கட்டுரைகள்

உத்தம புத்திரர்

கடும் தவத்தால் பெற்ற பிள்ளை, என்ன தேஜஸ், என்ன அறிவு, ஒளிக்கீற்று பாய்வதைப் பார்த்தேன். என்னோடு சமுதாயப் பணிக்கு சீடன் பிறந்தான் என்றுணர்ந்தேன்.  பாட்டனார் மாதிரி சைவத்தை விரும்புகிறானே, அவர்போல் பந்தங

ஆர். நட​ராஜ்

கடும் தவத்தால் பெற்ற பிள்ளை, என்ன தேஜஸ், என்ன அறிவு, ஒளிக்கீற்று பாய்வதைப் பார்த்தேன். என்னோடு சமுதாயப் பணிக்கு சீடன் பிறந்தான் என்றுணர்ந்தேன்.  பாட்டனார் மாதிரி சைவத்தை விரும்புகிறானே, அவர்போல் பந்தங்களைத் துறப்பானோ, சாஷாத் சிவ ரூபம், சிவ அவதாரம். இந்த விமர்சனங்களுக்குப் பாத்திரமானவர் வேறு யாருமில்லை, வீரேஷ்வர் என்று பெற்றோர்களால் பெயர் சூட்டப்பட்டு இந்திய மக்களுக்கு ஒளிவிளக்காக வளர்ந்த சுவாமி விவேகானந்தர்தான்.

 பெற்றோரின் பத்து குழந்தைகளில் ஆறாவது குழந்தை விவேகானந்தர். 40 வயது எய்துவதற்கு முன்பே அவரை இறைவன் அழைத்துக் கொண்டான்.  அதற்குள்தான்  எத்தகைய இமாலய சாதனை! ஆதிசங்கரருக்குப் பிறகு இந்தியாவை அகண்ட பாரதமாகப் பார்த்த மகா புருஷர் சுவாமி விவேகானந்தர்.

 அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரசித்தி பெற்ற ரோமேன் ரோலாண்ட், தீ அவரது பூத உடலை அழித்தாலும், அந்த புனித அஸ்தியிலிருந்து இந்தியாவின் புதிய ஆன்மா புத்துயிர் பெற்றிருக்கிறது. இந்தியாவின் தொன்றுதொட்டு வரும் கலாசாரம், ஒருமைப்பாட்டின் பற்றுதல், பரிமாண வளர்ச்சி பெற்று மனித சமுதாயத்துக்கு வழிகாட்டப் பிறந்திருக்கிறது என்று உள்ளம் நெகிழக் கூறியுள்ளார்.  

 விவேகானந்தர் அமெரிக்கா சென்று சிகாகோவில் நடந்த அனைத்து சமய மாநாட்டில் கலந்துகொண்டு அபாரமான சொற்பொழிவாற்றினார் என்பதை நாம் அறிவோம். அந்தச்  சொற்பொழிவில் எல்லோரையும் கவர்ந்தது, அவர் எல்லோரையும் திரும்பத் திரும்ப  "சகோதர சகோதரிகளே!' என்று அன்போடு குறிப்பிட்டு தெளிவாகவும் நேர்மையாகவும் கருத்துகளை வைத்ததுதான் காரணம்.

 உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஒன்று. அவை யாவும் பரம்பொருளின் அம்சம் என்ற வகையில் எல்லோரையும் ஒன்றாகப் பாவித்து நேசிக்கும் கொள்கையைப் பின்பற்றியதால் அவரது பேச்சில் உண்மை இருந்தது. எல்லோரும் தன்னிச்சையாக கவரப்பட்டனர்.  அவர் எழுதிய ஒரு கடிதத்தை சிறப்பாக மொழிபெயர்த்த பாரதியார், 1920-ல் சுதேசமித்திரன் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார். முக்தி அல்லது விடுதலையே என் மதம்.  இதைக் கட்டுப்படுத்த முயல்வது யாதாயினும் நான் அதை எதிர்ப்பேன்.

 பண்பாடுதான் நாட்டின் வலிமை, பொருளாதாரச் செழிப்பு. நாட்டின் பரப்பளவு வலிமையை நிர்ணயிக்காது என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்தியாவின் வலிமையை உணர்ந்தவர். அந்த வலிமையின் பெருமையை உணராதவர்களால்தான் நாடு வலுவிழந்து வருகிறது என்பதை தனது பேச்சுகளிலும் எழுத்துகளிலும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

 பண்பாடு என்பது மனித நேயமும் நல்லியல்புகளும் வெளிப்படுத்தும் மனிதப்பண்பாடு மட்டுமே. இனம், மொழி, மதம், தேசம் எல்லாம் வெறும் பயன்பாடுகள். அவை மாற்றத்துக்குரியவை. உலகம் தோன்றியது முதல் பல நாடுகள், சமுதாயங்கள் தோன்றி மறைந்துள்ளன. மனிதப் பண்பாடு என்றும் நிலைத்து நிற்கும்.

 கல்வி ஒன்றுதான், பண்பாடு வளர்வதற்கு அடித்தளமாக அமைகிறது. வகுப்பறையில் கற்பது மட்டும் கல்வி அல்ல; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நாம் கற்பவை அல்லது மாணவர்களுக்கு அளிக்கப்படுவது வெறும் தகவல்கள். புரியாத தகவல்களைப் புரிய வைக்கிறார்கள்.

 சமுதாயத்திலிருந்து பெறக்கூடிய அரிய விஷயங்கள், இயற்கை கற்றுக் கொடுப்பவை, நற்பண்பாளர்கள் மூலம் கற்பவை, முடிவாக அனுபவம் கொடுக்கும் பாடம் இவை எல்லாம் நற்பண்புகளை வளர்க்கும் கல்விக்குச் சமானம்.  

 ஒரு விதை மரமாவதுபோல, பண்பாடு வளருகிறது. விதை ஒன்றுதான். அந்த நல்ல விதை  பல விதைகள் அடங்கிய நற்கனிகளைக் கொடுக்கிறது. தேக்கு மரம் போல் உரம் மேவிய மனிதன் என்று நற்பண்புகள் உடைய மனிதருக்கு உவமை காட்டப்படுகிறது. தேய்க்கத் தேய்க்க வாசனை தருகிறது சந்தனக் கட்டை. வாசனைப் பூவை மிதித்தாலும் மணம் வீசும்.  பண்பாளர்களின் குணம்தான் சமுதாயத்தின் வலிமை.

 ரவீந்திரநாத் தாகூர் கூறுவார்: உலகில் தீர்க்கமான அறிவாளிகள் இருக்கிறார்கள்; ஆனால், தீர்க்கமான மனிதர்கள் இல்லை. எவ்வளவு உண்மை.

 அச்சம் தவிர், ஆண்மை தவறேல், எண்ணுவது உயர்வு, கற்றது ஒழுகு என்ற பாரதியாரின் ஒழுக்க நெறிகளே பண்பாடு. உண்மையான சுதந்திரம் தைரியமான வாழ்க்கை. தைரியத்தை கற்பிப்பதுதான் நேர்மையான கல்வி. நமக்கு எது அச்சம் தரும் என்று நினைக்கிறோமோ அதை முதலில் செய்வதே விவேகம். இந்தப் பயம், அச்சத்தினால்தான் எவ்வளவோ இன்னல்களையும், அநீதிகளையும் சகித்துக் கொண்டிருக்கிறோம். உலகம் போற்றும் சிந்தனையாளர் ஜித்து கிருஷ்ணமூர்த்தி, வாழ்க்கை பயம் சூழ்ந்ததாகக் கருதும் மக்கள் நிலையை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

    குழந்தைப் பருவத்திலிருந்து பயத்தை நாமே தெரிந்தோ தெரியாமலோ வளர்க்கிறோம். வழிபாட்டிலும் பயபக்தியோடு வணங்குவதைப் பெருமையாகக் கொள்கிறோம். பள்ளிக்கூட வகுப்புகளில் பயம், ஆசிரியரைக் கண்டால் பயம், தேர்வை எதிர்கொள்வதற்குப் பயம், முழுமையாகப் படிக்கவில்லையே என்று பயம்,  போலீûஸப் பார்த்தால் பயம் என்று அச்ச உணர்வு மேலோங்குகிறது.

 நற்கல்வியின் முதல் குறிக்கோள் இந்த அச்சத்தைப் போக்குவதுதான். குழந்தைகளிடம் அச்சத்தை வளர்த்தால் நாளை கோழைகளாக, கேள்வி கேட்கும் திறனற்றவர்களாக உருவாகுவது சமுதாயத்துக்கு நல்லதல்ல. அது பண்பாடு சீர்குலைவுக்கு வழி வகுக்கும்.

 அபாயமற்ற வாழ்க்கை வாழ்வதே அபாயம் என்கிறார் சிந்தனையாளர் எமர்சன். தைரியம் வளர்ந்தால்தான் பண்பாடு சீரடையும் என்பதை முழுமையாக உணர்ந்து இளைஞர்களுக்கு உத்வேகத்தைப் பரவச் செய்து எழுச்சி நாயகர்களாக வளர வேண்டும் என்று பாடுபட்டார் சுவாமி விவேகானந்தர். அச்சமே நரகம். அச்சம், சினம் இல்லா வாழ்க்கையால் ஆயுள் நீடிக்கும்.  

 சுதந்திரப் போராட்டத்தில் தடியடியால் அடிபட்ட காயத்தோடு சிறையில்  அடைக்கப்பட்டார் பண்டிட் நேரு. சிறையில் அவரைக் காண வந்தார் தாய் சொரூபராணி. அவரிடம், " இது  காயமல்ல, எனக்கு அளிக்கப்பட்ட விருது' என்றார் நேரு.

 1970-ம் ஆண்டு நயினி சிறையில் இருந்த நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில், "தைரியமாக இரு', 'எதற்கும் பயப்படாதே', "எதைச் செய்தாலும் வெளிப்படையாக அஞ்சாமல் செய்' என்று குறிப்பிடுகிறார்.  ரகசியமாகவோ பயந்து கொண்டே செய்யும் செய்கைகள் நியாயமற்றவை, நேர்மையற்றவை என்பது எவ்வளவு உண்மை.  கூடா நட்பைப் பற்றி சிலாகிக்கும் சிலர் இதைப் பின்பற்றியிருந்தால் 2ஜி ஊழல் விசுவரூபம் எடுத்திருக்காதே?

 நமது பண்பாட்டில் பெருமைகொள்ள வேண்டியவை பல இருக்கின்றன. விஞ்ஞானத்துக்கு, நாம் உலகத்துக்கே முன்னோடியாக இருந்தோம். கணிதத்தில் பூஜ்யம் என்பதைக் கணித்ததே இந்தியர்கள்தான்.  அராபிய மொழி வலமிருந்து இடம் எழுதப்படும். ஆனால், அரேபியர்கள் கணக்குகளை இடத்திலிருந்து வலமாக குறிக்கின்றனர். இடத்திலிருந்து வலம் எழுதும் முறையுடைய இந்தியர்களிடமிருந்துதான் எண்கள் கணிதம் அரேபியாவுக்குச் சென்றது என்பது தெளிவு. விண்வெளியைப் பற்றியும், பிரபஞ்சத்தையும் முற்றும் அறிந்து தெளிவுபடுத்தியவர் ஆரியபட்டர். இன்றும் படிக்கப்படாத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகள் விண்வெளி ஆராய்ச்சி பற்றியும், விஞ்ஞானத்தைப் பற்றியும் இருக்கின்றன என்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

 பாருக்குள்ளே நல்ல நாடாக இருந்த பாரத நாடு வறுமை, போராட்டம், சமூக அநீதிகள் என்ற பிரச்னைகளைச் சந்திக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாம்தான். பண்பாட்டை மறந்து பயனற்ற பயன்பாடுகளில் மனதைச் செலுத்துகிறோம். வேலை செய்யாமல் இருப்பதை இலவசங்கள் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.

 சில நூற்றாண்டுகளுக்கு முன் உலக பொருளாதார உற்பத்திப் பெருக்கத்தில் சீனாவோடு நமது நாட்டின் பங்களிப்பு 60 சதவிகிதமாக இருந்தது, மூன்று சதவிகிதமாகத் தேங்கி இப்போது 8 சதவிகிதம் எட்டுவதைப் பெருமையாகப் பேசுகிறோம். அதிலும் உற்பத்தியின் பயனளிப்பு எல்லா சமூகத்தினருக்கும் சென்று அடையவில்லை. பணக்காரர்கள் மட்டும் கொழுத்திருக்கிறார்கள். 79 சதவிகிதம் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதாரம், மருத்துவ வசதி, தரமான கல்வி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு இல்லை.  

 குழந்தைகள் மேம்பாட்டு சேவை மையம் அளித்த ஹங்காமா என்ற ஆய்வு அறிக்கையில்,  ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 16 கோடி (மொத்த ஜனத் தொகையில் 15 சதவிகிதம்), இவர்களில் 42 சதவிகித குழந்தைகளின் உடல் எடை குறைவு. அவர்களுக்குப் போதிய போஷாக்கு கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சியூட்டும்  தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள்தான் நாளைய விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள், போர் வீரர்கள்.

 இந்தப் பிரச்னைகளுக்கு ஒருமித்த தீர்வு காண விழையாமல் விதண்டாவாதத்தில் நேரம் விரயமாகிறது. அரசுத் துறையில் இருப்பவர் ஒவ்வொருவரும் பொறுப்போடு செயல்பட்டால்தான் திட்டங்கள் நிறைவேறும்.  

 ஆட்சிப் பொறுப்பு என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம்.  மக்களாட்சி என்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு மட்டுமல்ல, எல்லா தரப்பட்ட மக்களின் பங்களிப்பு இருந்தால்தான் முழுமையடையும். பல தொழில்களிலும் அமைப்புகளிலும் உள்ளவர் சிறப்பாகச் செயல்பட்டால்தான் முன்னேற்றம் ஏற்படும்.

 நல்ல திட்டங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிய வரவேற்பு இருக்க வேண்டும். அதற்கு உடனடியாகச் செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அதைவிட்டு சில அரசு அதிகாரிகள் யோசனை கூறுபவருக்கு என்ன உள்நோக்கம் என்ற சந்தேகத்தோடு பார்ப்பது வருத்தத்துக்குரியது. சில அதிகாரிகள் இதனால் தனக்கு என்ன லாபம் என்று கணக்கிடுவதும் கண்டிக்கத்தக்கது.

 விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களின் 150-வது ஜயந்தியை அனுசரிக்கும் இவ்வேளையில் அவர்களது கோட்பாடுகளைப் பின்பற்றுவதை தலையாய பொறுப்பாகக் கொள்ள வேண்டும். வழிகாட்டி தலைவர்களின் அடையாள நாள்கள் காலண்டரிலேயே தங்கி விடுகின்றன. அவர்கள் விட்டுச்சென்ற பாதையை மறந்து விடுகிறோம். தாகூர் இயற்கையை நேசித்தவர். ஆனால், நாம் இயற்கையோடு சண்டையிடுகிறோம்; மரங்களை வெட்டுவதன் மூலம்.

 கல்வி நம்மில் உள்ள முழுமையின் பிரதிபலிப்பு. மதம் நம்மில் உள்ள புனிதத்துவத்தின் பிரதிபலிப்பு. ஜாதி மத பேதமற்று தனிமனிதனின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைப்பதே நமது கடமையாகக் கொள்ள வேண்டும் என்றார் விவேகானந்தர்.

  எல்லா இனங்களிலும் உள்ள ஏழைகளே தன் இஷ்ட தெய்வம். அவர்களுக்குச் சேவை செய்து உய்விப்பதற்கான பேறு பெறுவேனாக என்றும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்றும் வாழ்ந்து காட்டியவர் விவேகானந்தர். அத்தகைய உன்னத நோக்கங்களைச் செயலாக்குவதுதான் இந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT