பாரத மணித்திருநாட்டின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான மொழிகள் பேசப்படுகின்றன. சுமார் 200-க்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் உள்ளன. தேசிய மொழிகளாக 18 மொழிகள் உள்ளன.
நாடு முழுமைக்குமான இணைப்பு மொழியாக ஆங்கிலமும், இந்தியும் நடைமுறையில் உள்ளது. குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட அண்ணல் காந்தியடிகள் இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவில் தமிழகம் தவிர, பெரும்பான்மையான மாநிலங்களில் மும்மொழிக்கல்விக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். அதாவது, தாய்மொழியை ஒரு பாடமாகவும், ஆங்கிலத்தை ஒரு பாடமாகவும், இந்தியை ஒரு பாடமாகவும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
தமிழகத்தில் மட்டும் இரு மொழிக்கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தி பேசத் தெரியாத மாநில மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வரை அந்த மாநிலத்தின் மீது மும்மொழிக் கொள்கையைத் திணிக்க மாட்டோம் என்று பாரதப் பிரதமர் நேருவின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு திராவிட இயக்கங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கைவிட்ட காலமும் உண்டு. ஆனாலும் மத்திய அரசு மூலம் நிர்வாகம், கல்வி ஆகியவற்றில் இந்தியை தமிழகத்தில் அமல்படுத்தும்பொழுது, முழுவீச்சுடன் திராவிட இயக்கங்கள் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர் என்பது வரலாறு.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது திராவிட இயக்கங்களால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டுவிட்டது. சுதந்திரம் அடைந்த பிறகும் மத்திய காங்கிரஸ் அரசாங்கத்துக்கு எதிராக பல நேரங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் திராவிட இயக்கங்கள் நடத்தி உள்ளன. ஈ.வெ.ரா., பாரதிதாசன், அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் இந்தி எதிர்ப்பு உணர்வை தமிழகத்தில் வளர்த்தெடுத்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு என்கிற நிலையில் இருந்த போராட்ட உணர்வுகள் இந்தி மொழி எதிர்ப்பு என்கிற நிலைமைக்கு மாறியது. "ஓடிவந்த இந்திப்பெண்ணே, நீ தேடி வந்த இடம் இதுவல்ல' என்றும், இந்தி மந்தி என்றும், இந்தி மொழியை குதிரைக்காரன் பாஷை என்றும் ஏளனம் செய்து இந்தி மொழிக்கெதிராகப் பரப்பப்பட்ட வெறுப்புணர்வுகள் ஏராளம்.
1965 வாக்கில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து ராணுவம் வந்து கலவரத்தை அடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் என்றும் இரு மொழிக்கல்விக் கொள்கை என்கிற நிலையே இருந்து வருகிறது. நமது அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றில் மும்மொழிக் கொள்கையே நடைமுறையில் உள்ளது.
கேரளத்தில் மாணவர்கள் இந்தி படித்ததன் காரணமாக மலையாள மொழி அழிந்து போய்விடவில்லை. ஆந்திரத்தில் இந்தி படித்ததன் காரணமாக தெலுங்கு மொழி அழிந்து போய்விடவில்லை.
கர்நாடகத்தில் இந்தி படித்ததன் காரணமாக கன்னட மொழி அழிந்து போய்விடவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்தி மொழியைப் படித்தால் தமிழ் மொழி அழிந்து போய்விடும் என்கிற தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சார்ந்தவர்கள் தமிழக எல்லையைவிட்டு வெளியே சென்றால், இந்தி தெரியாத காரணத்தால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.
மத்திய அரசுப்பணி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், தேசிய வங்கிப்பணி தேர்வுகள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கும் தமிழக மாணவர்கள் வெற்றிபெற பெருமளவு சிரமங்களைச் சந்திக்கிறார்கள்.
வடமாநிலங்களோடு தொழில் தொடர்புடைய தமிழர்கள், பணிநிமித்தமாக வடமாநிலங்களுக்குச் செல்லும் தமிழர்கள், அரசியல் பணிகளுக்காக வடமாநிலங்களுக்கு செல்லும் தமிழர்கள், விஜயவாடா தாண்டிவிட்டால் மொழிக்குருடர்களாக மாற வேண்டிய சூழலே உள்ளது.
இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்துக்கு பல நேரங்களில் வருவதே இல்லை. இந்தி படிக்காததன் காரணமாக அழகிரி தனது அமைச்சர் பணியைச் செய்வதற்கு மிகுந்த சிரமப்படுகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தமிழகத்தில் இருமொழிகல்விக் கொள்கை காரணமாக நவோதயா பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய பல நன்மைகள் கிடைக்கவில்லை.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய பல தலைவர்களின் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் இந்தியைப் படித்துள்ளனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் பலரும் இந்தி படித்துள்ளனர். மத்திய அமைச்சராக தயாநிதிமாறன் நியமிக்கப்பட்டதற்கு அவருக்கு இந்தி தெரியும் என்பது கூடுதல் தகுதியாக கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்படுவதற்கு அவர் இந்தி படித்துள்ளார் என்பதும் ஒரு தகுதியாகக் கருதப்பட்டது.
ஆனால், ஏழை எளிய தமிழர்கள் இந்தி படிக்க இயலாத சூழலே இருமொழிக்கல்விக் கொள்கை காரணமாக இப்போது தமிழகத்தில் நிலவுகிறது. இந்தி படிக்க விரும்பும் ஏழை மாணவர்கள் அரசு கல்வி நிலையங்களில் இந்தி படிக்க முடியாது.
அரபு, உருது ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் இஸ்லாமிய மாணவர்களுக்கு அரசுப்பள்ளிகளிலேயே இவற்றை கற்றுக்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. ஆனால், இந்தி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு இந்தி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்வதில்லை.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதில் தமிழர் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. தாய்மொழி வழிக்கல்வியின் உயர்வு அனைவரும் உணர்ந்தது. ஆனால், இன்னொரு மொழியைப் படிக்கக்கூடாது என்கிற நிலையைத் தோற்றுவிப்பது முட்டாள்தனமானதாகும். 6,000 மைலுக்கு அப்பால் இருந்து வந்த ஆங்கிலத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் நம்மவர்கள் 600 மைலுக்கு அப்பால் இருந்து வந்த இந்தியை மட்டும் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆங்கிலம் செய்த தீங்கைவிடவா இந்தி மொழி செய்து விட்டது?
இந்நிலை மாற வேண்டும். தமிழகத்தில் இனிமேலாவது மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த வேண்டும். ஆங்கிலம் உலகைக் காட்டும் கண்ணாடி என்றால், இந்தி இந்தியாவை காட்டும் கண்ணாடி ஆகும்.
இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தி படிக்க விரும்புகிற தமிழ் மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? புதிய புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் தமிழர்களின் அறிவு பெருகும். தமிழர்களின் அருமை பெருமைகளை நாம் கற்றுக்கொள்ளும் புதிய மொழிகளின் வழியாக அம்மொழி பேசுகிற மக்களுக்குக் கொண்டு செல்ல முடியும்.
ஒவ்வோராண்டும் திராவிட இயக்கங்களாகிய திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பல்வேறு காலகட்டங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள், உயிரிழந்தோர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்படுவதோடு அவர்களுக்கு தியாகிபென்ஷனும் வழங்கப்படுகிறது.
உண்மையில் மொழிப்போர் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ்மொழியைத் தற்காத்துக்கொள்வதும் வளர்ப்பதுமே உண்மையான மொழிப்போராகும்.
மொழிப்போர் தியாகிகளின் தமிழ்உணர்வை நாம் மதிக்கிறோம். ஆனால், அதேநேரத்தில் தமிழகத்தில் இந்தி மொழியைக் கற்றுக்கொள்வதற்குள்ள தடையும் நீங்கிட வேண்டும். அப்போதுதான், எட்டுத்திக்கும் பயணம் செய்து தமிழர்கள் சாதனை படைக்க முடியும். இதைத்தான் பாரதி, "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்' என்று பாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.