இலங்கையிலும், இந்தியாவிலும் ஆளும் அரசுகள் மீதான மக்களின் கோபம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
÷இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் அனைவரும் "மாவீரர்கள் தினம்' அனுசரிக்கப் போகிறார்கள் என அந் நாட்டு உளவுத் துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. அதன் விளைவாக, போலீஸôரும், பாதுகாப்புப் படையினரும் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் மாணவர்கள் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீஸôர் ஈவுஇரக்கமின்றி தாக்குதல் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, 11 பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் எந்த வதை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்க பாதுகாப்புப் படையினர் மறுக்கின்றனர்.
இந் நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு "மறுவாழ்வு' அவசியம் என இலங்கை அரசு கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் உடல் மற்றும் உளவியல்ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட உள்ளனர் என்பதை மறைமுகமாக, "மறுவாழ்வு' என்று கூறுகிறது அரசு.
இந் நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியரை விசாரணைக்கு ஆஜராகும்படி, பயங்கரவாத புலனாய்வுத் துறையினர் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். அவர்களிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு, இறுதியாக அவர்கள் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர்.
÷இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அவர்களுக்கு மீண்டும் புலிகள் மீதான பயம் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில், போர் முடிந்து 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும், அங்கு தமிழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் ராணுவ மையமாக்கப்பட்டுவிட்டன. சிவில் நிர்வாகத்தில் ராணுவத்தினரின் தலையீடு மிக அதிகமாகவே உள்ளது.
கோவில்கள் இருந்த இடங்களில் எல்லாம் புத்த விகாரங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
÷ராணுவக் கட்டுப்பாடு நிறைந்த அந் நாட்டில் போராட்டம் நடத்தினால், எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். அப்படியிருந்தும், உயிரை இழக்கவும் துணிந்து போராடுகின்றனர் மாணவர்கள்.
1948-ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, சமஉரிமை கோரி தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கு மாணவர்கள்தான் வலுசேர்த்தனர். அந் நாட்டு அரசின் இரக்கமற்ற அடக்குமுறையால், அகிம்சை வழிப்போராட்டம் பிற்காலத்தில் ஆயுதமேந்திய போராட்டமாக மாற்றம் அடைந்தது. அதே போன்ற சூழல்தான் மீண்டும் அங்கே உருவாகியுள்ளது.
÷அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியவர்களைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால், அவர்கள் பாட்டுக்கு கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்று இருப்பர்; ஆனால், அடக்க முயலும்போதுதான் அந்தப் போராட்டம் வலுவடைகிறது. இதற்குச் சிறந்த உதாரணம் தில்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம்.
÷காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பேரில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய், உரம் போன்றவற்றின் மானியத்தைக் குறைத்து வருகிறது.
இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து, மக்களின் கோபத்துக்கு மத்திய அரசும், அந்த அரசை பாதுகாக்கும் கூட்டணி அரசியல் கட்சிகளும் ஆளாகி வருகின்றன. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் பாலியல் வன்முறைக்கு எதிரான மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
தில்லியில் நடந்த ஒரு பாலியல் வன்முறை சம்பவத்துக்கே இத்தனை பெரிய போராட்டம் நடந்தது என்றால், இலங்கையில் அன்றாடம் நடக்கும் பாலியல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் எத்தகைய போராட்டம் நடைபெற்றிருக்க வேண்டும்?
மாணவர்கள் என்ற உணர்வில் இந்தப் போராட்டத்துக்கு சிங்கள மாணவர்கள் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்தப் போராட்டம் ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டமாக மாறாமல் இருப்பதற்காக, கைது செய்யப்பட்ட தமிழ் மாணவர்கள் அனைவரும் "விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்' என சித்தரிக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் பணியை இலங்கை ராணுவத்தினர் செய்து வருகின்றனர். இதனால் போராட்டங்களை முன்னெடுக்க மாணவச் சமூகம் தயங்கும் என நினைக்கின்றனர்.
÷தில்லியில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் தாக்கியதால் ஒரு காவலர் இறந்தார் என தகவல் பரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவலர் மரணத்துக்குக் காரணமானவர்கள் எனக் கூறி, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் போராட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் பயப்படுவர் என்பது மத்திய அரசின் கணிப்பு.
÷இலங்கையாகட்டும், இந்தியாவாகட்டும் மாணவர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்று ஆளும் அரசுகள் நினைக்கின்றன. கொடுங்கோலன் ஆட்சி செய்யும் நாட்டைக் காட்டிலும், "கடும்புலி வாழுங் காடு நன்றே' (நறுந்தொகை) என்கிற நிலைக்கு மக்கள் மெல்ல மெல்ல தள்ளப்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.