ஓரு நாட்டில் மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட, பொதுச் சேவை என்பது அரசாங்க அதிகாரிகளின் செயல்பாடுகளாக மட்டும் இருக்கக் கூடாது என்பது கோட்பாடாகும்.
பொதுச் சேவை என்பது, பொதுமக்களின் பங்களிப்போடு செய்யப்படுவதாகும். எனவே, ஒரு ஜனநாயக நாட்டில் பொதுச் சேவை என்பது பொதுமக்கள் சேவையாக நடைபெற வேண்டும். அப்படி இல்லாமல் ஓர் அரசாங்கம் எல்லை இல்லா அளவுக்கு பெருத்து மிகச் சாதாரணமாக மக்கள் செய்யும் பணிகளைச் செய்யும் அளவுக்கு வந்துவிட்டால், பெரும்பாலும் மக்கள் ஓரத்துக்குச் சென்று விடுவார்கள் அல்லது ஒதுங்கி விடுவார்கள்.
மக்கள் பங்கேற்பு இல்லாத பொதுச் சேவை என்பது, தரம் குறைந்த பொதுச் சேவை மட்டுமல்ல, பொது மக்களின் தேவையின் அடிப்படையிலான பொதுச் சேவையாக இருக்க முடியாது. எனவேதான், நல்ல அரசாங்கம் என்பது அமைப்பின் அளவில் சிறியதாகவே இருக்க வேண்டும் என்பதுதான் கோட்பாடு.
பெரும்பாலான பொது வேலைகளை மக்கள் செயல்பாடுகளுக்காக விட்டுவிட வேண்டும். பல்வேறு பணிகளில் மக்கள் பங்கேற்க வாய்ப்புகள் வழங்க வேண்டும். மக்கள் பங்கேற்பு அதிகரிக்க, அதிகரிக்க மக்களாட்சியின் செயல்திறன் கூடும். மக்களின் விழிப்புணர்வு மற்றும் அரசாங்க செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளும் திறன் கூடிக் கொண்டே இருக்கும்.
எனவே, ஓர் அரசாங்கம் தான் பெருக்காமல் மக்களின் செயல்பாடுகளுக்கு சுதந்திரமான அமைப்புகளை உருவாக்கி, அந்த அமைப்புகள் சுதந்திரமாகவும், திறமையாகவும் செயல்பட வழிவகைகளை உருவாக்கித் தந்துவிட்டு அவற்றை ஒருங்கிணைப்புச் செய்ய வேண்டுமேயன்றி, அரசாங்கமே அந்தப் பணிகளை அரசு அலுவலர்களை வைத்து செய்யக் கூடாது.
இந்தச் சூழல் நாட்டுக்கும் நல்லதல்ல. மக்களுக்கும் நல்லதல்ல. அரசாங்கத்துக்கும் நல்லதல்ல. பொதுமக்கள் தற்சார்பு நிலையில் வாழ வேண்டும். பொதுமக்கள் தங்கள் வாழ்க்கை தங்கள் கையில் இருக்கிறது என்று எண்ண வேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் இல்லாத சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்கு ஒரு நாட்டில் வருமேயானால் அது அந்த நாட்டுக்கு நல்லதல்ல. ஓர் அரசாங்கம் மக்களைத் தூக்கிச் சுமக்கும் ஒரு சுமைதாங்கியாக இருக்க முடியாது. அதேபோல் மக்கள் பெருத்து கனத்துப்போன அரசாங்கத்தைத் தூக்கிச் சுமக்கவும் கூடாது.
ஒட்டுமொத்த வாழ்க்கையும் அரசு கையில் இருந்தால் மக்கள் அரசையும் மற்றவரையும் சார்ந்து வாழும் மனோபாவம் பெற்றுவிடுவர். இன்றுள்ள சூழலில் ஏறத்தாழ 60 சதவிகித மக்கள் தங்களின் தலைவிதி அரசின் கைகளில் உள்ளது என்ற மனோபாவத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
அரசை தன் வாழ்வுக்கு மூலமாக நம்பி வாழும் மக்கள் எண்ணிக்கை கூடக்கூட அந்த நாட்டில் முன்னேற்றத்துக்குப் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். ஆக, அந்த நாட்டில் ஒட்டு மொத்தமாக பயனாளிக் கூட்டம் அல்லது மனுதாரர் கூட்டம் அதிகமாக இருக்கும். பயனாளிக் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருக்கும் நாட்டில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் கிடைக்கும் வளமும் வருமானமும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
புதிய உலகச் சூழலில் அரசாங்கம் என்பது வலுப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத் துறைகளின் எண்ணிக்கை மற்றும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படல் வேண்டும். ஆனால், இதற்கு நேர்மாறாக இன்றைய அரசாங்கம் வலுவிழந்து வருகின்றது. ஆனால், அரசாங்கத் துறைகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன. அதேநேரத்தில் அரசுத்துறைகள் தன் பொதுச் சேவையை மக்கள்தான் எஜமானர்கள் என நினைத்துத் தரமான சேவையைத் தர முடியவில்லை. அது மட்டுமல்லாது அந்தத் தரமற்ற சேவையைக்கூட பெறுவதற்கு லஞ்சம் தர வேண்டிய சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.
இதன் விளைவு, பொது மக்களுக்கு அரசின் மேல் இருக்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்துவிட்டது. அரசாங்கத்தின் மேல் மக்களுக்குள்ள மரியாதை குறைந்து வருகிறது. அத்துடன் நம் அரசுத்துறை அலுவலர்கள் ஒரு தரமான சேவையைத் தரும் அளவுக்கு தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள இயலவில்லை. அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளவும் அவர்கள் முயலவில்லை.
ஒருவேளை நம் அரசுத்துறை நிறுவனங்கள் தரமான சேவையைத் தரவும், லஞ்ச லாவண்யம் இல்லாத சேவையைத் தரவும் தகுதி படைத்திருந்தால், அவர்கள் சேவையின் அடிப்படையில் அரசுக்கு ஒரு நல்ல பெயரும் ஆதரவும் கிடைப்பதன் மூலம் ஒட்டுமொத்த அமைப்பின் மேல் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். ஆனால், அடிப்படையில் இப்படிப்பட்ட அரசாங்கங்கள் மக்களுக்குச் சேவை செய்கிறபோது, மக்களின் பங்கேற்பை பெருமளவுக்கு ஆளுகையிலும் முன்னேற்றச் செயல்பாடுகளிலும் உறுதிசெய்ய இயலாது. எனவே, மக்கள் பங்கேற்பு குறைந்த ஆளுகை என்பது மக்களாட்சியை வலுப்படுத்த இயலாத ஒன்றாகும்.
இதுவரை பயனாளி மனோபாவத்துடன் வாழ்க்கை நடத்திய மக்களுக்கு சுயமரியாதையை உறுதி செய்வதற்காகத்தான் எல்லாச் சலுகைகளையும் மற்றும் சேவைகளையும் உரிமைகளாக மாற்றிவிட்டனர். அது உணவாக இருந்தாலும் சரி, செய்தியாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்பாக இருந்தாலும் சரி, கல்வியாக இருந்தாலும் சரி, உடல் நலமாக இருந்தாலும் சரி இவை அனைத்துமே மக்கள் உரிமை எனப் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது. இருந்தபோதிலும் மக்கள் இந்த உரிமைகளை எப்படிப் பெறுவது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பொது மக்களுக்கு இந்த உரிமைகளை எப்படிப் பெற வேண்டும் என்பதும், உள்ளாட்சியைத் தாங்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெரிந்துவிட்டால் மிகப் பெரிய மாற்றங்கள் சமூகத்தில் நடந்துவிடும்.
பொதுவாக, இன்றைய சூழலில் அரசாங்கங்கள், இரண்டு கூறுகளில் மிக முக்கியமான குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று, மக்களாட்சியின் மாண்பைக் கடைப்பிடிக்கக்கூடிய ஆளுகை அமைப்புகளாக அரசுத்துறைகள் விளங்க வேண்டும். இரண்டாவதாக, அரசுத்துறைகளில் செயல்படுகிற அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் தன் செயல்பாட்டுத் திறனில் உச்சக் கட்டத்தில் இருந்து பணியாற்ற வேண்டும்.
ஓர் அரசாங்கம் செலவு செய்கிற தொகையை வைத்து, அந்த அரசு நல்ல அரசா? மோசமான அரசா? என்று தீர்மானிக்கக் கூடாது. அந்தச் செயல்பாடுகளின் வெளிப்பாடு அல்லது தாக்கத்தை வைத்துத்தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த இரண்டையுமே இன்றைக்கு இருக்கக்கூடிய அதிகார வர்க்கம் செய்வது கிடையாது. ஏன் என்றால், இந்த இரண்டுமே நடந்தால் ஏழைகளை அடிமைப்படுத்த முடியாது. அவர்கள் அதிகாரம் பெற்றுவிட்டால் இன்றைய அதிகார வர்க்கம் எஜமானனாக இருக்க முடியாது. மாறாக, மக்கள் பணி செய்யும் பணியாளாகத்தான் இருக்க முடியும்.
ஓர் அரசாங்கம் தன்னை ஜனநாயகப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், தன் செயல்பாடுகளில் தன் திறனை வளர்த்துக் கொள்ளவில்லை என்றாலும் பாதிக்கப்போவது யார் என்றால் அந்த நாட்டில் வாழும் ஏழைகள்தான். அந்த நாட்டில் வாழும் ஏழைகள் முன்னேற அரசாங்கம் முடிவெடுக்கும் என்று ஏழைகள் இருந்தால் மக்களாட்சியில் நடைபெறுகிற அரசாங்கங்கள் புதிய புதிய யுத்திகளைக் கண்டுபிடித்து மக்களைச் சமாதானப்படுத்தியும், நம்பிக்கையூட்டியும், உத்தரவாதங்களைத் தந்தும் காலத்தைக் கடத்துமே தவிர, அடிப்படை மாற்றத்துக்கு வித்திடாது என்பதுதான் நாம் பார்த்த வளர்ச்சி வரலாறு.
இந்த யதார்த்த உண்மையைப் புரிந்துகொண்டால் ஏழைகளுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும், பெண்களுக்காகவும், ஆதிவாசிகளுக்காகவும் வேலை செய்வோர் அனைவரும் மிகப்பெரிய மக்கள் இயக்கம் கட்டுவார்கள். இதற்கு ஓர் அற்புதமான வாய்ப்பை காலச்சூழலால் மக்களாட்சியில் செயல்படுகின்ற அரசாங்கங்களே உருவாக்கிவிட்டன. அதுதான் அதிகாரப்பரவல் என்ற புதிய வாய்ப்பு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களைத் திரட்டி பெருமளவில் ஒதுக்கப்பட்டவர்களை ஆளுகையிலும் வளர்ச்சிச் செயல்பாடுகளிலும் பங்கெடுக்க வைப்பதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க நாம் முயல வேண்டும்.
ஏனென்றால், இந்த புதிய வாய்ப்பையும் இன்று யார் பயன்படுத்துகின்றார்கள் என்றால் வசதியையும் வாய்ப்பையும் பெற்று இதுவரை அதிகாரத்தை அனுபவித்து வந்தவர்களேதான் பயன்படுத்துகின்றனர். எனவே, உள்ளாட்சிக்குள் ஒதுக்கப்பட்டவர்களை நுழைப்பதன் மூலம், அவர்களைத் தகுதிப்படுத்துவதன் மூலம்தான் இன்றைய ஆட்சி முறையில், ஆளுகையில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். இதுதான் நமது இன்றைய தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.