கட்டுரைகள்

கடமை தவறிய பிரதமர்கள்...

காவிரிப் பிரச்னையில் ஒவ்வொரு தடவையும் நியாயம் கிடைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத்

பழ. நெடுமாறன்

காவிரிப் பிரச்னையில் ஒவ்வொரு தடவையும் நியாயம் கிடைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தமிழகம் தட்டவேண்டியிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இத்தகைய அநீதிக்கு ஆளானதில்லை.

 1968-ஆம் ஆண்டில் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் கே.எல். ராவின் முயற்சியில் இரு மாநில முதல்வர்களான மு. கருணாநிதியும் வீரேந்திர பாட்டீலும் கூடி பலமுறை பேச்சு நடத்தினார்கள்.

 இரண்டாண்டு காலம் நடத்திய  பேச்சுவார்த்தைகள் எந்தப் பயனும் அளிக்காத நிலையில் நடுவர் குழுவை அமைக்க வேண்டிய மத்திய அரசு அவ்வாறு செய்ய முன்வரவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமலும் ஹேமாவதி, கபினி திட்டங்களைத் தொடங்கிவிட்டது கர்நாடகம். மத்திய அரசு அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. எனவே வேறுவழியில்லாமல் 1971-ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழகம் தொடுத்த வழக்காகும்.

 1972-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டாளியான தமிழக முதல்வர் கருணாநிதி, அவரிடம் முறையிட்டார்.

 உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்றால் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுவதாக இந்திரா காந்தி அளித்த வாக்குறுதியை ஏற்று தமிழக அரசு இந்த வழக்கைத் திரும்பப்பெற்றது.

 1972-ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் கூடிய முதலமைச்சர்கள் மாநாட்டில், "காவிரி உண்மை அறியும் குழு' ஒன்று நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. 1973 டிசம்பரில் மூன்று மாநில முதலமைச்சர்களும் மீண்டும் கூடிப் பேசியபோது "உண்மை அறியும் குழு'வின் அறிக்கை முழுமையாக ஏற்கப்பட்டது.

 1974-ஆம் ஆண்டு நவம்பரில் மூன்று மாநில முதலமைச்சர்கள் மீண்டும் கூடிப் பேசியபோது "காவிரி பள்ளத்தாக்கு அமைப்பு' ஒன்றை அமைக்கும் யோசனையை ஏற்றுக்கொண்டனர். ஆனால், அதை உடனடியாக அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இந்தப் பிரச்னை இத்தனை ஆண்டுகாலமாக நீடித்ததற்கு அதுதான் முக்கியமான காரணமாகும்.

 1990-ஆம் ஆண்டு வரை பேச்சுவார்த்தையை நீட்டித்து கர்நாடகம் புதிய அணைகளையும் கால்வாய்களையும் அமைத்து தனது பாசன வசதிகளைப் பெருக்கிக்கொண்டது.

  பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது நடுவர்மன்றத்தை அமைக்க வேண்டுமென தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவரிடம் வற்புறுத்தினார். ஆனால் கர்நாடக முதலமைச்சராக இருந்த பங்காரப்பா மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்து நடுவர்மன்றம் அமைக்கக்கூடாது என வற்புறுத்தினர். எனவே, தனக்கு அதிகாரம் இருந்தும் நடுவர்மன்றம் அமைக்க பிரதமர் வி.பி.சிங் முன்வரவில்லை. பிரச்னையை உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு விடுவதாக அறிவித்தார்.

 24-4-1990-இல் உச்ச நீதிமன்றம் இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்தி நடுவர் மன்றத்தை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது. காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் முதலாவது தலையீடு இதுவாகும்.

 நடுவர்மன்றத்தை அமைக்கவிடாமல் தடுக்கும் முயற்சியில் தோற்றுப்போன கர்நாடகம் இடைக்கால ஆணை பிறப்பிக்க நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டது.  உச்ச நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பிக்க நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளித்தது. இது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலையீடு ஆகும்.

 1991-ஆம் ஆண்டு ஜூன் 30-இல் நடுவர் மன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை ஏற்பதற்கு கர்நாடகம்  மறுத்ததோடு இந்த ஆணையைச் செல்லாததாக்கும் வகையில் "காவிரிப் பாதுகாப்புச் சட்டம்' என்ற ஒரு சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

  இச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பது தெரிந்திருந்தும் மத்திய அரசு கர்நாடகத்தைக் கண்டிக்க முன்வரவில்லை. இச்சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அவர் மூலம் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது.

 1991 நவம்பர் 22-ஆம் தேதி உச்ச நீதிமன்றம், "கர்நாடக சட்டம் செல்லாது' எனத் தீர்ப்பளித்தது. இது உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது தலையீடு ஆகும்.

 நடுவர்மன்றம் வெளியிட்ட இடைக்காலத் தீர்ப்பை உடனடியாக கெஜட்டில் வெளியிடாமல், காலம் கடத்தும் வகையில் அதை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது மத்திய அரசு. "இடைக்காலத் தீர்ப்பு வழங்க நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டு, அந்தத் தீர்ப்பை உடனடியாக கெஜட்டில் வெளியிட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது உச்ச நீதிமன்றத்தின் நான்காவது தலையீடாகும்.

 மத்திய அரசின் செயலைக் கண்டிக்கும் வகையில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 18-6-91 அன்று உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசின் கெஜட்டில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை வெளியிடவோ அல்லது காவிரிப் பள்ளத்தாக்கு அமைப்பு ஏற்படுத்தவோ அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் முன்வராமல், காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவைக் கண்காணிக்கவும், அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆராயவும் அதிகாரமற்ற இரண்டு குழுக்களை அமைத்தார்.

 13-12-1993-இல் தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்துக்கு நடுவர் மன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால், அந்த ஆணையை ஏற்பதற்கு கர்நாடகம் மறுத்தது. மறுபடியும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. உச்ச நீதிமன்றம் உடனே தலையிட்டு ஆவன செய்யுமாறு பிரதமருக்கு ஆணை பிறப்பித்தது. இது உச்ச நீதிமன்றத்தின் 5-வது தலையீடாகும். அப்படியும்கூட உச்ச நீதிமன்றம் 11 டி.எம்.சி. அளிக்கும்படி சொன்னதை 6 டி.எம்.சி.யாக பிரதமர் குறைத்தார்.

    தொடக்கத்திலிருந்தே நடுவர் மன்றம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அமைத்த பிறகும் ஒத்துழையாமைப்போக்கைக் கடைப்பிடித்தும் முட்டுக்கட்டை போட்டுவந்த  கர்நாடகம் நடுவர்மன்றத்தின் தலைவராக இருந்த சித்ததோஷ் முகர்ஜி மீது பொய்யான பழிகளைச் சுமத்தி அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்து அவரது பதவி விலகலுக்குக் காரணமாயிற்று. 5 ஆண்டுகள் விசாரணை நடத்தி 75 சதவீத வேலைகளை முடித்துவிட்ட நிலையில் முகர்ஜி பதவி விலக நேரிட்டது பெரும் பின்னடைவாகும்.

 இதற்குக் காரணம் கர்நாடகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தேவகெüடா தொடுத்த அடாத வழக்காகும். ஆனால், காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்ட தேவகெüடாவைப் பிரதமராக்குவதில் முன்னின்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு ஒருபோதும் அவரை வற்புறுத்தவில்லை. இதன் விளைவாக காவிரிப் பிரச்னையில் நமக்கு எதிரான விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.

 2007-ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர்மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு நமக்கு பல அநீதிகளை இழைத்துவிட்டது. அந்தத் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள கர்நாடகம் மறுத்தது. அதனால், நடுவர்மன்றத் தீர்ப்பு "செயல்படாத தீர்ப்பாக' நீண்டகாலம் கிடப்பில் கிடந்தது. எனவே தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா, நடுவர்மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

 அத்துடன் 2012-ஆம் ஆண்டில் சம்பாப் பயிர் நீர் இல்லாமல் காய்ந்தபோது தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று உடனடியாகச் செயல்பட பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் முன்வரவில்லை.  அதையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டது.

 காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இது உச்ச நீதிமன்றத்தின் 6-வது தலையீடாகும். அதன் பிறகே காவிரி ஆணையத்தைப் பிரதமர் கூட்டி தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. நீரை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார். அதையும் கர்நாடகம் ஏற்க மறுத்துவிட்டது. நீதிமன்றத்தின் ஆணைகளை மீறிவந்த கர்நாடகம் நாட்டின் பிரதமரின் ஆணையையும் துச்சமாக மதித்தது. எனவே உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தமிழக அரசு தட்ட நேர்ந்தது.

 கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு பிரதமரின் ஆணையை ஏற்று உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிடும்படி உத்தரவிட்டது. நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடாததற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இது உச்ச நீதிமன்றத்தின் 7-வது தலையீடாகும்.  கெஜட்டில் நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிட்டபின் காவிரிக் கண்காணிப்புக் குழு மற்றும் காவிரி நதிநீர் ஆணையத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துவிடும். அதன்பின் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டபடி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே செயல்படும்.

 நடுவர்மன்றம் அமைப்பதிலிருந்து, நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவது வரை 7 முறைகளுக்கு மேல் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை தமிழகம் நாடிப்பெற வேண்டியிருந்தது. ஆனாலும், இன்னமும் காவிரிப் பிரச்னையில் நமக்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை.

 அரசியல் சட்டத்தையும், பிரதமரின் அதிகாரத்தையும் மதிக்க மறுத்து கர்நாடகம் தன்னலத்துடன் செயல்படுவதைப் பார்த்து நாளை வேறு சில மாநிலங்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினால் இந்திய ஒன்றியம் கலகலத்துப் போகும்.

  அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்திற்கு நீதி வழங்க பிரதமர்களாக இருந்தவர்கள் தவறிவிட்டார்கள். கர்நாடகத்தில் தங்கள் கட்சியின் நலன் பாதிக்கப்படும் என்பதற்காகவும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் உள்ள தங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தமிழகத்தின் நலன்களைப் பாழாக்க இவர்கள் துணிந்தார்கள்.

 தமிழகமும் இந்தியாவின் ஓர் அங்கம் என்பதை கர்நாடகமும் பிரதமர்களாக இருந்தவர்களும் எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்கள். சொந்த வீட்டிலேயே அன்னியர்கள்போல நடத்தப்படும் வேதனையைத் தமிழகம் இந்திய நாட்டில் அனுபவித்து வருகிறது.

 இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு பஞ்சாப், சிந்து ஆகிய மாநிலங்களுக்கிடையே ஓடிய சிந்து நதிப் பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னையாக மட்டுமே இருந்தது. அதைத் தீர்ப்பதில் ஆங்கிலேயர்கள் அக்கறை காட்டவில்லை. ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக ஆனபோது இரு மாநிலப் பிரச்னை என்ற நிலையிலிருந்து இரண்டு நாடுகளின் பிரச்னையாகிவிட்டது. எனவே உலக வங்கியின் தலையீட்டின் பேரில் சிந்து நதிப்பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டது.

  எதற்காக இந்தப் பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகிறோம் என்றால், ""இரு மாநிலங்களுக்கிடையேயான தீராத பிரச்னையாக இருக்கும் காவிரி நீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னையாக மாறினால்தான் தீர்க்கப்படும்'' என்ற எண்ணம் பரவினால் ஏற்படும் விளைவுகளை பிரதமரும் தேசியக் கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்களும் சிந்திக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT