகந்தி வைத்திருந்த அத்தனைபேரும் அதிர்ந்துபோய், "டெட்டால்' ஊற்றிக் கழுவிய கதைகள், பறந்தடித்துக் கொண்டு மருத்துவமனைகளுக்குச் சென்ற கதைகள் ஏராளம்.

 தொலைக்காட்சியொன்றிலும் மெகந்தி வைத்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதி - என நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்த, பல இடங்களில் நிலைமை மோசமானது. பெருநகரங்களில் காவல்துறை உயர் அலுவலர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிட்டனர்.

 லேசான அரிப்பு இருப்பதாக சிலர் வந்தனர்; பீதிக்குப் பிறகு "செத்து விடுவோம்' என்று பயந்து பலர் வந்தனர். நள்ளிரவுக்குப் பிறகு, பொழுது விடிந்த பிறகே கொஞ்சம் அமைதி திரும்பியது.

 மருதாணி இலைகளை அரைத்து பண்டிகைக் காலங்களில் பெண்கள் விடிய விடிய விழித்திருந்து கைகளில், கால்களில் வகைவகையான படங்களை வரைந்து கொள்வது வழக்கம்.

 அண்மைக்காலங்களில் வடமாநிலங்களில் இருந்து இறக்குமதியான "மெகந்தி' கூம்பு வடிவில் ஆயத்த நிலையில் விற்பனையாகின்றது. மருதாணி இலைகளை அரைத்து, அவற்றில் மேலும் வண்ணத்தை உருவாக்குவதற்காகவும், கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சில ரசாயனங்களைச் சேர்த்து அந்த மெகந்தி இப்போது படுஜோரான விற்பனையில் இருக்கின்றது.

 இயல்பாக ரசாயனங்கள் எதில் கலந்திருந்தாலும் அவை சில ஒவ்வாமையை உடலுக்கு ஏற்படுத்தும் என்பது உண்மை. அதிகபட்சமாக தோல் லேசாக அரிக்கலாம் அல்லது தடிக்கலாம். இதை வைத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக இறந்து போகிறார்கள் என்று விஷத்தைப் பரப்பியவர்கள் கொடியவர்களே. ஆனால், நாம் எப்படி நம்பினோம்? உயிர்ப் பாதிப்பு என்றவுடன் அச்சம் எழுகிறது.

 அடுத்த சில நாள்களில், "பிறந்த குழந்தை' பேசியதாம். அது ஆண் குழந்தையாம். பிறந்தவுடன் பேசி- பேசியவுடன் அது இறந்துபோனதால், இந்த பூமியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கெல்லாம் ஆபத்தாம் என்று வதந்தி. திருப்பூர் போன்ற நகரங்களில் இந்தப் புரளி பற்றிக் கொள்ள, ஏறத்தாழ தமிழ்நாடெங்கும் விதவிதமான பரிகாரங்கள்.

 சில பகுதிகளில் வீட்டு வாயிலில் சிதறு தேங்காய் உடைத்திருக்கிறார்கள். சில பகுதிகளில் இரவில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு, விளக்கேற்றியிருக்கிறார்கள். சில பகுதிகளில் சிறார்களுக்கு "மந்திரித்த' கயிறுகள் கட்டிவிடப்பட்டிருக்கின்றன.

 பிறந்த அன்றே குழந்தை பேசுமா? சரி பேசும் என்றே வைத்துக் கொள்வோம். அதிகபட்சமாக என்ன பேசும்? "ஹே...' என்றிருக்கலாம். ஏதோ உடல் கோளாறினால் அந்தக் குழந்தை உயிரிழந்தும் இருக்கலாம். அதற்காக, எப்படி இப்படியெல்லாம் கதை பரப்புகிறார்கள்? நாமும் நம்புகிறோம்?

 சில மாதங்களுக்கு முன்பு திடீரென நள்ளிரவில் விழித்துக் கொண்ட பெண்கள், "எங்கோவொரு கோயிலுக்குள் எருமை மாடு புகுந்துவிட்டதாம்; எனவே வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட வேண்டும்' என பதைபதைத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 குறிப்பாக கோயிலுக்குள் எருமை மாடு சென்றுவிடக் கூடாது என்பதில் இருக்கும் அரசியல் வேறு. அதற்காக அர்த்த ராத்திரியில் இந்தக் கொடுமைகள் தேவைதானா? பெரும்பாலும் இவையனைத்தும் நமது நவீன தொலைத்தொடர்புக் கருவியான "செல்போன்கள்' வந்தபிறகுதான் அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளன.

 இவற்றுக்கு எதிராக அரசுத் தரப்பில் அந்த நேரத்தில் களமிறங்கியிருக்க வேண்டும். பல அரசு அலுவலர்கள், காவல்துறையினர் வீடுகளிலும் கோலமிட்டு, விளக்கேற்றும் நிலை இருப்பதால் அவர்களிடமிருந்து இதை எதிர்பார்க்க முடியாது. எனவே, விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பு இப்போது பொதுமக்களிடம் மட்டுமேதான் இருக்கிறது. படிப்பது என்பதே வேலை வாங்கிப் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல; அறிவை வளர்த்துக் கொள்ளவும்தான். படித்தவர்களே இப்போது இதுபோன்ற மடமைகளுக்குள் சிக்கிக் கொண்டு, தடுமாறுவதுதான் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

 குறைந்தபட்சம் "இது சாத்தியமா? செய்தால் என்ன ஆகும்? செய்யாவிட்டால் என்ன ஆகும்?' என்றாவது யோசித்துச் செயல்பட வேண்டும். நம்மை முட்டாளாக்கும் முயற்சிகளில் இருந்து விழிப்புடன் இருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT